search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரியில் மதகு கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்
    X

    பூண்டி ஏரியில் மதகு கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்

    • கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது.
    • சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. 1944-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3. 231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியின் அருகே நீரியல் ஆய்வுக்கூடம் உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு, மேட்டூர் அணை உள்பட அனைத்து நீர்த்தேக்கங்களின் வடிவமைப்பு மாதிரிகள் இந்த நீரியல் ஆய்வு கூடத்தில் உள்ளன. அணை கட்டும்போது அங்குள்ள மண்ணின் தன்மை, எத்தனை அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    மதகுகள் எவ்வாறு அமைக்க வேண்டும், அந்த மதகுகள் வழியாக அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் திறந்து விடலாம், உபரி நீர் செல்லும் பாதை ஆகியவற்றை இந்த ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்பித்த பின்னர் தான் அணை கட்டுவது வழக்கம்.

    மேலும் தண்ணீரின் தன்மை கூட இங்கு ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இதுபோன்ற நீரியல் ஆய்வுகூடம் கிடையாது. அந்த வகையில் பூண்டி ஏரியில் தேங்கும் தண்ணீர் அங்குள்ள கிணறு மதகு வழியாக நீரியல் ஆய்வு கூடத்துக்கு செல்வது வழக்கம்.

    கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. அப்போது தண்ணீரின் அழுத்தத்தால் ஏரியின் அருகே உள்ள கிணறு மதகு சேதமடைந்து நீரியல் ஆய்வுக்கூடத்தில் வெள்ளம் பாய்ந்தது.

    நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 8 மீட்டர் ஆழம், 5 மீட்டர் அகலத்தில் கிணறு மதகுகள் அமைக்க உள்ளனர். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிணறு மதகுகள் அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்படும் என்று உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணா தெரிவித்தார்.

    Next Story
    ×