என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து வந்ததால் இந்த தரைபாலம் நீரில் மூழ்கியது.
    • புதுப்பாளையம்- அஞ்சாத்தம்மன் கோவில் அருகே ரூ.20 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

    பெரியப்பாளையம்:

    கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையத்தில் இருந்து எல்லாபுரம் ஒன்றியம் அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து வந்ததால் இந்த தரைபாலம் நீரில் மூழ்கியது.

    இந்தத் தரைப்பாலத்தை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த தரைப்பாலம் மூழ்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதுப்பாளையம்- அஞ்சாத்தம்மன் கோவில் அருகே ரூ.20 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

    மேலும் இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என்றும் இதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

    • கால்வாய் மூலமாக வரும் நீரால் அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்து வான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது வழக்கம்.
    • தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை சேதப்படுத்தாமல் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூந்தமல்லி:

    போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் நீரால் அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்து வான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் பரணி புத்தூர் அருகே தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால் சாலையை சேதப்படுத்தாமல் புஷ் துரோ முறையில் சாலையின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஒரு கல்வெட்டு 11 மீட்டர் நீளம் கொண்டது, ஐந்து மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரம் கொண்டது போல் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 4-வது கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ரெயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான இந்த பணிகள் தற்போது முதல் முறையாக தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை சேதப்படுத்தாமல் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒரு ஆண்டில் 10 சதவீதம் ஊழல் செய்தால் 5 ஆண்டுகளில் நடக்கும் மொத்த ஊழலால் ஒரு தலைமுறை மேலே உயர்வது தடுக்கப்படும்.
    • பா.ஜ.க.வுக்கு வருகிற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவளிப்பார்கள்.

    அம்பத்தூர்:

    பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில், மாநில மருத்துவ அணி செயலாளர் கோமதி விஸ்வநாதன் ஏற்பாட்டில் மாதவரம் பஜாரில் தாமரை கிளினிக் தொடக்க விழா மற்றும் மாவட்ட பொருளாளர் குமரன் ஏற்பாட்டில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மாத்தூரில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவருக்கு அம்பத்தூர் தொகுதி சார்பில் பாடி மேம்பாலம் அருகே மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

    பின்னர் மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் கல்லூரி முன்பு ஒரு மாணவியின் தந்தை தாக்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது நமது சமுதாயம் எந்த அளவிற்கு கெட்டுப்போய் உள்ளது என்பதை பார்க்க முடியும். சில நேரங்களில் காவல்துறை கடுமையாக தான் இருக்க வேண்டும். காவல்துறையின் கையை கட்டவிழ்த்து விட்டு சில விஷயங்களை தைரியமாக செய்ய சொல்ல வேண்டும்.

    வட மாநிலங்களில் நடந்த கலவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது ஆர்.எஸ்.எஸ். இதை புரியாதவர்கள் ஆர்.எஸ்.எஸ். மீது அபாண்டமாக பொய் சொல்கிறார்கள்.

    கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கூறுவதற்கு முக்கிய காரணம் பா.ஜ.க. தான். சிலிண்டர் வெடி விபத்து என்று கூறி அந்த தாக்குதலை மறைக்க நினைத்த தி.மு.க.வினை தீவிரவாத தாக்குதல் என்று ஒப்புக்கொள்ள வைப்பதற்கு பா.ஜ.க.விற்கு 10 நாட்கள் தேவைப்பட்டது.

    தமிழகத்தில் அரசியல் மாற வேண்டும். ஒரு ஆண்டில் 10 சதவீதம் ஊழல் செய்தால் 5 ஆண்டுகளில் நடக்கும் மொத்த ஊழலால் ஒரு தலைமுறை மேலே உயர்வது தடுக்கப்படும். அது 20 சதவீதமாக இருந்தால் இரு தலைமுறைகள் மேலே வருவது தடுக்கப்படுகிறது.

    இதை மாற்றவும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவும் தினமும் பா.ஜ.க. உழைத்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு வருகிற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவளிப்பார்கள்.

    பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது பெயருக்காக சொல்லப்படுகிறது. இலவச பஸ் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. இதனால் அதனை நம்பி வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். ஊழல் இல்லாத ஆட்சியை தமிழக பா.ஜ.க. வழங்கும். அப்போது மிக பெரிய மாற்றம் தமிழகத்தில் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏரியில் 3 இடங்களில் தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருகிறது.
    • கொரட்டூர் ஏரியில் தொழிற்சாலை கழிவு நீர் கலக்கும் ஜீரோ பாயிண்ட் பகுதி மற்றும் கழிவு நீர் சேரும் 3 இடங்களை பார்வையிட்டனர்.

    அம்பத்தூர்:

    தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 590 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரி நிரம்பி வருகிறது. இந்த ஏரியில் 3 இடங்களில் தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருகிறது.

