என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடந்த 2 மாதத்திற்கு முன்பு உதயகுமாரின் தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
    • நண்பர்கள் வேலைக்கு சென்றபோது, உடல் நிலை சரியில்லை எனக்கூறி உதயகுமார் மட்டும் வீட்டில் இருந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஜீவானந்தம் தெருவில் வசித்து வந்தவர் உதய குமார் (வயது25). என்ஜினீயர். தஞ்சாவூர் மாவட்டம் மனத்திடல் கிராமத்தைச் சேர்ந்த இவர் மணவாளநகரில் நண்பர்களுடன் தங்கி மப்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு உதயகுமாரின் தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதற்காக சொந்த ஊருக்கு சென்று வந்த பின்னர் உதயகுமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். தாயின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் நண்பர்களிடம் புலம்பினார். அவருக்கு நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். காலையில் நண்பர்கள் வேலைக்கு சென்றபோது, உடல் நிலை சரியில்லை எனக் கூறி உதயகுமார் மட்டும் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் பணி முடிந்து அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள மின் விசிறியில் உதயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மணவாள நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய் இறந்த சோகத்தில் மன வேதனையில் இருந்த உதயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தஞ்சாவூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமழிசை பஸ் நிறுத்தத்தில் நின்றபோது மர்ம நபர்கள் டிரைவர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்தது விசாரணை நடத்தி வந்தனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மாநகர பஸ் கடந்த வாரம் திருமழிசை பஸ் நிறுத்தத்தில் நின்றபோது மர்ம நபர்கள் டிரைவர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தது விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டிைரவரை தாக்கியதாக திருமழிசை பிரையாம்பத்து பகுதியைச் சேரந்த வினோத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் சதீஷ், மகேஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • திருவள்ளூர் வரதராஜபுரம் ராகவா நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன்.
    • திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வரதராஜபுரம் ராகவா நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன். தனியார் தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 13-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 31 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அலெக்ஸ்பாண்டியன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக்கொண்டனர்.
    • பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவர் தினேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    திருவள்ளூர்:

    சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரிகளில் திருத்தணி, அரக்கோணம், கடம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் புறநகர் ரெயிலில் பயணம் செய்து சென்னை சென்று வருவது வழக்கம்.

    இதில் இருதரப்பு மாணவர்களிடையே சென்னையிலும், பஸ், ரெயில்களிலும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. ரூட்டு தல பிரச்சினையில் அவர்கள் கத்தி, அதிவாளுடன் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வந்தது.

    ஏற்கனவே ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று அறிவுரைகள் வழங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. எக்கனாமிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வரும் படித்து வரும் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பர் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மின்சார ரெயிலில் வந்தார். அவர் ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அங்கிருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக்கொண்டனர். இந்த தாக்குதலில் மாணவர் தினேசின் தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் பல மாணவர்களும் காயம் அடைந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தது வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவர் தினேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 12 தையல் போடப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் துணை போலீஸ் சூப்பரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி குபேந்திரன் சாயு தண்ணீரில் மூழ்கினார்.
    • குபேந்திரன் சாயு உடல் பிணமாக கரை ஒதுங்கியது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன மாங்காடு குப்பம் பகுதியை சேர்ந்தவர் துல்லா குட்டி (வயது 65). இவர் 12 பேருடன் படகில் சென்று பழவேற்காடு ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது வலையை இழுக்கும்போது சேற்றில் சிக்கி துல்லா குட்டி மூழ்கினார். அவரை மற்ற மீனவர்கள் மீட்டபோது அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரிந்தது.

    நேபாள நாட்டை சேர்ந்தவர் குபேந்திரன் சாயு (வயது22). செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில உள்ள ஹாலோ பிளாக் (சிமெண்ட் செங்கல் தயாரிப்பு) கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் சாயு உடன் வேலை செய்யும் நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்தார்.

    கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி குபேந்திரன் சாயு தண்ணீரில் மூழ்கினார். நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் குபேந்திரன் சாயு உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கோவில் திருவிழா.
    • கோவில் திருவிழா பலத்த பாதுகாப்புடன் நடந்தது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு சமுதாயத்தினர் கோவில் விழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை நேற்று முன்தினம் இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேசினார். முடிவு எட்டப்படாத நிலையில், இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஒ. ஹஸ்ரத்பேகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை தாழவேடு கிராமத்தை சேர்ந்த இரு சமூகத்தினரும் ஆர்.டி.ஒ. தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். நேற்று காலை 11 மணிக்கு ஆர்.டி.ஒ. ஹஸ்ரத்பேகம், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மத சுதந்திரம் என்பது அனைவருக்கும் வழங்கப்பட்ட உரிமை, இந்த திருவிழாவால் மாற்று சமுதாயத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் விழாவை நடத்த தடையில்லை என ஆர்.டி.ஒ. ஹஸ்ரத்பேகம் தெரிவித்தார். பின்னர் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் விழா நடத்த சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் திருவிழா பலத்த பாதுகாப்புடன் நடந்தது.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பவித்ரா (வயது 22). இவர் ஆர்.கே. பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் காலனியை சேர்ந்தவர்.

    சில மாதங்களுக்கு முன் சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று காலை கொண்டாபுரம் காலனியில் உள்ள சவுந்தரராஜன் வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கினார்கள். இதை பார்த்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 75-வது சுதந்திர தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    • பல்வேறு துறைகளின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பை ஏற்று 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த 75-வது சுதந்திர தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

    மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 20 காவலர்களுக்கு பதக்கமும் நற்சான்றிதழ் வழங்கினர். மேலும் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் சீப்பாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயகுமார், சப்-கலெக்டர் மகாபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, ஜேசுதாஸ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவர்ஷன் வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ராஜலஷ்மி, துணைப் போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    இதேபோல் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    • சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 40). லாரி டிரைவரான இவர் கடந்த 7-ந் தேதி புனேயில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு வந்துள்ளார். அவருடன் மற்றொரு டிரைவரான அயப்பன் என்பவரும் உடன் இருந்தார். அவர்கள் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகளை இறக்கிவிட்டு மது குடித்ததாக தெரிகிறது. அப்போது மது போதையில் செல்வமணி லாரியின் மேல் படுத்து தூங்கினார்.

    மற்றொரு டிரைவரான அயப்பன் லாரியின் உள்ளே படுத்துக்கொண்டார். நள்ளிரவில் செல்வமணி போதையில் லாரியின் மேலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அயப்பன் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வமணி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் செயலைத் தடுத்திடும் வகையில் உரிய சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
    • தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    பூந்தமல்லி:

    சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2650 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 3 ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருமண மண்டபத்திற்கு உள்ளேயும், சிறப்பு அழைப்பாளர்கள் மண்டபத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக அரங்கிலும் அமர்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

    இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். டிடிவி தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு அடையாறு, கிண்டி, பட்ரோடு, நந்தம்பாக்கம், ராமாபுரம், போரூர், 200 அடி ரோடு, வானகரம் வழியாக 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்தார். வரும் வழியில் மேளதாளம் முழங்க டிடிவி தினகரனுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளைப் பாதுகாக்கப் போராடும் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வீரத்தலைமையின் கீழ் உண்மைத் தொண்டர்களாக என்றும் பயணிப்பது.

    ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறச்செய்ததோடு, கழகத்தை அனைத்து நிலைகளிலும் கட்டியெழுப்பி, எதிர்வரும் களத்திற்கு ஆயத்தமாக்கி வரும் டி.டி.வி. தினகரனுக்கு இப்பொதுக்குழு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

    ஆடு, மாடு வழங்கும் திட்டம் மற்றும் மக்கள் வாகனத்திட்டம், தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பெட்டகம் திட்டம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம், அம்மா குடிநீர் திட்டம், அம்மா சிமெண்ட் திட்டம் மற்றும் அம்மாவின் பெயரில் இயங்கிய மினி கிளினிக் ஆகியவற்றை முடக்கி வைத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு இப்பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் செயலைத் தடுத்திடும் வகையில் உரிய சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு அமைத்துள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிடவும், மத்திய அரசின் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்து முன்னுதாரணத்தைக் கொண்டு உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களின் விடுதலையையும் மேற்கொள்ள வேண்டும்.

