என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஷா என்பவரின் மகன் அசார் (வயது16).

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைபள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் அசார் குடும்பத்தினருடன் தும்பேரி அருகே நாதிகுப்பம் பகுதியில் நடைபெற்ற சிறுவனின் சித்தப்பா சையத் பாஷா என்பவரின் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றார்.

    திருமண வறவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் மண்டபத்தில் போடப்பட்டிருந்த பந்தல் அருகே சிறுவன் விளையாடிகொண்டிருந்த போது அங்குள்ள இரும்பு கம்பத்தை பிடித்துள்ளார்.

    அப்போது இரும்பு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து அசார் மயங்கி கீழே விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலீஸ் மாணவன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • வாணியம்பாடியில் வியாபாரி பலியானார்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார் (57). இவர் பால் விற்பனை, மாவு அரவை மில் மற்றும் மளிகை கடை நடத்தி வந்தார்.

    இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நிலை அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 21 -ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மேலும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.

    நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் வீடு அமைந்துள்ள பகுதியில் நகராட்சி மூலம் முக கவசங்கள் வழங்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    பின்னர் உயிரிழந்தவரின் சடலம் சென்னையில் இருந்து வாணியம்பாடிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்கள் யாரையும் நெருங்க விடாமல் அவருடைய பிணத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அஞ்சலிக்காக 5 நிமிடம் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் நகராட்சி நிர்வாகம், சுகாதாரதுறை மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள மயானத்தில் கொரோனா கால கட்டத்தில் இறந்தவரை அடக்கம் செய்தது போன்று 15 அடி ஆழம் குழி தோண்டப்பட்டு பிளீச்சிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை குழியில் போட்டு நகராட்சி பணியாளர்கள் கவச உடை அணிந்து மிகவும் பாதுகாப்பாக சடலத்தை அடக்கம் செய்தனர்.

    பன்றி காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களால் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

    இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    உயிரிழந்த நபர் எங்கெங்கு பயணம் செய்தார் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    அதேபோல் இந்த நோய்க்கான தடுப்பு மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது. அது பொதுமக்களுக்கு தேவைப்பட்டால் அளிக்க ப்படும். போதிய அளவு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பன்றி காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரவிக்குமார் மளிகை கடை நடத்தி வந்தார்.
    • வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரவிக்குமார் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதி முழுவதும் தூய்மை பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • 2 லட்சம் மதிப்பிலான பழங்கள் சேதமடைந்தன
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் பாலப்பன் (வயது 52).

    இவருக்கு சொந்தமான லாரியில் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 5 டன் மாதுளம் பழம் மற்றும் கொய்யாப்பழம் 1 டன் என 6 டன் பழங்களை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்றனர்.

    அப்போது திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே பங்களா மேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக வந்து அருணாச்சலம் ஓட்டி சென்ற லாரி மீது மோதியது.

    கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அருணாச்சலம் உயிர் தப்பினார். மேலும் 2 லட்சம் மதிப்பிலான பழங்கள் சேதமடைந்தன.

    விபத்து ஏற்படுத்திய மற்றொரு லாரியின் ஓட்டுனர் லாரியை அங்கே விட்டு தப்பி சென்றார் இந்த சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ஏரியில் வெண்டைக்காய் கொட்டப்பட்ட விவகாரம்
    • கிலோ 7, 8 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்கின்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய் பயிரிட்டு உள்ளனர்.

    தினமும் பல டன் எடையுள்ள வெண்டை க்காய்கள் அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் ரூ.7 முதல் 8-க்கு வெண்டைக்காய் விற்பனைக்காக கேட்கின்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் மிகவும் வேதனை அடைந்து சாலை ஓரங்களில் வெண்டைக்காய்களை கொட்டி விட்டு செல்கின்றனர்.

    ஒரு சில விவசாயிகள் மீன்களுக்கு உணவாகும் வகையில் மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்று ஏரிகளில் கொட்டி வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தோட்டக்கலை துணை இயக்குனர் கயல்விழி நேற்று சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் கயல்விழி கூறியதாவது:- வெண்டைக்காய் தற்போது கிலோ 7,8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது வெண்டைக்காய் ஏரியில் கொட்டியவர் ஒரு புதிய வியாபாரி என தெரிகிறது.அவர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த வெண்டைக்காய்கள் விற்பனை யாகாமல் இருந்து ள்ளது. வெண்டைக்காயை மீன்கள் விரும்பி சாப்பிடும் என்பதாலும் அதனை மீன்களுக்காக ஏரியில் கொட்டியுள்ளார்.

