என் மலர்
திருவள்ளூர்
- மாமல்லபுரம் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.
பின்னர் மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இது விடிய விடிய நீடித்தது. பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 12.7 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதேபோல் கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு காரனோடை, தச்சூர், சோழவரம் பஞ்செட்டி தடப்பெரும்பாக்கம் திருப்பாலைவனம் அத்திப்பட்டு, வல்லூர் மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி காணப்படுகிறது. பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியதால் பள்ளம், மேடு தெரியாமல் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் நெடுஞ்சாலை வேண்பாக்கம் மின்சார அலுவலகம் அருகில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் நெடுஞ்சாலை நீண்ட தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மழையின் காரனமாக விடுதிகளில் முடங்கினர். வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வேன், பஸ்களில் வந்தவர்கள் வாகனங்களில் இருந்தபடியே புராதன சின்னங்களை பார்த்துவிட்டு சென்றனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேரிடர் வருவதை முன்னரே கண்டறியும் நவீன வானிலை ஆய்வு ரேடார் மூலம், சர்வதேச தகவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அணுமின் நிலைய வானிலை ஆய்வு நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி - 102
சோழவரம் - 79
பொன்னேரி - 99
ஜமீன் கொரட்டூர்- 9
பூந்தமல்லி - 32
பூண்டி - 13
தாமரைப்பாக்கம் - 44
திருவள்ளூர் - 6
ஊத்துக்கோட்டை - 43
ஆவடி - 46.
- 4,338 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் பெரு மழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறை.
திருவள்ளூர்:
திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-
திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் -8, மற்றும் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள்-39, மிதமான பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் -44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் - 42 ஆக மொத் தம் 133 மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த பகுதிகளுக்கு 42 பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல குழுக்களும், 22 தயார் நிலையில் உள்ள கூடுதல் பாதுகாப்பு குழுக்களும் என மொத்தம் 64 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் முன்எச்சரிக்கை குழுவில் 9 உறுப்பினர்களும், தேடுதல் மற்றும் மீட்பு குழுவில் 12 உறுப்பினர்களும், வெளியேற்றுதல் குழுவில் 31 உறுப்பினர்களும், தற்காலிக தங்கும் முகாம் குழுவில் 27 உறுப்பினர்களும் கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில் 4,338 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 400 தன்னார்வலர்களுக்கு ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப் பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், திருப்பாலை வனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர்-1 மற்றும் எளாவூர் -2 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன.
கால்நடை பராமரித்துறை வாயிலாக கால்நடைகளை காப்பாற்ற 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை வாயிலாக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில் 74,680 மணல் மூட்டைகள், 4945 சவுக்கு மரக்கம்புகள், ஜே.சி.பி. எந்திரங்கள் 35, 43 பொக்லைன் எந்திரங்கள், 111 மரம் அறுக்கும் மின்கருவிகள், 372 கயிறுகள், 86 படகுகள், 28 அதி நவீன நீர் உறிஞ்சும் எந்திரங்கள், 105 ஜெனரேடர், 32 தண்ணீர் லாரிகள், 106 நீர் இறைக்கும் பம்புகள், 631.23 மெ.டன் பிளீச்சிங் பவுடர், 56 தார் பாய்கள், 242 டார்ச் லைட் கள், 1012 மின்கம்பங்கள், 250 மின் மாற்றிகள் ஆகியவை தயாராக உள்ளன. திருவள்ளுர் மாவட்டத்தில் 987.74 கி.மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 8,432 சிறுபாலங்கள் மற்றும் 76 பாலங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள நீர் வரத்து தங்கு தடையின்றி வெளியேற வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில் பொதுமக்கள் பெரு மழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் 24மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், கட்டுப்பாட்டு அறை 044-27664177, 044-27666746- என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், மேலும், வாட்ஸ் அப் எண். 94443178 62-லும் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 24 மணி நேரமும் செயல்படும் இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பேரிடர் காலங்களில் உள்ள குறைகளை பதிவு செய்யவும்.
- அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவுப்படி கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் பேரிடர் காலங்களில் புயல் பாதுகாப்பு மையம், மண்டபங்கள், உணவுகள், மீட்புகுழுக்கள், அனைத்து துறைகள், தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் அவசர கட்டுப்பாடு மையம் திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பேரிடர் காலங்களில் உள்ள குறைகளை பதிவு செய்யவும். இதன் மூலம் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி தாலுகா தொலை பேசி எண்கள் 044-27972252, 944500049-ல் தொடர்பு கொண்டு பேரிடர் காலங்களில் பாதிப்பு குறித்து தொடர்பு கொள்ளலாம் என்று தாசில்தார் செல்வகுமார் தெரிவித்து உள்ளார்.
- மனவேதனை அடைந்த ரோஜா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மோனேஷ் பாபு.என்ஜினீயர். இவருக்கும் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள புண்ணியப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோஜா (வயது27) என்பவருக்கும் 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ரோஜா மன வருத்தத்தில் இருந்தார். மேலும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரோஜா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின.
தாழ்வான இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதேபேல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.
இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2,536 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் 17.66 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,675 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.29 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி. இதில் 194 மி.கன அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 66 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 797 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 53 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 70 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 6 ஆயிரத்து 702 மி.கன அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டதும் உபரி நீர் வெளியேற்றப்படும். தற்போது நீர்மட்டம் 21 அடியை நெருங்கி உள்ள தால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருணின் தாய் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விரைந்து வந்து வருணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண்(வயது20). இவர் ஆவடியை அடுத்த பட்டாபி ராமில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருணின் தாய் குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் வருண் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். தாயின் நினைவால் சரியாக தூங்காமலும், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தாய் இறந்த சோகத்தில் இருந்த வருண் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தாயின் புடவையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வருணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
- சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின்னர்,தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது.கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இக்கோவிலில் கடந்த 25-ம் தேதி துவங்கியது.எனவே,அன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
இந்நிலையில்,நேற்று முன் தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி கொட்டும் மழையிலும் நடைபெற்றது. இதை முன்னிட்டு வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.இதன் பின்னர், திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் பின்னர், சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- வீட்டில் இருந்த பித்தளை சாமான், வெள்ளி பொருட்கள் போன்றவை திருடு போனது தெரிய வந்தது.
- போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் ஜே.நகரை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 42). இவர் தனது மகன் பிரதீப் மற்றும் மகள் அபிநயா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதியன்று தனலட்சுமி தன் பிள்ளைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பித்தளை சாமான், வெள்ளி பொருட்கள் போன்றவை திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து தனலட்சுமி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது.
- திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னை, தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
முதல் மழைப்பொழிவு நவம்பர் 4-ந் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. நவம்பர் 1-ந் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை அம்மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- கந்த சஷ்டி நிறைவடைந்த பின் நேற்று சண்முக கடவுளுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
- சஷ்டி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.
திருத்தணி:
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 26 ஆம் தேதி துவங்கப்பட்ட கந்த சஷ்டி விழாவில் தினசரி காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
கந்த சஷ்டி நிறைவடைந்த பின் நேற்று சண்முக கடவுளுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இன்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தி மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வள்ளி தேவயானை சமேதராய் முருகக் கடவுள் எழுந்தருளினார். தொடர்ந்து திருக்கல்யாண வைபவ சீர்வரிசை நடைபெற்றது. யாக சாலை அமைத்து வைதீக முறைப்படி சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமம், தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் திருத்தணியில் மட்டும் முருகக் கடவுள் சினம் தணிந்து நின்றதால் இங்கு புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சஷ்டி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.
- மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும்.
- கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திருத்தணி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையும் நீடித்து வருகிறது.
சென்னையில் இன்று காலை பலத்த மழை கொட்டியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. ஆந்திராவிலும் கனமழை கொட்டி வருகிறது.
ஆந்திர பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சித்தூர் மாவட்டம் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 33 அடி உயரம் உள்ள இந்த அணை முழுவதும் நிரம்பியது.
இந்த நிலையில் மழை நீடித்து வருவதால் அம்மப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.
இதையடுத்து அம்மப்பள்ளி அணையில் இருந்து 200 கன அடி உபரி நீர் 2 மதகுகள் வழியாக திறக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் அதிகம் தண்ணீர் பாயும்போது திருத்தணி அருகே உள்ள சமந்தவாடா, நெடியம், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கும். எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பா லங்களை பொதுமக்கள் கடக்கும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வழக்கமாக அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பள்ளிப்பட்டு, சமந்தவாடா, நெடியம், திருத்தணி பகுதி வழியாக கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.






