என் மலர்
திருவள்ளூர்
- சுதந்திர தினத்தன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பிரச்சனை நடைபெறாத வகையில் நடவடிக்கை.
- கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றுவதற்கு அவரது சாதியை காரணமாக காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு தலைமைச் செயலாளர் இன்று நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களோடு நேரடியாக கலந்துரையாடினார்.
தொடர்ந்து பல்வேறு துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றுவது குறித்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சுதந்திர தினத்தன்று இவ்வூராட்சியில் எவ்வித பிரச்சனைகளும் நடைபெறாத வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை தலைமைச் செயலாளர் உறுதி செய்து, தேசிய கொடிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், தலைமைச் செயலாளர் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடிக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடலில் மூழ்கிய 3 சிறுவர்கள் மற்றும் சிறுமியை பற்றியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் கடற்கரையில் சோகத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
- திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடலில் மூழ்கிய 4 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் கரீம் மொய்தீன். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இன்று காலை 9 மணிக்கு திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கடலில் குளிக்க வந்தனர்.
அனைவரும் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று கடலில் ராட்சத அலை எழுந்தது.
இதில் குளித்துக்கொண்டிருந்த கபீர் (வயது24), சிறுமி அம்ரீன் (வயது18), ஆபான் (வயது14), அவர்களது நண்பர் சபரி (வயது16) ஆகிய 4 பேரை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
அருகில் இருந்த உறவினர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் அலறிதுடித்தனர். இதனை கண்ட அருகில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் மூழ்கிய 3 சிறுவர்கள் மற்றும் சிறுமியை பற்றியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் கடற்கரையில் சோகத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடலில் மூழ்கிய 4 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி அவர்கள் இருவரும் இறால் பண்ணைக்கு வேலைக்கு சென்றனர்.
- எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வில்லியர் காலனி, ரேட்டம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சந்தியா (வயது13), முத்துவின் தங்கை ரேவதியின் மகள் தீபா (14). இருவரும் அதேபகுதியில் வசித்து வந்தனர்.
சந்தியாவும், தீபாவும் எண்ணூர் சிவன்படை குப்பம் அருகில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்து வந்தனர். காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடுவார்கள்.
கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி அவர்கள் இருவரும் இறால் பண்ணைக்கு வேலைக்கு சென்றனர். அதன்பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து முத்து, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சந்தியா, தீபா ஆகிய 2 சிறுமிகளையும் தேடி வருகிறார்கள்.
சிறுமிகள் காணாமல் போய் 25 நாட்கள் ஆகியும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- புழல்த அடுத்த லட்சுமிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள்.
- புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல்த அடுத்த லட்சுமிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இன்று காலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதிய அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
- கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகம் பயன்பெறுகின்றனர்.
திருத்தணி:
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.177 கோடியில் 2 புதிய அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்து நிதி ஓதுக்கி உள்ளது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த புதிய அணையால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது என்ற வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். இந்த புதிய அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து கொசஸ்தலை ஆறு உருவாகி நகரி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, சிவாடா, ஊத்துக்கோட்டை வழியாக பூண்டி ஏரியில் சென்று கலக்கிறது.
