என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பொன்னேரி அருகே உள்ள லட்சுமி புரம் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • ஏராளமானோர் தண்ணீர் நிரம்பி உள்ள லட்சுமி புரம் அணைக்கட்டை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    பொன்னேரி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்னீத் மலைப்பகுதியில் ஆரணி ஆறு தொடங்குகிறது.

    இந்த ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை கடந்து பழவேற்காடு முகத்து வாரத்தில் கடலில் கலக்கின்றது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதனால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமி புரம் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    தொடர் மழை காரணமாக லட்சுமி புரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி உள்ளது. இதைத் தொடர்ந்து லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து 460 கன அடி மழைநீர் வெளியேறி வருகிறது. அதில் ஏராளமான பேர் மீன்பிடித்து வருகின்றனர். உல்லாச குளியலும் போடுகின்றனர். இதனால் அப்பகுதி சுற்றுலா தளம்போல் மாறி உள்ளது. ஏராளமானோர் தண்ணீர் நிரம்பி உள்ள லட்சுமி புரம் அணைக்கட்டை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    • சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது
    • திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூரில் 19 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    பள்ளிப்பட்டு - 3

    ஆர்.கே.பேட்டை - 5

    பொன்னேரி - 4

    ஜமீன் கொரட்டூர் - 19

    பூந்தமல்லி - 14.5

    திருத்தணி - 17

    திருவாலங்காடு - 8

    ஆவடி - 5

    திருவள்ளூர் - 5

    • 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
    • பொதுமக்கள் தண்ணீரில் நின்றபடி ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் நியாய விலை கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

    தற்போது பருவமழை தொடங்கி மழை பெய்து வருவதால், இந்த நியாய விலை கடையை சுற்றிலும் மழைநீர் தேங்கி வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் தண்ணீரில் நின்றபடி ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பழவேற்காடு முகத்துவாரம் வழியாக வெள்ள நீர் அதிகமாக கடலுக்குள் செல்கின்றன.
    • கடலோர மீனவர்களுக்கான புயல் பாதுகாப்பு மைய கட்டுப்பாடு அறை பழவேற்காட்டில் திறக்கப்பட்டுள்ளன.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சுற்றி 63 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    பழவேற்காடு முகத்துவாரம் வழியாக வெள்ள நீர் அதிகமாக கடலுக்குள் செல்கின்றன. இந்நிலையில் கடலோர மீனவர்களுக்கான புயல் பாதுகாப்பு மைய கட்டுப்பாடு அறை பழவேற்காட்டில் திறக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தெரிவித்ததாவது, கடலோர பகுதி கிராமங்களில் புயல் மழை காரணமாக காணப்படும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அலுவலகத்திற்கு 27976262 ,27972457 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மழையின் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், தகவல் தெரிவித்த உடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    • வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.
    • பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள கல்வெட்டை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வண்ணிப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மூகாம்பிகைநகர் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்நிலையில் தகவல் அறிந்து வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சேர்மன் ரவி ஆகியோர் ஆய்வு செய்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மழைநீர் கால்வாய் தூர்வாரி மழை நீரை அகற்றினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் சிறுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், துணைத்தலைவர் சித்ரா ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் இருந்தனர்.

    அப்போது அப்பகுதி மக்கள் பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள கல்வெட்டை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • மழை நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெளியே செல்லாமல் மழைநீர் ஊருக்குள்ளும் புகும் நிலை உள்ளது.
    • ஊராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டது.

    பொன்னேரி:

    கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக ஆமூர் வெள்ளோடை நரசிங்கபுரம் கொடூர், பெரவளூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் மழைநீர் வழிந்தோடி பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மழைநீர் கால்வாய் வழியாக வெள்ளக்குளம் வழியாக காட்டூர் ஏரியில் கலக்கின்றன.

    இந்நிலையில் மழை நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெளியே செல்லாமல் மழைநீர் ஊருக்குள்ளும் புகும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டது.

    இதனை பொன்னேரி துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மீஞ்சூர் சேர்மன் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், பார்வையிட்டு மழைநீர் கால்வாய் ஓடையை ஆய்வு செய்தனர். பின்னர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வாரி, தனியார் பள்ளி மற்றும் கம்பெனிகள் மழைநீர் கால்வாய் மீது அமைத்துள்ள சிறிய சிமெண்ட் பலகைகளை அகற்றி பெரிய கல்வெட்டு அமைக்க உத்தரவிட்டனர்.

