என் மலர்
திருவண்ணாமலை
- கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
- ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் அறிவிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிராம ஊராட்சி திட்டங்கள் மற்றும் நிர்வாகம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் குறித்து அவர் விளக்கமாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்:-
கிராம ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத் தலை வர்கள் கட்டுப்பாட்டில் தான் பணிகள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஊராட்சி பணிகளை முனைப்புடன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திறம்பட செய்து நிறைவேற்ற வேண்டும்.
நீடித்த மற்றும் நிலையான பல்வேறு வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.
இதனை மாவட்ட மற்றும் மாநில அளவிலான தோ்வு குழுக்கள் பரிசீலனை செய்து அரசுக்கு முன்மொழிவு செய்யும்'' என்றார்.
பங்கேற்பு கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- செய்யாறு நகராட்சி ஆணையர் தகவல்
- பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
செய்யாறு:
செய்யாறு நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
செய்யாறில் வழக்கமாக வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் புதியதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், தற்காலிகமாக வாரச்சந்தை திருவோத்தூர் வேதபுரி ஈஸ்வரர் கோவில் அருகே இயங்கி வருகிறது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயங்கும் வார சந்தை முன்னதாக நாளை சனிக்கிழமை அன்று நடைபெறும் என்றும், மேலும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலில் 10 நாள் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதனால் வாரச்சந்தை ஜனவரி 22,29 ஆகிய இரு தினங்கள் வாரச்சந்தை செயல்படாது. இவ்வாறு அதில் தொரிவிக்க ப்பட்டுள்ளது.
- பொது மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழா முன்னிட்டு காளை விடும் விழா நடைபெறுவது வழக்கம் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகளை கொண்டு வந்து விடுவது வழக்கம்.
இதில் திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்புக் கருதியும் போலீஸ் கொடி அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கடலாடி, கீழ்பாலூர், வீரளூர், மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், உட்பட பல்வேறு கிராமங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
- நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்
- இரவு நேரத்தில் பெண்கள் கிரிவலம் செல்ல அச்சம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு பகல் பாராமல் கிரிவலம் செல்கின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி 14 கிலோமீட்டர் தொலைவிலும் ஆங்காங்கே மின்விளக்குகள் அமைக்கப்பட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிரிவலப் பாதையில் உள்ள காஞ்சி சாலையில் குபேர லிங்கம் முதல் அபயம் மண்டபம் வரை கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் எரியாததால், இருளில் மூழ்கியுள்ளது.
இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இரவு நேரத்தில் பெண்கள் கிரிவலம் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராஜாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து காரில் ராமதாசை கடத்திச் சென்றனர்.
- போலீசார் ராஜாராம் அவரது நண்பர்கள் குகன், கிருபாகரன் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த கீழ் கணவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராமதாஸ் (வயது 28) விவசாயி. இவருக்கு திருமணமாகி 6 ஆண்டு ஆகிறது.மனைவி சசிகலா மற்றும் 5 வயது குழந்தை உள்ளது.
ராமதாஸ் அணைக்கட்டு அருகே நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.கடந்த 5 நாட்களுக்கு முன்பு நிலைத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராமதாஸ் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஜமுனாமரத்தூர் அருகே உள்ள வேட கொல்லை மேடு அமிர்தி சாலை ஓரம் ராமதாஸ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
ஜமுனாமரத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் கொலையான ராமதாஸின் நண்பர்கள் யார் செல்போனில் ராமதாஸ் யாருடன் அதிகமாக பேசி உள்ளார் என ஆய்வு செய்தனர்.
அப்போது அவரது பள்ளி தோழரான நெருங்கிய நண்பர் ஜவ்வாது மலையில் வனவராக பணிபுரியும் ராஜாராம் (26) என்பவர் அதிகமாக போனில் பேசியது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜாராமை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து ராமதாசை தீர்த்து கட்டியது தெரியவந்தது.
ராஜாராம் வனப்பகுதியில் வெட்டி கடத்தும் செம்மரக்கட்டையை மறைத்து வைப்பதற்கு இடம் கேட்டுள்ளார். ஆனால் ராமதாஸ் இடம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் செய்யாரை சேர்ந்த அவரது நண்பர்களான குகன் (20) கிருபாகரன் (26) ஆகியோரை வரவழைத்தார்.
சம்பவத்தன்று ராமதாஸ் அணைக்கட்டு அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விட்டு பஸ்சில் கீழ் கணவாயூர் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அப்போது ராஜாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து காரில் ராமதாசை கடத்திச் சென்றனர்.
