என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
திருத்தணியில் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்
- கந்த சஷ்டி நிறைவடைந்த பின் நேற்று சண்முக கடவுளுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
- சஷ்டி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.
திருத்தணி:
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 26 ஆம் தேதி துவங்கப்பட்ட கந்த சஷ்டி விழாவில் தினசரி காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
கந்த சஷ்டி நிறைவடைந்த பின் நேற்று சண்முக கடவுளுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இன்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தி மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வள்ளி தேவயானை சமேதராய் முருகக் கடவுள் எழுந்தருளினார். தொடர்ந்து திருக்கல்யாண வைபவ சீர்வரிசை நடைபெற்றது. யாக சாலை அமைத்து வைதீக முறைப்படி சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமம், தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் திருத்தணியில் மட்டும் முருகக் கடவுள் சினம் தணிந்து நின்றதால் இங்கு புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சஷ்டி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.