    வெண்டைக்காய் விலையில் வீழ்ச்சி ஏதும் கிடையாது. ஏரியில் வெண்டைக்காய்களை கொட்டிய வியாபாரி யார் என தெரியவில்லை.வெண்டைக்காய் ஏன் தேங்கியுள்ளது என்பது குறித்து வேளாண் துறையினர், தோட்டக்கலை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டு உள்ளது. விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு கிலோ 7, 8 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்கின்றனர்.

    வெண்டைக்காயை அறுவடை செய்ய ஒருவருக்கு ரூ.200 கூலி தருகிறோம். விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக தெரிவித்தனர்.

    • சூறை காற்றுடன் கனமழை பெய்தது
    • விவசாயிகள் வேதனை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் அடுத்த ஆலங்காயம் சுற்று வட்டார கிராம பகுதிகளான நிம்மியம்பட்டு, சுண்ணம்புபள்ளம், வெள்ளகுட்டை, துரிஞ்சிகுப்பம் ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.

    இதனால் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.

    விவசாயிகள் சாய்ந்து விழுந்த வாழை மரங்களில் இருந்து வாழை குலைகளை வெட்டி எடுத்து மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்தனர். கடன் பெற்று வாழை பயிரிட்டு தற்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சேதமானதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    • நீண்ட நேரம் போராடி பிடித்தனர்
    • காப்புகாட்டில் விட்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் ரோட்டில் உள்ள கொத்தகோட்டை என்ற இடத்தில் ரோட்டையொட்டியுள்ள ஒரு கிணற்றில் சுமார் 8 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தது.

    அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் சத்தம் கேட்டு கிணற்றை எட்டி பார்த்தனர்.

    அப்ேபாது கிணற்றில் 8 அடி நீளமுள்ள நாக பாம்பு தத்தளித்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்து பத்திரமாக மீட்டு காப்புகாட்டில் விட்டனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 48) இவர் நேற்று வீட்டில் இருந்து டீ குடிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    நாட்டறம்பள்ளி அருகே தாயப்பன் கவுண்டர் தெருவில் உள்ள அரச மரத்தடியில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு டீ கடைக்கு சென்றார் அப்போது அரச மரத்தின் மீது இருந்து பாம்பு ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது விழுந்து மோட்டார் சைக்கிளில் நுழைந்தது.

    இதனை கண்ட அப் பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளில் பாம்பு நுழைந்தது கண்டு கூச்சலிட்டனர். அப்போது பாம்பு வெளியே வரவில்லை.

    இதனால் அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மெக்கானிக் வரவழைத்து பைக்கை பிரித்து பார்த்த போது பாம்பு வெளியே வந்தது.

    இதனையடுத்து தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 3 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    • 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வனத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலையில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தீர்மானங்களின் மீது ஒன்றிய கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    • பழுதாகி நின்ற லாரி மீது மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு ஊராட்சி, பச்சக்குப்பம் ெரயில்வே மேம்பாலத்தில், இன்று அதிகாலை மினி லாரி ஒன்று பழுதாகி நின்றது. அப்போது பின்புறமாக வந்த மற்றொரு மினி லாரி, பழுதாகி நின்ற மினிலாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் வேலூர் சார்பனாமேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தமீம் (வயது 50) படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பஸ் நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இன்று காலை அந்த வழியாக சென்ற ஆம்பூர் நகராட்சி குடிநீர் லாரி சிக்கிக்கொண்டது.

    நீண்ட நேரம் ஆகியும் லாரி வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் காலை ஆறு 6 முதல் 7 மணி வரை கடும் போக்குவரத்து பாதித்தது.

    பஸ் பயணிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போக்குவரத்தை மாற்றம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    • 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு பணியாற்றி வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமாக ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    அந்த தொழிற்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் காலை 10 மணி அளவில் பணிகள் தொடங்கியது.

    தொழிற்சாலையில் பணிபுரியும் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் 17 வயது மகன் மோகன் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஊதுபத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

    ஊதுபத்தி மாவு கலக்கும் எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சிறுவனின் கை எந்திரத்தில் சிக்கியது.

    கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் எந்திரத்தில் சிக்கிக்கொண்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுக்கா போலீசார் சிறுவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×