என் மலர்
நீங்கள் தேடியது "Robbery by piercing"
- ரூ.50 ஆயிரம் மது பாட்டில்களை லோடு ஆட்டோவில் ஏற்றி சென்றனர்
- போலீசார் விசாரணை
கலசப்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், நாயுடு மங்கலம் கூட் ரோட்டில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் திருவண்ணாமலை அடுத்த வெலுக்கணந்தல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு டாஸ்மாக் கடை ஊழியர்கள் வியாபாரம் முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு லோடு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு உள்ளே சென்றனர். கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை எடுத்து வந்து லோடு ஆட்டோவில் அடுக்கி எடுத்துச் சென்றனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கடையின் சூப்பர்வைசர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை போன மது பானங்களின் விலை ரூ 50 ஆயிரம் இருக்கும் என தெரிய வந்தது. இதையடுத்து கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் எத்தனை நபர்கள் ஈடுபட்டனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்களை லோடு ஆட்டோவில் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






