என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 1158 ஊராட்சிகளில் 15-ந் தேதி கிராமசபை கூட்டங்கள்
- கிராமசபை கூட்டங்களில் ஊராட்சிகளின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
- கிராம ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடப்படும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 1158 கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கிராமசபை கூட்டங்களில் ஊராட்சிகளின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுதல், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஊரகம் மற்றும் பிறதுறை, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு திட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகள் என மொத்தம் 1158 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.
கூட்டம் நடைபெறும் இடம், நேரம் குறித்த தகவல்கள் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடப்படும்.
இந்த கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி பகுதியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் பங்கேற்க வேண்டும்.
கிராமசபை கூட்டத்தின் விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த தகவலை 3 மாவட்ட கலெக்டர்களும் தெரிவித்து உள்ளனர்.






