என் மலர்
திருவண்ணாமலை
- ஏ.டி.எம். கார்டை மாற்றி துணிகரம்
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள 5புத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அஞ்சலிதேவி (வயது 59). இவர், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்துள்ளார். பணம் எடுக்க தெரியாததால், ஏ.டி.எம். மையத் துக்கு வந்த வாலிபரிடம் பணம் எடுக்க சொல்லி ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.
அந்த வாலிபர் ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, அவர் வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை அஞ்சலிதேவியிடம் கொடுத்துள்ளார்.
இதனை கவனிக்காத அவர் அந்த கார்டை வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.
பின்னர் அஞ்சலிதேவியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அஞ்சலிதேவி தான் வைத்திருந்த ஏ.டி. எம். கார்டுடன் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று கிளை மேலாளரிடம் இதுபற்றி தெரிவித்தார். அப் போது அவர் வைத்திருந்தது உங்களுடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் "ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் வேண்டுகோள்
- புதிய ரேசன் கடை திறப்பு விழா நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி, ரேஷன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கி பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை நான் தீர்ப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலுவை அணுகுவேன். அவர் எல்லா பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதால் தான் நீங்கள் கேட்கிற கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. அந்த வகையில் தான் இந்த ரேஷன் கடையும் திறக்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் என்பது குறைவாக உள்ளது. எனவே அதிக அளவில் நெல் தேவைப்படுவதால் விவசாயிகள் இன்னும் எந்தெந்த இடங்களில் வேண்டும் என்று கேட்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
எனவே விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் நெல்லை விற்பனை செய்யாமல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்கள் உற்பத்தி நெல்லை விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் முருகேஷ் பேசினார்.
முன்னதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள மேற்கு ஆரணி, ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்ட கிளைத் தலைவர் இல பாஸ்கரன் கிளை செயலாளர் பரசுராமன் ஊரக வளர்ச்சி சங்கம் வட்டார தலைவர் மணிமேகலை மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
இறுதியில் வட்ட கிளை பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
- 3 வாகனங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு கேசவபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ் (25), சத்தியசீலன் (21)இவர்கள் 2 பேரும் படவேடு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியபோது பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போளூர் ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
- சட்டமன்றத்தில் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு
- விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதற்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கலசப்பாக்கம் தொகுதி ஆதமங்கலம்புதூர், கீழ்பென்னாத்தூர் தொகுதி நாயுடுமங்கலம் ஆகிய 2 கிராமங்களின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணனிடமும் தமிழக அரசின் சார்பில் ஆதமங்கலம்புதூர், நாயுடுமங்கலம் பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிரந்தரமாக கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் நிரந்தர ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேவையென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் சட்டமன்றத்தில் 4 மாவட்டங்களில் ஆறு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைப்பதற்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெனத்தூர் தொகுதிக்குட்பட்ட நாயுடுமங்கலம் பகுதியிலும் கலச ப்பாக்கம் தொகுதி க்குட்பட்ட ஆதமங்கல ம்புதூரிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைய சட்டமன்றத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆதமங்கலம்புதூரிலும் நாயுடுமங்கலத்திலும் விவசாயிகளும் பொதுமக்களும் துணை சபாநாயகருக்கும் எம்எல்ஏவுக்கும் நன்றியை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
- ேநாய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதி
- துர்நாற்றம் வீசுவதாக புகார்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் உள்ளன.
இதில் 18-வது வார்டு பாரதியார் தெரு என்.எஸ் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக பன்றிகள் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
மேலும் அப்பகுதியில் இறந்த பன்றிகளை நாய்கள் கடித்து குதறியதால் துர்நாற்றம் வீசுகின்றன.
இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி நிர்வாகத்திற்கு இறந்த பன்றிகளை அகற்ற புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.
இந்த பகுதியில் திடீரென 10-க்கும் மேற்பட்ட பன்றிகள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
- உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைக்க வலியுறுத்தல்
- நீர் நிலையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த நிலையில் நேற்று கரிக்கலாம்பாடி ஊர் பொதுமக்கள் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, கரிக்கலாம்பாடி ஏரியின் கரையை சிலர் 450 மீட்டர் நீளத்திற்கு வெட்டி மண்ணை திருடிஉள்ளனர். வெட்டிய பகுதியின் மேற்புறம் உள்ள பனை மரங்கள் சாயும் நிலையில் உள்ளன. பலத்த மழை பெய்தால் அந்த மரங்கள் சாய்ந்துவிடும். ஏரி நிரம்பினாலோ, புயல் வெள்ள அபாயம் ஏற்பட்டாலோ ஏரி உடையும் நிலைமை ஏற்படும்.
நீர் நிலையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கிராம நிர்வாக அலுவலர் மோகனிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பஸ் நிறுத்துவது தொடர்பாக தகராறு
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பா ளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 57). இவர் ஆரணி முனியன்குடிசை அரசு பஸ் கண்டக்டராக உள்ளார்.