இதனால் கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகம் பயன்பெறுகின்றனர். பல பகுதியில் இந்த தண்ணீர் குடிநீராகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஆந்திர அரசு சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் அணை கட்டி கொசஸ்தலை ஆற்றுக்கு வர வேண்டிய பெருவாரியான தண்ணீரை தடுத்து தேக்கி உள்ளது. இந்த நிலையில் ஆந்திர அரசின் தற்போதைய முடிவின்படி கொசஸ்தலை ஆற்றில் 2 இடங்களில் புதிய அணை கட்ட முடிவு செய்து இதற்காக ரூ.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த அணைகள் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கார்வேட் நகரம் தாலுகாவில், கத்திரிபள்ளி பகுதியில், ரூ.97 கோடி மதிப்பில் 540 ஏக்கர் பரப்பிலும், நகரி அடுத்த, புக்க அக்ரஹாரம் அருகே, ரூ.72 கோடி மதிப்பில், 420 ஏக்கர் பரப்பிலும் அணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய அணைகளால் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்று ஆந்திர மாநில நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த அணைகள் கட்டும் பணிகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் டெண்டர்கள் பெறப்படும் என்றுதெரிகிறது. இது திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
இது தொடர்பாக பள்ளிப்பட்டை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
கொசஸ்தலை ஆற்றில் ஏற்கனவே கட்டப்பட்ட அணை, மற்றும் தற்போது கட்டப்பட உள்ள 2 அணைகள் என்று 3 அணைகளால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் வராமல் தடுத்து நிறுத்தப்படும். இதனால் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை நம்பிஇருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதனை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
இதேபோல் சென்னை மக்களுக்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கொசஸ்தலை ஆற்று தண்ணீர் பூண்டி ஏரிக்கும் செல்லும். புதிய அணைகளால் பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வருவது தடைபட்டு சென்னையும் பாதிக்கப்படும்.
கொசஸ்தலை ஆறு ஆந்திராவில் 8 ஊராட்சிகளில் மட்டுமே பாயும் நிலையில் அங்கு புதிதாக 2 அணைகள் கட்டுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசின் புதிய அணை கட்டப்படும் அறிவிப்பால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- திருப்பாச்சூர் அருகே திடீரென முன்னாள் சென்ற வேன் திரும்பியது. இதில் சாந்தகுமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பலமாக மோதியது.
- தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 30). இவர் கடம்பத்தூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.
திருப்பாச்சூர் அருகே திடீரென முன்னாள் சென்ற வேன் திரும்பியது. இதில் சாந்தகுமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நரிக்குறவர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வருகின்றனர்.
- நரிக்குறவர்கள் மாற்று இடம் தரும் வரை நாங்கள் இடத்தை விட்டு காலி செய்ய மாட்டோம்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆறு ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. ஆரணி ஆற்றின் கரையோரத்தில் பொன்னேரி வருவாய் கோட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவுப்படி இவர்களுக்கு கடந்த 1 வாரமாக நோட்டீஸ் கொடுத்து ஒட்டி வந்தனர். இந்த நிலையில் குன்னம் சேரி ஆரணி ஆற்றின் கரையோரத்தில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை பொதுப் பணித்துறை- வருவாய் துறை அதிகாரிகள் 21 நாட்களில் காலி செய்ய நோட்டீஸ் கொடுக்க வந்தனர் இதனை அறிந்த அப்பகுதி நரிக்குறவர்கள் ஒன்று சேர்ந்து கடந்த 20 வருடமாக இப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் சாலை வசதி, குடிநீர், மின்சாரம் கொடுத்து குடியிருக்க செய்த அரசாங்கம், திடீரென காலி செய்ய சொல்வதால் குழந்தைகளுடன் எங்கு செல்வோம் எனவும், மழைக்காலத்தில் எங்கு போய் தங்குவோம் என்றும் கேட்டனர்.
பள்ளியில் படித்து வருகின்ற பிள்ளைகளுக்கு என்ன வழி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, அனைத்தும் இதே இடத்தில் இருப்பதாகவும் எப்படி, அட்ரஸ் இல்லாமல் வாழ்வது என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனிடயே நரிக்குறவர்கள் மாற்று இடம் தரும் வரை நாங்கள் இடத்தை விட்டு காலி செய்ய மாட்டோம் என தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பொது மக்களுக்கு இலவசமாக தேசிய கொடியினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பா.ஜ.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் நகராட்சி அதிகாரிகள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியினை வழங்குவதற்காக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சிலரிடம் நன்கொடை வசூலித்ததாக கூறப்படுகிறது.
அந்த பணத்தில் தேசிய கொடியினை வாங்கி பொது மக்களுக்கு வழங்காமல் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறி பா.ஜ.க.வினர் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரினார்கள்.
