என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வடமாநில கும்பல் 4 பேர் கைது
    • ரூ.52 ஆயிரம் பறிமுதல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் காலி இடங்களில் கூடாரம் அமைந்து பிளாஸ்டிக் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு பேன்சி ஸ்டோர்களுக்கும் சென்று இந்த பிளாஸ்டிக் பூக்களை மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

    அந்த நபர்களை சேர்ந்த மைசூர் மாண்டியா பகுதியை சேர்ந்த ஆர்.ஜே.ராகுல் (வயது 24), சோயங்கி பவன் (22), அவரது தம்பி சோயங்கி ராகுல் (20), பிரபு (34) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டராம்பட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் பூங்காவனம் என்பவரின் கடைக்கு சென்று உள்ளனர்.

    அப்போது அவர்கள் தங்களுக்கு கூடாரம் அமைக்கும் போது தங்க புதையலாக குண்டு மணி மாலைகள் கிடைத்தது உள்ளது. சொந்த ஊருக்கு விரைவில் செல்ல உள்ளதால் நல்ல விலைக்கு விற்றுவிட்டு சென்று விடலாம் என்று பூங்காவனத்திடம் அவர்கள் தொிவித்து உள்ளனர்.

    மேலும் அவர்கள் வைத்து இருந்த ஒரு மாலையில் இருந்து 2 குண்டு மணிகளை பூங்காவனம் கண் எதிரிலேயே பிய்த்து அவரிடம் வழங்கி உள்ளனர். அந்த 2 குண்டு மணிகளை அவர் சோதித்து பார்த்ததில் அது தங்கமாக இருந்து உள்ளது. இதையடுத்து பூங்காவனம் அவர்களிடம் உள்ள குண்டு மணி மாலைகளுக்கு விலை பேசியுள்ளார். பேரம் பேசப்பட்டு ரூ.2 லட்சத்தில் முடிந்தது.

    இதையடுத்து அவர்கள் ரூ.2 லட்சத்துடன் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வந்து பணத்தை கொடுத்துவிட்டு குண்டு மணி மாலைகளை வாங்கி செல்லுங்கள் என்று தெரிவித்து உள்ளனர். இதனை நம்பி பூங்காவனம் கடந்த 28-ந்தேதி ரூ.2 லட்சத்தை எடுத்து கொண்டு பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கு வந்த அவர்கள் 4 பேரும் பணத்தை பெற்று கொண்டு மாலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். மாலை பெற்றுக்கொண்ட அவர் அவற்றை சோதனை செய்து பார்த்ததில் அந்த மாலைகள் கவரிங் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருவ ண்ணாமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் பஸ் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அவர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மற்றொரு நபரை ஏமாற்ற முயன்றது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு தொடர்பு கொண்டு அவர்கள் கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றும் கும்பல் என்று தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். போலீசாரின் ஆலோசனையின் படி அந்த நபர் அவர்கள் 4 பேரையும் நேற்று மாலை திருவண்ணா மலை பஸ் நிலையத்திற்கு வரவழைத்தார். அவர்கள் 4 பேரும் கவரிங் குண்டு மணி மாலைகளை எடுத்து கொண்டு பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கு பதுங்கி இருந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஆர்.ஜே.ராகுல், சோயங்கி பவன், சோயங்கி ராகுல், பிரபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள கவரிங் குண்டு மணி மாலைகள் மற்றும் ரூ.52 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • ரூ.50 ஆயிரம் மது பாட்டில்களை லோடு ஆட்டோவில் ஏற்றி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், நாயுடு மங்கலம் கூட் ரோட்டில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் திருவண்ணாமலை அடுத்த வெலுக்கணந்தல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு டாஸ்மாக் கடை ஊழியர்கள் வியாபாரம் முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு லோடு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு உள்ளே சென்றனர். கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை எடுத்து வந்து லோடு ஆட்டோவில் அடுக்கி எடுத்துச் சென்றனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கடையின் சூப்பர்வைசர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை போன மது பானங்களின் விலை ரூ 50 ஆயிரம் இருக்கும் என தெரிய வந்தது. இதையடுத்து கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் எத்தனை நபர்கள் ஈடுபட்டனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்களை லோடு ஆட்டோவில் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்கள்- சுற்றுலா பயணிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கமண்டல நதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள செண்பகத்தோப்பு அணைக்குசெல்லும் சாலை ராமநாதபுரம் கிராமம் வழியாக செல்கிறது.

    ராமநாதபுரம் கிராமத்திலிருந்து தொடங்கும் சுமார் 4 கிலோமீட்டர் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலையை ஒன்றியம் அல்லது ஊராட்சி சார்பில் சீரமைக்க முடியவில்லை.

    இதனால் இச்சாலை முழுவதும் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சேறும் சகதியுமாக அவல நிலையாக உள்ளது. சீரமைக்க வனத்துறையினர் ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளதால், கிட்டத்தட்ட போக்குவரத்துக்கு இடையூறு தரும் சாலையாக உள்ளது.

    விடுமுறை தினங்களில் செண்பகத்தோப்பு அணைக்கு ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் அணையை பார்த்து ரசித்து செல்கின்றனர். ஆனால் அணைக்கு வரும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என தற்போது செண்பகத்தோப்பு அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வது குறைந்து வருகிறது.

