search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்க்கரை ஆலைக்கு வெட்டப்பட்ட கரும்பு ஏற்றப்படாமல் 4 நாட்களாக வெயிலில் காய்ந்து வரும் அவலம்
    X

    கரும்புகள் வெயிலில் காய்ந்து வருவதை படத்தில் காணலாம்.

    சர்க்கரை ஆலைக்கு வெட்டப்பட்ட கரும்பு ஏற்றப்படாமல் 4 நாட்களாக வெயிலில் காய்ந்து வரும் அவலம்

    • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • ஆலையில் எந்திரம் பழுது என்று லாரி வரவில்லை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜார்ஜ். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரும்பு நடவு செய்திருந்தார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கரும்புகளை வெட்டி திருப்பத்தூர் அரசு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிவந்தார். இந்நிலையில் வெட்டிவைத்த கரும்புகளை ஏற்றுவதற்கு கடந்த 4 நாட்களாக வண்டி வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி பீல்டுமேனிடம் கேட்டபோது, ஆலை ரிப்பேரில் உள்ளது. சரியானதும் ஏற்றிக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

    இதனால் மன வேதனை அடைந்த விவசாயி கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதன்பின்னர் 12 மாதங்கள் கண் விழித்து தண்ணீர் இரைத்து மருந்து வைத்து காப்பாற்றி வெட்டும்போது ஒரு டன் கூலியாக ரூ.900மும், தோட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றுவதற்கு கூலியாக ரூ.400ம் செலவாகிறது.

    இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு 60 டன் வர வேண்டிய நிலையில் 30 டன் மட்டுமே வரு கிறது. இதைவைத்துக்கொண்டு ஒன்று செய்யமுடியவில்லை என்றாலும் நெல் பயிர் வைத்தால் கைக்கு எட்டும்போது இயற்கை சீற்றங்களால் அழிந்துபோகிறது என்பதால் கரும்பை நடவு செய்தேன். ஆனால் 4 நாட்களாக ஆலை ரிப்பேர் என்று லாரியை அனுப்பவில்லை.

    இதனால் வெட்டி வைத்த கரும்புகள் அனைத்தும் தக்கைபோல் காய்கிறது. இதனை ஏற்றி அனுப்பினால் வெட்டிய கூலி கூட நிற்காது. மேலும் ஆலை ரிப்பேர் என்றால் பீல்டுமேன்கள் கரும்பு வெட்டுவதை நிறுத்த சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் நடந்துவருகின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது.

    தமிழக அரசின் சார்பில் விவசாயத்திற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது.

    இந்த பிரச்சனையை நாங்கள் எங்கேபோய் சொல்வது? ஒரு விவசாயியின் கரும்பு 4 நாட்களாக தோட்டத்திலும், ரோடு ஓரத்திலும் கேட்பாரற்று கிடந்தால் இதற்கு காவல் காப்பது யார்? இங்கு எனது கரும்பு மட்டுமல்லாமல் சுற்றிலும் உள்ள பல ஏக்கர் விவசாயிகளின் கரும்பின் நிலையும் இதே நிலைதான் உள்ளது.

    இதனால் கரும்பு பயிர் செய்வதை விட்டுவிடலாம் என்ற மனவேதனையுடன் கூறினார்.

    Next Story
    ×