என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 8ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஆரம்பத்தில் வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் இது படிப்படியாக அதிகரித்தது.

    இன்று காலை வினாடிக்கு 610 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வரும் நாட்களில் கிருஷ்ணா நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.66 அடி ஆக பதிவானது.

    1.257 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த தரணிவராகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்(வயது23). இவருக்கு புட்லூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்காக இன்று நேர்காணல் இருந்தது. இதையடுத்து அவர் இன்று காலை திருத்தணியில் இருந்து மின்சார ரெயிலில் பயணம் செய்தார். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அருண்குமார் ரெயில் பெட்டியின் வாசலில் நின்றதாக தெரிகிறது.

    ஏகாட்டூர் திருவள்ளூர் இடையே சென்று கொண்டிருந்தபோது மின்சார ரெயிலில் இருந்து அருண்குமார் தவறி கீழே விழுந்தார். இதில் ரெயிலுக்குள் சிக்கிய அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரையில் உள்ள மாணவர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொன்னேரியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு சென்று படித்து வருகின்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரையில் 20-க்கு மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்டவை இருந்தபோதிலும் இதுவரை அவர்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

    வீடுகளுக்கு மின்சாரம், தெரு விளக்கு இல்லாததால் அடிக்கடி சூரியன் மறைந்த பின்னர் அவர்கள் இருட்டிலேயே வசிக்கும் நிலை உள்ளது. இதனால் வீடுகளுக்குள் விஷப் பாம்புகள், விஷப்பூச்சிகள் புகுந்து அடிக்கடி அச்சுறுத்தி வருகின்றன.

    இப்பகுதியில் உள்ள மாணவர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொன்னேரியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு சென்று படித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரியில் இருந்து வந்த பின்னர் இரவு நேரத்தில மின்சாரம் இல்லாததால் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    மாலை 6 மணிக்கே அங்கு வசிக்கும் அனைவரும் வீட்டைப் பூட்டி வெளியில் எங்கும் செல்லாமல் முடங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக பல பேர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலை நீடித்து வருகிறது. மின்சாரம் இல்லாததால் எலக்ட்ரிக்கல் பொருட்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    செல்போனை சார்ஜ் செய்வதற்கு இங்கு வசிப்பவர்கள் அருகில் உள்ள ஏரி மேடு பகுதியில் உள்ள உறவினர் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். மேலும் இதுவரை வீட்டில் டி.வி. பார்த்தது இல்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சாந்தி கூறியதாவது: எங்களுடைய தாத்தா காலத்தில் இருந்தே இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இதுவரை மின்சாரத்தை எங்கள் பகுதியில் பார்த்ததில்லை. ஓட்டு கேட்பதற்கு அரசியல் கட்சியினர் வரும்போது அனைத்து வசதிகளும் செய்து தருவதாக கூறுகிறார்கள்.

    மாணவி சாந்தி- மாணவி ரித்திகா

    பின்னர் கண்டு கொள்வதில்லை. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. வீட்டிற்கு மின்சாரம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, தெருவிளக்கு அமைத்தால் நாங்கள் தெரு விளக்கிலாவது படிப்போம்.

    9ம் வகுப்பு படிக்கும் மாணவி ரித்திகா:

    நாங்கள் பள்ளியில் படிப்பதோடு சரி. மின்சாரம் இல்லாததால் வீட்டில் வந்து வீட்டு பாடங்களை படிக்க முடிவதில்லை. பாம்பு, விஷபூச்சி தொல்லை அதிகம் காணப்படுகிறது. மின்வசதி இல்லாததால் படிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. இரவு முழுவதும் இருளில் தான் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

    சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மதுரவாயலில் வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்ற வாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டுள்ளார்.

    இதன் பேரில், தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதன் தொடர்ச்சியாக மதுரவாயல் போலீசார் கார்த்திகேயன் நகர், சொக்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய உமா என்பவர் கைது செய்யப்பட்டார்.

    பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டு, அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைதான உமா கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருவள்ளூர் அருகே மது குடித்ததை கண்டித்த தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள திருமணிகுப்பம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (60).இவரது மகன் லட்சுமணன் (26).இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லட்சுமணன் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனை வெங்கடேசன் கண்டித்தார். இது தொடர்பாக தந்தைமகன் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அருகில் இருந்த கத்தியால் தந்தை வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.
    திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 31). எலக்ட்ரீசியன். இவர் காக்களூர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின் வயரை இழுத்த போது அருகில் சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் மின் வயர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் நவீன் பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர் மார்க்கெட்டுக்கு பெங்களூர், ஆந்திராவில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது. மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் காய்கறிகளில் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மார்க்கெட்டுக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் திருவள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    திருவள்ளூர் மார்க்கெட்டுக்கு பெங்களூர், ஆந்திராவில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது. மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் காய்கறிகளில் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.

    சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை ஆகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் 30 வரை விற்கப்பட்டது.

    தக்காளி விலை உச்சம் அடைந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    திருவள்ளூர் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    சென்னை கொரட்டூர், முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது28), தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வந்தார்.

    இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சதீஷ் (26) என்பவருடன் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திருத்தணி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    திருவள்ளூர் அருகே தொழுவூர் சுடுகாடு வளைவில் திரும்பியபோது திருவள்ளூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த பால்வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஐயப்பன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் சதீஷ் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சதீசை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் போகும் வழியிலேயே சதீஷ் பரிதாபமாக இறந்தார். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்தது. இதில், லிஃப்டிற்குள் இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

    உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மேஜிஸ்திரேட் மோகனப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    இளம்பெண் பலாத்கார வழக்கில் கொள்ளையன் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் உள்ள வீட்டில் தனது தாய், அக்காவுடன் வசித்து வந்த 22 வயது பெண்ணின் அறைக்குள் நள்ளிரவில் சென்ற மர்மநபர் அந்த பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ததாக குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்த போது வீட்டிற்குள் வந்த நபர் போதையில் இருந்தார் என்ற தகவலை மட்டுமே தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் போதையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக சேகரித்தனர்.

    அவ்வாறு சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்தபோது குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் (19), என்பவரின் புகைப்படத்தை அவர் உறுதி செய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சதீஷ் என்பது தெரியவந்தது.

    அந்த நபரை குன்றத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். சதீஷ் அதே பகுதியில் உள்ள தண்ணீர் கம்பெனியில் வேலைக்கு செல்வது வழக்கம். இவர் வேலைக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் பால்கனியில் நின்று செல்போனில் பேசுவதை பார்த்தபடி சென்றுள்ளார்.

    மேலும் சதீஷ் ஆண் நபர்கள் இல்லாத வீடுகள், ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர் என்பதால் அந்த வீட்டை பற்றி விசாரித்துள்ளார்.

    அந்த வீட்டில் ஆண் நபர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட அவர் சம்பவத்தன்று கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கதவை தட்டியுள்ளார். தனது அக்கா தான் கதவை தட்டுகிறார் என நினைத்து அந்த பெண் கதவை திறந்தவுடன் பெண்ணின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்.

    மேலும் வீட்டில் இருக்கும் செல்போன், பணம், நகை ஆகியவற்றை தரும்படி கேட்டுள்ளார். தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த பெண் கூறியதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    கஞ்சா போதையில் அங்கேயே படுத்து தூங்கி விட்டு தனக்கு 2 நாட்களில் ரூ.10 ஆயிரம் தயார் செய்து கொடுக்க வேண்டும் எனவும் இதனை வெளியே சொல்லக்கூடாது எனவும் கூறி மிரட்டி விட்டு அதிகாலையில் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளான். போலீசார் சதீசை கைது செய்யும்போது போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடினார்.

    அப்போது வழுக்கி விழுந்ததில் ஒரு கை, கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவனை பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தாம்பரம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    மகளிர் போலீஸ் அவனிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இளம்பெண் பலாத்கார வழக்கில் கொள்ளையன் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில் ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.
    திருவள்ளூர் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் சாலையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதை கண்ட லாரி டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார். இந்த விபத்தில் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இதுகுறித்து மேல்நல்லாத்தூர் வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    ×