என் மலர்
திருவள்ளூர்
- குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் ஒன்று பூண்டி ஏரி.
- கண்டலேறு-பூண்டி கால்வாயின் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியை ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் ஒன்று பூண்டி ஏரி.
ஆந்திர அரசுடனான கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூரம் கால்வாய் அமைக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது.
இந்த நிலையில் கண்டலேறு-பூண்டி கால்வாயின் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியை ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
மே 8-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 2.67 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்தாலும் சமீபத்தில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'ஒரு சில நாட்களில் ஏரிக்கு நீர் வரத்து நின்றுவிடும் என்று எதிர்பார்க்கிறோம். கண்டலேறு-பூண்டி கால்வாயின் 3.8 கி.மீ பாயிண்ட் முதல் 10-வது கிலோ மீட்டர் வரை சேதமடைந்த பகுதிகளில் கான்கிரீட் அமைக்கும் பணி தொடங்கப்படும்' என்றார்.
ரூ.24 கோடி மதிப்பிலான பணிகளில் 40 சதவீதம் இன்னும் முடியாமல் உள்ளது. அப்பணிகளை செய்து முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
- பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
- பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இங்கு சுமார் 250 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது போதிய கழிவறை வசதி இல்லை, வகுப்பறை ஜன்னல்கள் உடைந்து காணப்படுகிறது. பள்ளியை சுற்றி சுற்றுசுவர் இல்லாததால் மாடுகள் பள்ளிக்குள் புகுந்து விடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. பள்ளியின் சமையலறைக்கு சென்று பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்டு இருந்த சத்துணவை சாப்பிட்டு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
மேலும் ஆசிரியரிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அப்போது ஊராட்சி தலைவர் பவானி கங்கை அமரன், தலைமை ஆசிரியர் பியூலா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
- புகைப்படம் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், உள்ளிட்ட 52 மனுக்கள் பெறப்பட்டது.
பொன்னேரி:
மாவட்ட ஆட்சியர் ஆல் பி. ஜான்வகீஸ் உத்தரவின் படி பொன்னேரி அடுத்த பண்டிக்காவனூர் ஊராட்சியில் குடும்ப அட்டை பெயர் திருத்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மின்னணு அட்டையில் மாற்றம், புகைப்படம் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், உள்ளிட்ட 52 மனுக்கள் பெறப்பட்டது. இவற்றில் 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலர் சண்முகசுந்தரம், தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் சரண்யா சரவணன், கிராம உதவியாளர் மலர்விழி மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பொன்னியம்மன் மேடு காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் வேதநாதன்.
- வேதநாதன் விசாரித்த போது போலீஸ் போல் நடித்து டிப்-டாப் வாலிபர் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
திருநின்றவூர்:
செங்குன்றம், பொன்னியம்மன் மேடு காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் வேதநாதன்(23).இவர் ஆவடி பஸ் நிலையத்தில், செங்குன்றம் செல்ல நேரு பஜார் மார்க்கெட் வழியாக நடந்து சென்றார்.
அப்போது வேதநாதனை வழிமறித்த டிப்-டாப் ஆசாமி, தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்றும் மப்டி உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவரிடம், உன் மேல் சந்தேம் உள்ளது. நீ ஒரு பெண்ணை பஸ்நிலையத்தில் இருந்து கடத்திச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. உன்னை கைது செய்ய வந்துள்ளேன். கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன வேதநாதன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறி தான் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தார்.
அதனை வாங்கிக் கொண்ட டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் சந்தேகம் அடைந்த வேதநாதன் விசாரித்த போது போலீஸ் போல் நடித்து டிப்-டாப் வாலிபர் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஆவடி போலீஸ் நிலையத்தில் வேதநாதன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நான் அ.தி.மு.க. கவுன்சிலர் என்பதால் என்னை திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர்.
- வெளி நடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மண்டலகுழு கூட்டம் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தரம் இந்துஜா பள்ளிக்கான குத்தகை, மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கே.கார்த்திக் பேசுகையில், எனது 7-வது வார்டில் ஹன்சா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பூமி பூஜை போடுவதாக அதிகாரிகள் தரப்பில் எனக்கு அழைப்பு விடுத்தனர்.ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. நான் அ.தி.மு.க. கவுன்சிலர் என்பதால் என்னை திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர். எனது வார்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. நான் பல மாதங்களாக போராடி கொண்டு வந்த பாதாள சாக்கடைத் திட்டத்தையும் பூஜை போடவிடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். எனவே வெளி நடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.
- பொன்னேரியை அடுத்த வேண்டாக்கம் தசரத நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்.
- பொன்னேரி போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த வேண்டாக்கம் தசரத நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி மெக்கானிக். இவரது மனைவி சாந்தகுமாரி.
நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அவரது சத்தம் கேட்கவே கணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வருகிற 13-ந்தேதி காலையில், தேரோட்டம் நடைபெறும்.
- 15-ந்தேதி கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.
திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனிபிரமோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 13-ந்தேதி காலையில், தேரோட்டம் நடைபெறும். வரும் 15-ந்தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
- இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கியதோடு மருந்து மாத்திரைகளையும் வழங்கினர்.
- மருத்துவ முகாமில் திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சென்னை மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை, விடிவெள்ளி திருநங்கைகள் நலவாழ்வு சங்கம் மற்றும் பூந்தமல்லி தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு விடிவெள்ளி நலவாழ்வு சங்கத்தின் தலைவர் விஜி தலைமை வகித்தார். பொருளாளர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில் தனியார் மருத்துவமனை மருத்துவர் மலர்மண்ணன் பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம், கண், காது, மூக்கு, தொண்டை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கியதோடு மருந்து மாத்திரைகளையும் வழங்கினர்.
இந்த மருத்துவ முகாமில் திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விடிவெள்ளி திருநங்கைகள் நலவாழ்வு சங்கத்தின் திட்ட மேலாளர் நாச்சியா உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- தொடுகாடு பகுதியில் 5½ ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு.
- எந்திரங்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை பொக்லைன் மூலம் முழுவதுமாக அகற்றினார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளுரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு கிராமத்தில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தது.
அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடுகாடு கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தொடுகாடு பகுதியில் 5½ ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வந்ததை உறுதி செய்தனர்.
மேலும் அந்த இடத்தில் இருந்த இரும்பு தகடுகள், எந்திரங்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை பொக்லைன் மூலம் முழுவதுமாக அகற்றினார்கள்.
மேலும் மீண்டும் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வருவாய்த்துறையினர் அறிவிப்பு பலகையும் அந்த இடத்தில் வைத்தனர். மீட்கப்பட்ட இந்த அரசின் சொத்து மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
இனிமேலும் அரசு நிலத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் எச்சரித்தார்.
- மீன்பிடித் துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
- தமிழக மீன்வளத்துறை சார்பில் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பொன்னேரி:
பொன்னேரிஅடுத்த, பழவேற்காட்டில் 16 குப்பங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்று விட்டு முகத்துவாரம் வழியாக கரை திரும்பும் படகுகளை மீனவர்கள் பல ஆண்டுகளாக உப்பங் கழி ஏரிக்கரையில் நிறுத்தி வருகின்றனர். காமராஜர், அதானி துறைமுகம் ஆகியவற்றின் வருகையால் கடலும், ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுக்கள் உருவாகி இயல்புநிலை நீரோட்டத்தில் தடை ஏற்பட்டு ஏரியில் நீர் கொந்தளிப்பு ஏற்படும் போது கரையோரம் நிறுத்தப்படும் படகுகள், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் மீன்பிடித் துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
அதன் அடிப்படையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரங்கம் குப்பம்-வைரவன் குப்பம் இடையே 500 மீட்டர் இடைவெளியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, தேசிய வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக தமிழக மீன்வளத்துறை சார்பில் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அப்பகுதி மீனவர்களின் எதிர்ப்பால் மாற்று இடத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் அங்குள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
பெரும்பாலான மீனவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் பாதுகாப்பானது அல்ல என்பதால், கூனங்குப்பம் வடக்கு பகுதியில் மீன் பிடி துறைமுக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கூறுகையில்:-
மீனவர்களின் கருத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீன்பிடி துறைமுகத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- மர்மநபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
- இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுனை சேர்ந்தவர் ஷெரீப் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே சென்றார். வீட்டில் மனைவி காஜிதா மட்டும் இருந்தார்.
அப்போது வீட்டிற்கு வந்த 2 பேர் ஆட்டோ சவாரிக்கு வேண்டுமென கேட்டனர். தனது கணவர் வீட்டில் இல்லை வெளியே சென்று உள்ளார் என தெரிவித்தார். அந்த மர்மநபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஏலம் விடவில்லை என கூறப்படுகிறது.
- திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா மற்றும் கோயில் இணை ஆணையரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.
21-ந் தேதி அஸ்வினி விழாவும், 22-ந் தேதி பரணி விழாவும், 23-ந் ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பல் விழாவும் 24-ந் தேதி இரண்டாம் தெப்பல் விழாவும், 25-ந் தேதி மூன்றாவது தெப்பல் விழாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் பக்தியுடன் வழிபடுவார்கள். திருத்தணி மலையில் உள்ள பழக்கடை, பூக்கடை, பிரசாத கடை, டீக்கடை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றவும் திருத்தணி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் எடுக்க முயற்சித்தது.
ஆனால் வழக்கமாக கடை நடத்த ஏலம் விடப்பட்டு அதன் அடிப்படையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள வியாபாரிகள் கடையை நடத்தி வந்துள்ளனர்.
தற்போது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஏலம் விடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு கடையை அகற்ற கோவில் நிர்வாகம் முற்பட்டதால் வியாபாரிகள் கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா மற்றும் கோயில் இணை ஆணையரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி அதனால் நூற்றுக்கணக்கானோர் பிழைத்து வரும் நிலையில் கடையை இடிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் திருத்தணி மலைப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.