    இந்த நிலையில் கொரட்டூர் ஏரியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கொரட்டூர் ஏரியில் தொழிற்சாலை கழிவு நீர் கலக்கும் ஜீரோ பாயிண்ட் பகுதி மற்றும் கழிவு நீர் சேரும் 3 இடங்களை பார்வையிட்டனர். ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது அம்பத்தூர் எம்.எல்.ஏ.ஜோசப்சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தலைமை பொறியாளர் முரளிதரன், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி, பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், அம்பத்தூர் மண்டல ஆணையாளர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர் சதீஷ்குமார், கவுன்சிலர் ஜான் உடன் இருந்தனர்.

    • ரெயில் பெட்டி தனியாக கழன்று ஓடியது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • விசாரணைக்கு பிறகு இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. என்ஜினுடன் சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள் இருந்தன. இரவு 11 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட் பாரம் வழியாக சென்றது. அப்போது ரெயிலின் எஸ்.7 மற்றும் எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது.

    இதில் எஸ்.8 பெட்டியுடன் இணைந்து இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. ரெயில் என்ஜினுடன் சேர்ந்த 7 பெட்டிகள் தனியாக சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். ரெயிலில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    இதற்கிடையே தனியாக கழன்று ஓடிய 16 பெட்டிகளும் மெதுவாக 4-வது நடைமேடையில் வந்து நின்றது. பதட்டம் அடைந்த பயணிகள் அலறியடித்து ரெயிலில் இருந்து இறங்கினர். இதில் இடிபாடுகளில் சிக்கி கீழே விழுந்ததில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    ரெயில் பெட்டி தனியாக கழன்று ஓடியது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திருவள்ளூருக்கு விரைந்து வந்தனர்.

    சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ரெயில் பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு ஒரு மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவள்ளூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.ரெயில் பெட்டிகளின் இணைப்பு கொக்கி துண்டானது ஏன்? ஊழியர்கள் சரி பார்த்தனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்னக ரெயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் எனவும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    • இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் தலைமையில் நடைபெற்றது.
    • 80 பேருக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    பொன்னேரியை அடுத்த சிறுலபாக்கம் ஊராட்சி அண்ணாமலைச்சேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். 80 பேருக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    பழவேற்காட்டில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் பா.ஜனதா சார்பில் வழங்கப்பட்டது.

    • திருத்தணி அருகே தமிழகம்- ஆந்திர எல்லையோரம் பொன்பாடியில் சோதனைச்சாவடி உள்ளது.
    • வாலிபர் ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடப்பதாகதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அருகே தமிழகம்- ஆந்திர எல்லையோரம் பொன்பாடியில் சோதனைச்சாவடி உள்ளது. இதன் அருகே வாலிபர் ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடப்பதாகதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று ரத்தகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரிந்தது. திருப்பதிக்கு பஸ்சில் பயணம் செய்த போது பொன்பாடி சோதனைச் சாவடியில் உணவு சாப்பிடுவதற்காக பஸ்சில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது சிறுநீர் கழிக்க சிறிது தூரம் சென்ற போது அங்கு இருந்த 3 பேர் கும்பல் திடீரென சதீசை கட்டையால் தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.3,800 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    தலையில் பலத்த காயம் அடைந்த சதீசுக்கு 8 தையல் போடப்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சதீசை தாக்கிய கும்பல் யார்? கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டனரா? என்று திருத்தணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரெயில் பெட்டிகளின் இணைப்பு துண்டானவுடன் சத்தம் கேட்டு ரெயிலை என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை.
    • ரெயில் பெட்டிகளின் இணைப்பு கொக்கி துண்டானது ஏன்? ஊழியர்கள் சரி பார்த்தனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தினந்தோறும் இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்றடையும்.

    நேற்று இரவும் வழக்கம்போல் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. என்ஜினுடன் சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள் இருந்தன.

    இரவு 11 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட் பாரம் வழியாக சென்றது. அப்போது ரெயிலின் எஸ்.7 மற்றும் எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது.

    இதில் எஸ்.8 பெட்டியுடன் இணைந்து இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. ரெயில் என்ஜினுடன் சேர்ந்த 7 பெட்டிகள் தனியாக சென்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். ரெயிலில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    இதற்கிடையே தனியாக கழன்று ஓடிய 16 பெட்டிகளும் மெதுவாக 4-வது நடைமேடையில் வந்து நின்றது.

    பதட்டம் அடைந்த பயணிகள் அலறியடித்து ரெயிலில் இருந்து இறங்கினர். இதில் இடிபாடுகளில் சிக்கி கீழே விழுந்ததில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    ரெயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    ரெயில் பெட்டி தனியாக கழன்று ஓடியது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திருவள்ளூருக்கு விரைந்து வந்தனர்.

    எஸ்.7-எஸ்.8 பெட்டிகளை இணைக்கும் கொக்கி உடைந்து போனதால் புதிதாக கொக்கி வரவழைக்கப்பட்டது.

    சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ரெயில் பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு ஒரு மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவள்ளூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.

    ரெயில் பெட்டிகளின் இணைப்பு துண்டானவுடன் சத்தம் கேட்டு ரெயிலை என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை.