பா.ஜ.க. மாவட்ட தலைவர் சரவணன், துணைத் தலைவர் சோமு ராஜசேகர் தலைமையில் நேற்று இரவு 8 மணி முதல் 12 மணி வரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, தகவல் அறிந்து வந்த போலீசார் முன் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக்கூடாது என்பதால் அமைதியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை கேட்காமல் பா.ஜ.க.வினர் தேசிய கொடியில் மோசடி செய்த அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக தேசிய கொடியினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பின்னர் நகராட்சி நிர்வாகம் இன்று மாலைக்குள் அனைத்து வீடுகளுக்கும் கொடி வழங்குவதாக தெரிவித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் பா.ஜ.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- கிராமசபை கூட்டங்களில் ஊராட்சிகளின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
- கிராம ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடப்படும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 1158 கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கிராமசபை கூட்டங்களில் ஊராட்சிகளின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுதல், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஊரகம் மற்றும் பிறதுறை, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு திட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகள் என மொத்தம் 1158 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.
கூட்டம் நடைபெறும் இடம், நேரம் குறித்த தகவல்கள் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடப்படும்.
இந்த கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி பகுதியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் பங்கேற்க வேண்டும்.
கிராமசபை கூட்டத்தின் விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த தகவலை 3 மாவட்ட கலெக்டர்களும் தெரிவித்து உள்ளனர்.
- கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது.
- சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. 1944-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3. 231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியின் அருகே நீரியல் ஆய்வுக்கூடம் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு, மேட்டூர் அணை உள்பட அனைத்து நீர்த்தேக்கங்களின் வடிவமைப்பு மாதிரிகள் இந்த நீரியல் ஆய்வு கூடத்தில் உள்ளன. அணை கட்டும்போது அங்குள்ள மண்ணின் தன்மை, எத்தனை அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
மதகுகள் எவ்வாறு அமைக்க வேண்டும், அந்த மதகுகள் வழியாக அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் திறந்து விடலாம், உபரி நீர் செல்லும் பாதை ஆகியவற்றை இந்த ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்பித்த பின்னர் தான் அணை கட்டுவது வழக்கம்.
மேலும் தண்ணீரின் தன்மை கூட இங்கு ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இதுபோன்ற நீரியல் ஆய்வுகூடம் கிடையாது. அந்த வகையில் பூண்டி ஏரியில் தேங்கும் தண்ணீர் அங்குள்ள கிணறு மதகு வழியாக நீரியல் ஆய்வு கூடத்துக்கு செல்வது வழக்கம்.
கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. அப்போது தண்ணீரின் அழுத்தத்தால் ஏரியின் அருகே உள்ள கிணறு மதகு சேதமடைந்து நீரியல் ஆய்வுக்கூடத்தில் வெள்ளம் பாய்ந்தது.
நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 8 மீட்டர் ஆழம், 5 மீட்டர் அகலத்தில் கிணறு மதகுகள் அமைக்க உள்ளனர். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிணறு மதகுகள் அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்படும் என்று உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணா தெரிவித்தார்.
- திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரம் அருகே வரும்போது திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சரக்கு லாரி கார் மீது மோதியது.
- கார் நொறுங்கியதில் காரை ஓட்டி வந்த குபேரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.வி.எஸ். குபேரன்(வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் திருவள்ளூரில் சினிமா தியேட்டர் விடுதி செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்தமான நிலம் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ளது. அங்கு இவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது.
ஆந்திர மாநிலம் புத்தூரில் செங்கல் சூளை மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டு மீண்டும் தனக்கு சொந்தமான காரை அவரே ஓட்டிக்கொண்டு திருத்தணி வழியாக தன்னுடைய கிராமத்திற்கு வந்துள்ளார். திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரம் அருகே வரும்போது திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சரக்கு லாரி கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியதில் காரை ஓட்டி வந்த குபேரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று குபேரன் பிணத்தை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் மற்றும் லாரியை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராயபுரம்:
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(59). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 9-ந்தேதி இரவு சேகர் உணவு வாங்கு வதற்காக பெருவாயல் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயம்அடைந்த சேகர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சேகரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் உயிருக்கு போராடி காத்திருக்கும் மற்ற நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது.