பூசிமலை குப்பம் வந்த போது ராமதாசை தாக்கினர்.மேலும் கயிற்றால் கழுத்தை இறுக்கினர். இதில் ராமதாஸ் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் உடலை அமிர்தி சாலையில் வீசி சென்றது தெரியவந்தது.
போலீசார் ராஜாராம் அவரது நண்பர்கள் குகன், கிருபாகரன் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
- வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திர கூட்டம் அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் ஆராஞ்சி ஏ.எஸ் ஆறுமுகம், சாந்தி கண்ணன், துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஒன்றிய வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கர், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, அனுராதாசுகுமார், பாரதி, மணிமேகலை சேகர், புஷ்பா சதாசிவம், மகேஸ்வரி சங்கர் உள்ளிட்டவர்கள் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் சுகாதாரத்தை சீர் கெடாமல் பாதுகாக்கும் நோக்கில், ஒன்றியத்திற்கு தேவை அடிப்படை வசதிகளை உடனடியாக விரைந்து செயல்படுத்திடவேண்டும் என விவாதித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) காந்திமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பரிமளா, கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
- சி.சி.டி.வி. காட்சியால் பரபரப்பு
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த உணவகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவினை பூட்டிக்கொண்டு சென்று விட்டனர்.
இதையடுத்து உணவு உரிமையாளர் வழக்கம்போல் நேற்று காலையில் உணவகத்தை திறந்தார். அப்போது கல்லாப்பெட்டியை பார்த்த போது அதிலிருந்த ரூ.4 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து ஓட்டலில் பொருத்திருந்த சி. சி. டி. வி. கேமரா காட்சியை ஆய்வு செய்தார்.
அப்போது 2 பெண்கள் நள்ளிரவு 1 மணி அளவில் முகமூடி அணிந்து கொண்டு மேற்கூரையை பிரித்து ஓட்டலின் உள்ளே இறங்கி கல்லாப்பெட்டி யை திறந்து அதில் அதிலிருந்து பணத்தை திருடும் காட்சி பதிவாகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பிரேம்குமார் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருடும் பெண்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்களா? என வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சியை கொண்டு பெண்களை தேடி வருகின்றனர்.
- தொடர்ந்து 4 கிராமங்களுக்கு ஆய்வுக்கு சென்றார்
- பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங் ஆய்வு செய்தார்.
அப்போது துர்க்கைநம்மியந்தல், இனாம்காரியந்தல், நார்த்தாம்பூண்டி ஊதிரம்பூண்டி, தேவனாம்பட்டு, வடபுழுதியூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்படுத்துவதற்காக போடப்பட்டிருந்த நீர்க்கலத்தை ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் இரவு ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலக வளாகத்தை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து 4 கிராமங்களுக்கு ஆய்வுக்கு சென்றார்.
பின்னர்அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.
- நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- ஆலையில் எந்திரம் பழுது என்று லாரி வரவில்லை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜார்ஜ். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரும்பு நடவு செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கரும்புகளை வெட்டி திருப்பத்தூர் அரசு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிவந்தார். இந்நிலையில் வெட்டிவைத்த கரும்புகளை ஏற்றுவதற்கு கடந்த 4 நாட்களாக வண்டி வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி பீல்டுமேனிடம் கேட்டபோது, ஆலை ரிப்பேரில் உள்ளது. சரியானதும் ஏற்றிக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த விவசாயி கூறியதாவது:-
ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதன்பின்னர் 12 மாதங்கள் கண் விழித்து தண்ணீர் இரைத்து மருந்து வைத்து காப்பாற்றி வெட்டும்போது ஒரு டன் கூலியாக ரூ.900மும், தோட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றுவதற்கு கூலியாக ரூ.400ம் செலவாகிறது.
இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு 60 டன் வர வேண்டிய நிலையில் 30 டன் மட்டுமே வரு கிறது. இதைவைத்துக்கொண்டு ஒன்று செய்யமுடியவில்லை என்றாலும் நெல் பயிர் வைத்தால் கைக்கு எட்டும்போது இயற்கை சீற்றங்களால் அழிந்துபோகிறது என்பதால் கரும்பை நடவு செய்தேன். ஆனால் 4 நாட்களாக ஆலை ரிப்பேர் என்று லாரியை அனுப்பவில்லை.
இதனால் வெட்டி வைத்த கரும்புகள் அனைத்தும் தக்கைபோல் காய்கிறது. இதனை ஏற்றி அனுப்பினால் வெட்டிய கூலி கூட நிற்காது. மேலும் ஆலை ரிப்பேர் என்றால் பீல்டுமேன்கள் கரும்பு வெட்டுவதை நிறுத்த சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் நடந்துவருகின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது.
