search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி முருகன் கோவிலில் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்
    X

    திருத்தணி முருகன் கோவிலில் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஏலம் விடவில்லை என கூறப்படுகிறது.
    • திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா மற்றும் கோயில் இணை ஆணையரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.

    21-ந் தேதி அஸ்வினி விழாவும், 22-ந் தேதி பரணி விழாவும், 23-ந் ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பல் விழாவும் 24-ந் தேதி இரண்டாம் தெப்பல் விழாவும், 25-ந் தேதி மூன்றாவது தெப்பல் விழாவும் நடைபெறுகிறது.

    இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் பக்தியுடன் வழிபடுவார்கள். திருத்தணி மலையில் உள்ள பழக்கடை, பூக்கடை, பிரசாத கடை, டீக்கடை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றவும் திருத்தணி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் எடுக்க முயற்சித்தது.

    ஆனால் வழக்கமாக கடை நடத்த ஏலம் விடப்பட்டு அதன் அடிப்படையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள வியாபாரிகள் கடையை நடத்தி வந்துள்ளனர்.

    தற்போது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஏலம் விடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு கடையை அகற்ற கோவில் நிர்வாகம் முற்பட்டதால் வியாபாரிகள் கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா மற்றும் கோயில் இணை ஆணையரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி அதனால் நூற்றுக்கணக்கானோர் பிழைத்து வரும் நிலையில் கடையை இடிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் திருத்தணி மலைப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    Next Story
    ×