    இந்த சாலையில் ஜவ்வாதுமலை வாழ் மக்கள், பெருமாள்பேட்டை துரிஞ்சாபுரம் பகுதி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

    பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோவும் போகமுடியாத சூழல் நிலவுகிறது.

    வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பஞ்ச கவ்யம் குறித்து விளக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் இயற்கை வேளாண்மை விவசாய பண்ணையில் காய்கறிகளை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்வது சம்பந்தமாக ஆலோசனை பயிற்சி நடைபெற்றது.

    மருசூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தனி வேன் மூலம் படவேடு வந்து பஞ்ச கவ்யம், ஜீவகாருண்யம், மீன் கரைசல், ஆகியன குறித்து விளக்கமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆத்மா திட்ட இயக்குனர் (பொ) சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் செல்லத்துரை, வேளாண்மை அலுவலர் கீதா, ஆத்மா திட்ட பணியாளர்கள் பாஸ்கரன் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55), இவர் மாட்டு தரகு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் செய்யாருக்கு பைக்கில் வந்தார். தாண்டுக்குளம் கிராமம், அட்டை கம்பெனி அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென நாய்குறுக்கே பாய்ந்தது.

    நாய் மீது ஏற்றாமல் இருக்க பிரேக் போட்டு நிலை தடுமாறி கீழே விழுந்ததில், ஆனந்தனுக்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக செய்யாறு அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக செய்யாறு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத மஹா சனி பிரதோஷ பூஜை நடைபெற்றது. முன்னதாக நந்தி பெருமானுக்கு பசும்பால்,தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், ஆகிய விசேஷ திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்பு பஞ்சலோக ஆரத்தி காண்பிக்கப்பட்டு உற்சவராக பார்வதி சிவபெருமானை சுமந்தபடி நந்தி பெருமான் கோவிலை 3 முறை வலம் வந்தார்.

    இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், மும்முனி, மாம்பட்டு, பிருதூர், மருதாடு, சத்யாநகர்,ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாளை நடக்கிறது
    • அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.

    இதைமுன்னிட்டு காலையில் சாமிக்கு பாலாபிஷேகம், மாலையில் சாமிக்கு அன்னாபிஷேகம், அம்மனுக்கு காய்கறி அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணி அளவில் அருகே உள்ள ஏரியில் அன்னம் கரைக்கப்படுகிறது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதேபோல் கண்ணமங்கலம் அருள்மிகு ராமநாதீஸ்வரர் கோயிலிலும் நாளை அன்னாபிஷேகம், அம்மனுக்கு காதம்பரி அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 8 மணி அளவில் நாகநதி ஆற்றில் அன்னம் கரைக்கப்படுகிறது. பக்தர்கள் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

    • பகுதி சபா கூட்டத்தில் புகார்
    • நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சிக்குட்பட்ட 25, 26,27 ஆகிய வார்டுகளுக்கான பகுதி சபா கூட்டம் திருவத்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கங்காதரன், கார்த்திகேயன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓ. ஜோதி எம்.எல்,ஏ, பங்கேற்றார்.

    கூட்டத்தில் வார்டுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பாக உள்ளது, பள்ளி நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தடுக்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ஆற்று மணல் கொள்ளை போவதை தடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி பேசுகையில் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அத்தியாவசிய முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் என். சங்கர், ஏ..ஞானவேல், நகராட்சி பணியாளர்கள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.44 மணிக்கு தொடங்கி மறுநாள் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • பவுர்ணமி நாளை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைகிறது.
    • சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    கடந்த மாதம் பவுர்ணமியின் போது கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) மாலை தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை நிறைவடைகிறது.

    மேலும் இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தீபத் திருவிழாவின் போது எவ்வாறு பக்தர்களை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது, பக்தர்கள் வந்து செல்லும் வழி குறித்து வருகிற பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை வைத்து ஒத்திகை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கோவிலில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் ராஜகோபுரத்தில் இருந்தும், அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்தும் கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து கலெக்டரிடம் கேட்ட போது, பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் எந்தவித இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

    • சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த துந்தரீகம்பட்டு ஆரணி விழுப்புரம் நெடுஞ்சா லையில் பழமையான ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் வழக்கம்போல் பூசாரி பூஜை செய்துவிட்டு நேற்று இரவு நடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறப்பதற்கு பூசாரி வந்தார். அப்போது கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த சி.சி.டி.வி. காட்சியில் 2 பேர் கோவில் கேட்டின் பூட்டை உடைப்பதும் மற்றொரு நபர் கோவிலின் வெளியே பைக்கில் காத்திருப்பதும், பின்னர் கோவிலில் உள்ளே புகுந்த 2 பேர் உண்டியலை கடப்பாரையால் உடைத்து பணத்தை திருடி செல்வதும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி மர்ம கும்பல் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
    • பவுர்ணமி தரிசனத்துக்கு முன்னுரிமையும் வழங்கபடமாட்டாது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற இருப்பதால் வரும் 7-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவு கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்னாபிஷேகம் நடைபெறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திகுறிப்பில், "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 7-ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்குஅனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு பிறகு நடை திறக்கப்பட்டு, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

    மேலும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பவுர்ணமி நாள் என்பதால், தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், மேற்கண்ட நாட்களில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் பவுர்ணமி தரிசனத்துக்கு முன்னுரி மையும் வழங்கபடமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×