    ரெயில் பெட்டிகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது பயணிகள் அனைவரும் திருவள்ளூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அச்சத்துடன் இருந்தனர்.

    இந்த ரெயில் இரவு ஒரு மணியளவில் அரக்கோணம் சென்றடைய வேண்டும். ஆனால் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்பட்டதால் அடுத்தடுத்த ரெயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் தவித்தனர்.

    ரெயில் பெட்டிகளின் இணைப்பு கொக்கி துண்டானது ஏன்? ஊழியர்கள் சரி பார்த்தனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

    ரெயில் சென்றபோது பெட்டிகள் தனியாக கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கார், பஸ்,ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
    • கால்நடைகள் அடிக்கடி திடீரென குறுக்கே செல்வதால் வாகன விபத்தில் கால்நடைகளும் சிக்கி வாகன ஓட்டிகளும் கீழே விழுந்து காயமுற்று செல்கின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகர், பூண்டி போன்ற பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஆங்காங்கே படுத்து ஓய்வு எடுக்கிறது. இதன் காரணமாக கார், பஸ்,ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

    மேலும் கால்நடைகள் அடிக்கடி திடீரென குறுக்கே செல்வதால் வாகன விபத்தில் கால்நடைகளும் சிக்கி வாகன ஓட்டிகளும் கீழே விழுந்து காயமுற்று செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் படுத்து ஓய்வெடுப்பதால் அது அறியாத வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் கால்நடைகளை பறிமுதல் செய்து அவற்றை அருகில் உள்ள கோ சோலைகளில் ஒப்படைத்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் எனவும், பொதுமக்கள் சாலைகளில் கால்நடை சிறிய விட வேண்டாம் என எச்சரித்தார். இருப்பினும் கலெக்டர் உத்தரவை மீறி இது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. எனவே திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றிவரும் கால்நடைகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள்.
    • ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த கொடி வளசை காலனியில் வசிப்பவர் சேகர். இவரது மகள் சியாமளா (வயது 24). 10ம் வகுப்பு படித்துவிட்டு தற்போது வீட்டில் இருக்கிறார்.

    நேற்று சியாமளாவை அழைத்துக் கொண்டு தாய் மஞ்சுளா ஆட்டோவில் பள்ளிப்பட்டு பகுதியில் பஜார் தெருவுக்கு சென்றார். அங்குள்ள கடையில் கொலுசு எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள். ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    தன் மகள் கண்ணெதிரில் கடத்தப்பட்டதை கண்ட தாய் மஞ்சுளா கூச்சல் போடவே பொதுமக்கள் திரண்டனர். இது தொடர்பாக பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸ் குழுவினர் காரை பின் தொடர்ந்து விரட்டினர். ஆந்திரா மாநிலம் சர்க்கரை ஆலை அருகே ஆந்திரா போலீஸ் உதவியோடு பொதுமக்களும் இணைந்து காரை மடக்கி பிடித்தனர். கடத்தப்பட்ட சியாமளாவை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக நடந்த விசாரணையில் கொடி வலசா கிராமம் அருகிலுள்ள அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30). அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 27) ஆகிய இருவரும் சியாமளாவை கடத்தியது தெரியவந்தது.

    அவர்கள் இருவரும் சியாமளாவுக்கு உறவினர்கள் ஆவர். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்று தெரியவில்லை. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மாலை நடந்த இந்த கடத்தலில் ஒரு மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.

    • தெருக்களில் சாலை அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
    • கூட்டத்தில் நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பகுதி சபா கூட்டம் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பொன்னேரி 21 வது வார்டில் பகுதி சபா கூட்டம் தனுஷா தமிழ் குடிமகன் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெருக்களில் சாலை அமைத்ததற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் கழிவுநீர் வெளியேறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு பதிலளித்த கவுன்சிலர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பன்னீர், சுமதி, திவாகர் பாலு, சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் நிறுவனங்கள் மழைநீர் வடிகால் பகுதியை சுற்றி மதில் சுவர் கட்டியதால் மழைநீர் வெளியேறாமல் பாதிப்பு ஏற்படுகிறது.
    • அத்திப்பட்டுபுது நகரில் மழை நீர் தேங்காத வண்ணம் கண்மாய்கள், சிறு பாலங்கள், அமைக்க தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

    வடகிழக்கு பருவ மழை காரணமாக அத்திப்பட்டு புது நகரில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் காணப்பட்டதால் ஊராட்சி நிர்வாகம் ராட்சத மோட்டார் எந்திரங்களை பயன்படுத்தி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

    மழை வெள்ள பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கதிர்வேல் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மழைநீர் வடிகால் பகுதியை சுற்றி மதில் சுவர் கட்டியதால் மழைநீர் வெளியேறாமல் பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீர் கால்வாயை தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும், கரைகளை பலப்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட சப்-கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அத்திப்பட்டுபுது நகரில் மழை நீர் தேங்காத வண்ணம் கண்மாய்கள், சிறு பாலங்கள், அமைக்க தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

    ×