என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்தது- செங்குன்றத்தில் 12.7 செ.மீ மழை கொட்டி தீர்த்தது
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்தது- செங்குன்றத்தில் 12.7 செ.மீ மழை கொட்டி தீர்த்தது

    • மாமல்லபுரம் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    • கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

    பின்னர் மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இது விடிய விடிய நீடித்தது. பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 12.7 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதேபோல் கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு காரனோடை, தச்சூர், சோழவரம் பஞ்செட்டி தடப்பெரும்பாக்கம் திருப்பாலைவனம் அத்திப்பட்டு, வல்லூர் மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி காணப்படுகிறது. பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியதால் பள்ளம், மேடு தெரியாமல் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் நெடுஞ்சாலை வேண்பாக்கம் மின்சார அலுவலகம் அருகில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் நெடுஞ்சாலை நீண்ட தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாமல்லபுரம் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மழையின் காரனமாக விடுதிகளில் முடங்கினர். வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வேன், பஸ்களில் வந்தவர்கள் வாகனங்களில் இருந்தபடியே புராதன சின்னங்களை பார்த்துவிட்டு சென்றனர்.

    கல்பாக்கம் அணுமின் நிலையம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேரிடர் வருவதை முன்னரே கண்டறியும் நவீன வானிலை ஆய்வு ரேடார் மூலம், சர்வதேச தகவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அணுமின் நிலைய வானிலை ஆய்வு நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி - 102

    சோழவரம் - 79

    பொன்னேரி - 99

    ஜமீன் கொரட்டூர்- 9

    பூந்தமல்லி - 32

    பூண்டி - 13

    தாமரைப்பாக்கம் - 44

    திருவள்ளூர் - 6

    ஊத்துக்கோட்டை - 43

    ஆவடி - 46.

    Next Story
    ×