    மக்களிடமிருந்து வரியைப் பல வகையில் பறிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தி.மு.க. அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    இல்லத்தலைவிகளுக்கான உரிமைத் தொகையான ரூ.1000 மற்றும் கேஸ் சிலிண்டருக்கான ரூ.100 மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு உடனடியாக நிறைவேற்றட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    விடியல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு யாருக்கும் விடியலைத் தராத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    தி.மு.க. ஆட்சியின் இந்த அவலங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டும் வகையில் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.

    ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் அனைத்து பலத்தோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியபோதும், தேர்தல் களத்தில் நின்று கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், கடுமையாக போட்டியிட்டவர்களுக்கும், உழைத்திட்ட கழகத்தினர் அனைவருக்கும் இப்பொதுக்குழு தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.

    மேலும், 2024-ல் நடைபெற இருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கு கழகம் அனைத்து வகையிலும் ஆயத்தமாகி வரும் நிலையில், கழகப் பணிகளை எல்லா நிலைகளிலும் மேலும் தீவிரப்படுத்திட கழகப் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலின்படி செயல்பட இப்பொதுக்குழு உறுதி ஏற்கிறது.

    கழகப் பொறுப்புகளுக்கு பொதுச்செயலாளர் அவர்களால் செய்யப்பட்ட நியமனங்களையும் இப்பொதுக்குழு அங்கீகரிக்கிறது. கழக சட்ட விதி எண்கள் 24, 25 மற்றும் 26 ஆகியவற்றின் படி நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட கழக பொதுச்செயலாளர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கான பதவிக்காலம் வருகிற 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது. இப்பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் போது, துணைத்தலைவர் அவர்களால் தற்போது கூடுதலாக சேர்த்து கவனிக்கப்பட்டு வரும் தலைவர் பதவிக்கான தேர்தலையும் நடத்துவது என இப்பொதுக்குழு ஏக மனதாக தீர்மானிக்கிறது.

    • சிறுளபாக்கம், அண்ணா மலைசேரி குப்பத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது.
    • பள்ளியில் குடிநீருக்கு பயன்படுத்திய சுகாதாரமற்ற தண்ணீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சிறுளபாக்கம், அண்ணாமலைசேரி குப்பத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பள்ளியில் படித்த 32 மாணவ-மாணவிகளுக்கு திடீரென உடல் நிலைபாதிப்பு ஏற்பட்டது. காய்ச்சலில் அவதிப்பட்டு வரும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    விசாரணையில் பள்ளியில் குடிநீருக்கு பயன்படுத்திய சுகாதாரமற்ற தண்ணீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தப்படுத்தாமல் இருந்ததும் இதனால் தண்ணீர் மாசுபட்டு வந்ததும் தெரியவந்தது தெரிகிறது. இதே போல் அண்ணாமலை சேரி குப்பம் பகுதியில் ஏராளமான பொது மக்கள் வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப் பட்டனர். இதைத் தொடர்ந்து சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது.

    இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 7 மாணவ-மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீரால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் மற்றும் 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். டிராக்டர்கள் மூலம் கிராமத்தில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    • சிறுவாக்கம் என்ற இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடை பெற்று வருகின்றன.
    • மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126 கிலோமீட்டர் தூரம் ஆறு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக பஞ்செட்டி- சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் மீஞ்சூர் அடுத்த சிறுவாக்கம் என்ற இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதற்காக கும்மிடிப்பூண்டியில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. சிறுவாக்கம் பகுதியில் வந்தபோது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி திடீரென லாரியின் மேல் பகுதியில் உரசியது.

    இதில் லாரியில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்தார். சிறிது நேரத்தில் தீ மளமளவென லாரி முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    எனினும் லாரி முழுவதும் எரிந்து நாசம் ஆனது. அதில் இருந்த இரும்பு பொருட்களும் சேதம் அடைந்தன. லாரியில் தீப்பிடித்ததும் டிரைவர் உடனடியாக கீழே இறங்கியதாலும், மின்சாரம் தாக்காததாலும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி உயர் அழுத்த மின் கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×