    மேலும் தனியார் குடிநீர் கம்பெனியில் பிளாஸ்டிக் கழிவுகள் ஓடையில் கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் செல்ல வழி இல்லாமல் நிலத்தடி நீர் மாசடைந்து காணப்படுவதால் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி பார்வையிட்டு கம்பெனி நிர்வாகத்திடம் எச்சரிக்கை செய்தார். இதில் நெடுஞ்சாலை துறை அதிகாரி பாலச்சந்தர், ஊராட்சி தலைவர் பாபு, துணைத்தலைவர் சபிதா பாபு ஊராட்சி செயலாளர் நாகம்மாள் மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன் மற்றும் கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • எண்ணூர் அனல் மின் நிலையத்தின் புதிய கட்டுமான பணி நடந்து வருகிறது.
    • மினி வேன் மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    எண்ணூர் அனல் மின் நிலையத்தின் புதிய கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு எண்ணூர் காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித், எர்ணாவூர் குப்பத்தைச் சேர்ந்த சத்யா காவலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் ஏற்றி எடுத்துச் செல்ல முயன்றனர். அவர்களை எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினி வேன் மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • திருமுல்லைவாயல் தென்றல் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.

    திருநின்றவூர்:

    ஆவடியில் அதிகபட்சமாக 17 செ.மீ கொட்டி தீர்த்து உள்ளது. இதன் காரணமாக ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.

    ஆவடி ஸ்ரீராம் நகர், சரஸ்வதி நகர், திருநின்றவூர் பெரியார் நகர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சாலை முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்று வருகின்றன.

    கனமழை காரணமாக ஆவடி போலீஸ் நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் போலீசார் அவதி அடைந்து உள்ளனர். மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஆவடி பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார். தாழ்வான இடங்களில் தேங்கி உள்ள தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. அமைச்சர் சா.மு.நாசர், ஸ்ரீராம் நகர் ,தமிழ்நாடு குடியிருப்பு, சரஸ்வதி நகர் தென்றல் நகர் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு செய்து தேங்கி உள்ள மழை நீரை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருமுல்லைவாயல் தென்றல் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இன்று காலை பலத்த மழை இல்லாததால் பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    மழைநீரை அகற்றுவது குறித்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் 20 மோட்டார் மற்றும் 10 ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணி நடந்து வருகிறது. மேலம் 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.

    • புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • ஏரிகளுக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழையாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2,692 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் நீர் மட்டம் 19 அடியை நெருங்கி உள்ளது. ஏரியில் 18.42 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் புழல் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புழல் ஏரியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

    இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புழல் ஏரிக்கு நீர் வரத்து 2 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஏரியில் இருந்து இன்று மாலை 3மணியளவில் 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,764 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1180 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.64 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்த தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று மாலை உபரி நீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்று கூறி உள்ளார்.

    புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து இன்று ஒரே நாளில் தண்ணீர் திறக்கப்படுவதால் உபரி நீர் செல்லும் பகுதியில் வசிப்பவர்கள், தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இந்த 2 ஏரிகளுக்கு வரும் நீர் வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளை பார்க்க பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். ஏரிகளுக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி. இதில் 212 மி.கன அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 214 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 818 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 280 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 155 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    • சோழிங்கநல்லூர் எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், அயனாவரம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 13 செ.மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்து உள்ளது.
    • அண்ணாபல்கலைக்கழகம் பகுதியில் 12 செ.மீட்டர், டி.ஜி.பி. அலுவலக பகுதியில் 11 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

    திருவள்ளூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழைபெய்து வருகிறது.

    இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கொட்டி வரும் மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்து உள்ளது. இதனால் ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. தாழ்வான இடங்களில் வீடுகளை சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

    இதே போல் சென்னை மாநகராட்சி அலுவலக பகுதி, பெரம்பூர் ஆகிய இடங்களிலும் 17 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது.

    சோழிங்கநல்லூர் எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், அயனாவரம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 13 செ.மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்து உள்ளது.

    அண்ணாபல்கலைக்கழகம் பகுதியில் 12 செ.மீட்டர், டி.ஜி.பி. அலுவலக பகுதியில் 11 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியில் 16 செ.மீட்டர், செங்குன்றத்தில் 14.2 செ.மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 13.6 செ.மீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    பள்ளிப்பட்டு-12

    ஆர்.கே.பேட்டை-23

    சோழவரம்-78

    ஜமீன்கொரட்டூர்-76

    பூந்தமல்லி-55

    திருவாலங்காடு-48

    திருத்தணி-24

    பூண்டி-55

    தாமரைப்பாக்கம்-88

    திருவள்ளூர்-72

    ஊத்துக்கோட்டை-18

    • அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாநில நிர்வாகிகள் கண்ணதாசன், கணேசன், பாண்டியன், தாஸ், குப்புசாமி, மாவட்டச் செய்தி தொடர்பாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் ராஜு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் 50க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

    • போலீசார் நேற்றுமுன்தினம் சின்னம்மாபேட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் சின்னம்மாபேட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த மகேஷ் குமார் (வயது 21), சின்னம்மா பேட்டையை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 20) ஆகிய 2 பேரும் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×