என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பூந்தமல்லி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்தது.

    புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது.

    இதையடுத்து ஏரியில் இருந்து உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து நீர்வந்து கொண்டிருப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பதை 500 கன அடியாக அதிகரிக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21.3 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2862 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.

    ஏரிக்கு நீர்வரத்து 400 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • வயலுார் அகரம் காலனியில் கிருஷ்ணன் கோவிலில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி திருவிழா நடைபெற்றது.
    • மப்பேடு போலீசார் கோவில் நிர்வாகி பெருமாள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வயலுார் அகரம் காலனியில் கிருஷ்ணன் கோவிலில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி திருவிழா நடைபெற்றது.

    இதில் வயலுார் அகரம் காலனி பகுதியில் வசிக்கும் சக்திவேல் (55) என்பவரது வீட்டு அருகே சாமி நிற்காமல் சென்றது. இதனால் சக்திவேல் குடும்பத்தினர் சாமி வீட்டின் முன்பு நிற்காமல் சென்றது குறித்து கோவில் நிர்வாகி பெருமாளிடம் கேட்டனர்.

    அப்போது அவர் உங்கள் வீட்டு முன்பு சாமி நிற்காது. இதை ஊர் மக்கள் கூடி முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்தார்கள்.

    இதை தட்டிக் கேட்ட சக்திவேல், தம்பிகள் சுந்தரம், பாபு, மற்றும் பாபுவின் மகன் சஞ்சய் ஆகியோரை கோவில் நிர்வாகி பெருமாள் மற்றும் அவரது ஆதரவாளர்களான 10 பேர் சேர்ந்து கத்தி, மற்றும் இரும்பு பைப்பால் பலமாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த சக்திவேல், சுந்தரம், பாபு, சஞ்சய் ஆகிய 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் அவர்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் கோவில் நிர்வாகி பெருமாள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதில் பெருமாள் என்பவரை கைது செய்த மப்பேடு போலீசார் தலைமறைவாக இருந்த 10 பேரையும் தேடி வந்தனர்.

    மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவில் திருவிழாவில் 4 பேரை தாக்கிய வழக்கில் ராஜேஷ், அருண்குமார் பாலா, லட்சுமணன், ராமன் மற்றும் கண்ணுார் கிராமத்தை சேர்ந்த துரை ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பாலைவனம்:

    திருப்பாலைவனம் அடுத்த கள்ளூர் ஊராட்சியில் சின்னகள்ளூர், கள்ளூர் காலனி, புதுக்குப்பம், கீரைப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இங்கு 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சேகண்யம் கிராமத்தில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வினியோகம் செய்யப்படுவதால் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில்லை.

    மேலும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக குடிநீர் பைப் லைன் கீழ் பள்ளம் தோண்டி அந்த பள்ளத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தேக்கி அதிலிருந்து குடங்களில் தண்ணீரை சேகரித்து வீடுகளுக்கு பொதுமக்கள் கொண்டு செல்கின்றனர். எனவே கள்ளூர் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பெரியகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் 250 இருந்தது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஒரு நபர் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசார் வருவதை கண்டவுடன் ஓட்டம் பிடித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் 250 இருந்தது தெரியவந்தது.

    போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய முயன்ற திருவள்ளூர் பெரியகுப்பம் கம்பர் தெருவை சேர்ந்த அப்துல் வாகப் (வயது 38) என்பவரை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.

    • பாதுகாப்பில்லாமல் செல்வதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர்
    • விளையாட்டு மைதானம், கழிவறையை சீரமைத்து தர மாணவர்கள் கோரிக்கை

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த திருநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் உள்ள ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டு அதில் உள்ள மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் படித்து வருகின்றனர். அவ்வாறு படிக்கச் செல்லும் மாணவர்கள் சாலையைக் கடந்து அரை கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டி உள்ளதால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பில்லாமல் செல்வதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவும் தயங்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விளையாட்டு மைதானம் மற்றும் கழிவறையை சீரமைத்து தர வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.

    ஊராட்சித் தலைவர் அம்மு சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன், செல்வம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

    • மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் பாஜகவினர் நேரில் பார்வையிட்டனர்
    • நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்

    பொன்னேரி

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக செஞ்சி அம்மன் நகர் பழங்குடியினர் கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. பாதிக்கப்பட்ட கிராமத்தை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் பாஜகவினர் நேரில் பார்வையிட்டனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் மதிய உணவுகள் வழங்கினர்.

    பாஜக நிர்வாகிகள் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரவீன் குமார், பொன் பாஸ்கர், நீலகண்டன், பெருமாள், நந்தன், கோட்டி, ரமேஷ், பிரசன்னா, மீஞ்சூர் சிவராஜ், பழவேற்காடு நிர்வாகிகள் பெருமாள், முக்தா, மகாலட்சுமி, செஞ்சி அம்மன் நகர் டி.கே.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • புழல் ஏரிக்கும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதற்கட்டமாக 100 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தொடங்கிய கன மழை விடிய விடிய நீடித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்ததால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21 அடியாக உயர்ந்து உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில், தற்போது 2850 மில்லியன் கன தண்ணீர் உள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து 642 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் 260 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை பாக்கம், நேமம் போன்ற ஏரிகளும் ஏற்கனவே நிரம்பி காணப்படுவதால் அங்கிருந்தும் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுபணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஏரியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் புழல் ஏரிக்கும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1310 மி.கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 292 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி ஆகும். இதில் 18.76 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2763 மி.கனஅடி தண்ணீரை நிரம்பி உள்ளது.

    பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    • மாணவியை அலமாதி வன்னியன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.
    • அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சோழவரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி அருகில் உள்ள கடைக்கு சென்ற மாணவி பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். விசாரணையில் மாணவியை அலமாதி வன்னியன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    மாணவியை போலீசார் மீட்டனர். இதுகுறித்து அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

    • மும்பையை சேர்ந்தவர் ராகுல் லாரி டிரைவர்.
    • லாரியின் கண்ணாடியை உடைத்து ராகுலின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 5 ஆயிரம்ரொக்கம், 2 செல்போன்கள் திருடி சென்று விட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    மும்பையை சேர்ந்தவர் ராகுல்.லாரி டிரைவர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய்கண்டிகையில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவுக்கு லாரியில் சென்றார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் செங்காளம்மன் கோயில் அருகே லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அவர் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து ராகுலின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 5 ஆயிரம்ரொக்கம், 2 செல்போன்கள் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டுகள் ராவ்பகதூர் செல்வராஜ், லோகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த பாலாஜி, நரேஷ், விஜயன்ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், வருடந்தோறும் பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வாட்டி எடுத்த வெயிலால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

    அதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து மே 5-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் வரத்தால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதை அடுத்து ஜூலை 19-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

    பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது. இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் மதகு கிணறு சேதமடைந்தி இருந்தது. இந்த மதகு கிணற்றை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ. 10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜூலையில் கண்டலே அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெறவில்லை.

    இந்த நிலையில் 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 53. 27 டி. எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து நீர் வரத்தால் கண்டலேறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து வர ஆந்திர அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    எனினும் தற்போது தமிழகத்தில் பலத்த மழை கொட்டி வருவதால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறித்து ஆந்திர மாநில பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஒபுல தாஸ், உதவி பொறியாளர்கள் சந்திர மோகன், பெஞ்சலய்யா ஆகியோர் பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஆந்திராவில் பெய்த பலத்த மழைக்கு நீர்வரத்து அதிகமாகியதால் கண்டலேறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 53.27 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. தமிழக அரசு கேட்டுக் கொண்டால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தயாராக உள்ளோம் என்றனர்.

    பூண்டி ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மதகு கிணறு கிணறுகள் அமைக்கும் பணிகள் மற்றும் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இப்பணிகள் முடிவடைந்த பிறகு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார். அப்போது உதவி பொறியாளர்கள் பழனிகுமார், சதிஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியின் நீர்மட்டம் 24.90 அடியாகவும், 832 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • மங்களம்-ஆரணி இடையே உள்ள தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • தொடர்மழை காரணமாக பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது.

    பெரியபாளையம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்னீத் மலைப்பகுதியில் ஆரணி ஆறு தொடங்குகிறது. இந்த ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை கடந்து பழவேற்காடு முகத்து வாரம் வழியாக கடலில் கலக்கின்றது.

    இந்தநிலையில் பலத்த மழை காரணமாக பெய்த மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி உள்ளது. அணையில் இருந்து 460 கன அடி மழைநீர் வெளியேறி ஏ.ரெட்டிபாளையம் தடுப்பணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதேபோல் மங்களம்-ஆரணி இடையே உள்ள தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்மழை காரணமாக பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது. இதனால் இந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கடந்த ஆண்டு பருவமழையின்போது ஆரணி ஆற்றில் பெரும்பேடு, தத்தை மஞ்சி, ஆண்டாார் மடம், ஏரெட்டிப்பாளையம், கடப்பாக்கம், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தற்போது கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றி வேலன் தலைமையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அப்பகுதியில் மணல் மூட்டைகள் சவுக்கு கம்புகள், கயிறு, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர்மழையால் கடப்பாக்கம் ஊராட்சி ஆண்டார் மடம் பழவேற்காடு சாலையில் போடப்பட்ட தற்காலிகமாக சாலை சேதம் அடைந்தது. இதனை தாசில்தார் செல்வகுமார் பார்வையிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    பழவேற்காடு முகத்துவாரம் வழியாக செல்லும் வெள்ள நீரில் கடல் நீர் புகுந்ததால் ஆரணி ஆற்றின் தண்ணீர் ஆண்டார் மடம் வரை உப்பாக மாறி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் உப்பாக மாறி விடுவதாகவும், விவசாய நிலங்களுக்கு சென்றால் பயிர்கள் கருகிவிடும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது.
    • பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேற்று மாலை உபரி நீர் திறக்கப்பட்டது.

    முதலில் 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 2 ஏரிக ளிலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணிர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 198 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

    புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,726 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 21.20 அடி நீர்மட்டத்தில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1180 கன அடியாக இருந்த நீர்வரத்து 811 கன அடியாக குறைந்து இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,817 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியின் 24 அடி நீர்மட்டத்தில் 20.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    தொடர்ந்து பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். உபரி நீர் வெளியேறும் கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    ×