கடந்த 16-ம்தேதி இரவு மேல்மட்டை விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (37) தனியார் பஸ் கன்டக்டர் என்பவர், பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் பூவாடை அம்மன் கோவில் மைதானத்தில் பஸ் நிறுத்துவது தொடர்பாக கோவிந்த சாமியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் கோவிந்தசாமியை தாக்கியுள்ளார். இது குறித்து கோவிந்தசாமி நேற்று கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் எம்.பி. துரை வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியில், வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 89-வது பொதுப் பேரவைக் கூட்டம் தலைவர் டி.வி.பச்சையப்பன், துணைத்தலைவர் அன்னை.க.சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், செய்யாறு சரக துணைப்பதிவாளர் மு.கமலக் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலாண்மை இயக்குநர் ப.மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். வங்கி செயலாளர் ஏ.சீனுவாசன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.துரை கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அங்கத்தினர்கள் 12 ஆயிரத்து 597 பேருக்கு 10 லட்சத்து 55 ஆயிரத்து 478 ரூபாய் ஈவுத் தொகைகளை வழங்கினார்.
இந்த பேரவை விழாவில், நகர்மன்ற தலைவர் எச்சலால், நகர திமுக செயலாளர் எ.தயாளன், நகர திமுக அவைத் தலைவர் அ.நவாப்ஜான், திமுக இளைஞர் அணி இ.எஸ்.டி.கார்த்திக், ,தெள்ளாறு ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், ஒன்றிய திமுக செயலாளர்கள் சி.ஆர் பெருமாள், டி.டி ராதா, கே.ஆர்.பி.பழனி, கே.டி.ராமசாமி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்கள் டிகேபி மணி, அர்ஜீனன், பாஸ்கர் ரெட்டியார், மத்திய தொலைத் தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் வி.பி.அண்ணாமலை, ஓட்டல் பாஷா, நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், சங்க நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் எ.ராஜேஷ்குமார், கே.நடராஜன், டி.தீபா, டி.வி.நித்தியா,வி தீபா, பி.மணி, கே.சக்திவேல், மற்றும் வங்கி பணியாளர்களான, சிறப்பு நிலை மேற் பார்வையாளர்கள் ஆர்.ராஜேஸ்வரி, எம்.முனியாண்டி, யுவராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, சிறப்புநிலை மேற்பார்வையாளர் எஸ்.காந்தி நன்றி கூறினார்.
- மிக குறைந்த அளவில் கொள்முதல் செய்வதாக புகார்
- விவசாய சங்க மாநில தலைவர் பேச்சு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விவசாய கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு உழவர் பெருந்தலைவர் நாராணசாமி நாயுடுவின் விவசாய சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வேலுச்சாமி பேசியதாவது:-
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த வசதிகளும் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக கொண்டு சென்ற நெல் மூட்டைகள் தரையில் வைக்கபட்டு பாதுகாப்பின்றி வைக்கபட்டுள்ளன விவசாயி களின் நெல்மணிகள் மழைகளிலும் பனியிலும் நனைய வேண்டிய சூழ்நிலை உள்ளன.
இதனை போக்க வேளாண் சேமிப்பு கிடங்கு 2023-24ம் ஆண்டு நிதியாண்டில் நிதி ஓதுக்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். மேலும் மஞ்சள் சேமிப்பு கிடங்கு ஆங்காங்கே உருவாக்கி மஞ்சள் உற்பத்தியை தமிழக அரசே கொள்முதல் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கரும்பு, நெல், பால் விலை மிக குறைந்த அளவில் கொள்முதல் செய்கின்றனர்.
இதனை தமிழக அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வருகின்ற வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தால் விவசாயிகள் வாழ்வில் வளம் பெருவதாக வருகின்ற பட்ஜெட்டை ஆவலுடன் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளதாக அவர் பேசினார்.
- கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை
போளூர்:
திருவண்ணாமலை நகரில் கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (35 வயது), ஆசாத் (36), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குதரத்பாஷா (43), அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்சர்உசேன் (26), நிஜாமுதீன் (37) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் போளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு எம்.காளிமுத்துவேல், அவர்களை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். போளூரில் வைத்து 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை ரூ.5 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மீதி 67 லட்சத்தை மீட்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவேங்கடம் மற்றும் ரமேஷ் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள கருந்து வம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் திருவேங்கடம் (வயது 30).ஆடு மேய்க்கும் தொழிலாளி. ரமேஷ் (40) செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.
நேற்று கருந்துவம்பாடி கிராமத்தை ஒட்டி உள்ள ஏரியில் திருவேங்கடம் ஆடு மேய்க்க சென்றார். மாலை 5 மணிக்கு பிறகு அவரை காணவில்லை.
இதனால் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏரியில் உள்ள குட்டையில் இறங்கி தேடினர்.அப்போது சேற்றில் சிக்கி மூழ்கி இருந்த திருவேங்கடத்தை பிணமாக மீட்டனர். அதே குட்டையில் அவருடைய ஆட்டுக்குட்டி ஒன்றும் பிணமாக மீட்கப்பட்டது.
இதை கண்ட அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த நிலையில் இரவு செங்கல் சூளை தொழிலாளர் ரமேஷையும் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடினர். இன்று காலையில் திருவேங்கடம் பிணமாக மீட்கப்பட்ட ஏரி குட்டையில் ரமேஷ் பிணமாக மிதந்தார்.
இதனைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருவேங்கடம் மற்றும் ரமேஷ் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஏரி பள்ளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க சென்ற திருவேங்கடம் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம். அந்த நேரத்தில் ரமேஷ் அவரை காப்பாற்ற சென்று அவரும் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