தமிழக அரசின் சார்பில் விவசாயத்திற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது.
இந்த பிரச்சனையை நாங்கள் எங்கேபோய் சொல்வது? ஒரு விவசாயியின் கரும்பு 4 நாட்களாக தோட்டத்திலும், ரோடு ஓரத்திலும் கேட்பாரற்று கிடந்தால் இதற்கு காவல் காப்பது யார்? இங்கு எனது கரும்பு மட்டுமல்லாமல் சுற்றிலும் உள்ள பல ஏக்கர் விவசாயிகளின் கரும்பின் நிலையும் இதே நிலைதான் உள்ளது.
இதனால் கரும்பு பயிர் செய்வதை விட்டுவிடலாம் என்ற மனவேதனையுடன் கூறினார்.
- கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நல்லவன்பாளையம் அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). இவர் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரபாவதி, அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் தையல் தொழில் மட்டுமின்றி பைனான்ஸ் மற்றும் ரியஸ் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.
கடந்த 7-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து நல்லவ ன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது தாமரை நகரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-
வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவருக்கு ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.
கடன் வாங்கிய பரந்தாமன் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆறுமுகத்திற்கும், பரந்தாமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த பரந்தாமன், ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து அவருக்கு தெரிந்த கலசப்பாக்கம் தாலுகா சாலையனூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் பாரதி (22), திருவண்ணாமலை கரையான் செட்டி தெரு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தமிழரசன் (20), திருவண்ணாமலை குளத்து மேட்டு தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆகியோருக்கு பணம் கொடுத்து தையல் டெய்லர் ஆறுமுகத்தை கொலை செய்ய சதித்திட்டம் திட்டினார்.
அதனைத் தொடர்ந்து பாரதி, தமிழரசன், ஸ்ரீகாந்த் ஆகியோர் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தனர்.
அதைத் தொடர்ந்து பரந்தாமன், பாரதி, தமிழரசன், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் திருவண்ணா மலை டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- சட்டமன்ற கூட்டத்தொடரில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு
- போளூர் ஜவ்வாது மலை சாலையில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் போளூர் தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-
ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகருக்கு மாதந்தோறும் லட்சக்கண க்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருகிறார்கள் அவர்களின் நலனை முன்னிட்டு தற்போது வேலூர் சாலையில் இருந்து செங்கம் செல்லும் சாலை வரை அமைக்கப்பட்டு இருக்கிற சுற்றுவட்டப் பாதையை மேலும் நீடித்து செங்கம் சாலையில் இருந்து வேலூர் சாலை வரை சுற்று வட்டப் பாதை அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்யுமா என்றும்
அதேபோல் போளூர் நகரத்தில் ஏற்பட்டிருக்கிற போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போளூர் நகர் வசூரில் இருந்து ஜவ்வாது மலை செல்லுகின்ற அரசு மருத்துவமனை வரை பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்யுமா என பேசினார். இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்து பேசுகையில்:-
சட்டமன்ற உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்லுகின்ற சாலையை நான் அறிவேன் வேலூர், திருவண்ணாமலை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை ஆகும் அதேபோன்று திருவண்ணாமலை செங்கம் சாலையும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
மாநில அரசின் சார்பாக புறவழி சாலை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அரசின் சார்பாக நிலங்களை எல்லாம் கையகப்படுத்தப்பட்டு திட்ட மதிப்பீடுகள் எல்லாம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் அதற்குரிய நிதியை ஒதுக்கிவிட்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இப்போது புதியதாக நான் மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து பேசியபோது ஒரு தேசிய நெடுஞ்சாலையை இன்னொரு தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் போது அதற்கான புறவழி சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நிதி வழங்குகிறோம் என்று தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது அதற்கான கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
நிதி பெறப்பட்ட உடன் அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலையுடன் செங்கம் சாலையும் வேலூர் சாலையும் இணை க்கப்படும்.
அடுத்து போளூர் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அங்கே ஒரு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
சென்ற முறை சட்டம ன்றத்தில் அவர் பேசுகின்ற போது இதை குறிப்பிட்டு இருந்தார்கள் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அனுமதியோடு அதற்கான டி.பி.ஆர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணி முடிந்ததும் அந்த புறவழிச் சாலை கட்டாயம் அமைகப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
- தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை
வந்தவாசி:
பொங்கல் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வந்தவாசி தாசில்தார் அலுவலகம் முன்பு 250-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி தலைமறைவான தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீதி நடவடிக்கை எடுக்க கோரியும், சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் தாசில்தார் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சீட்டு கட்டி ஏமாந்தவர்களிடம் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதனால் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






