என் மலர்tooltip icon

    தேனி

    • சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்தவர் அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார்.
    • கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டிைய சேர்ந்தவர் நாகராஜ் மனைவி செல்வி(48). இவர்கள் 2 பேரும் அதேபகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தங்கி வேலை செய்து வந்தனர். செல்விக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மாத்திரை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

    சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்த செல்வி அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி சிவாஜிநகரை சேர்ந்தவர் ரமேஷ் மகள் ஜனனி(17). தனது உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஜனனி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே குச்சனூரை சேர்ந்தவர் கருப்பையா(55). கூலி தொழிலாளி. கேரளாவில் உள்ள தனது அண்ணனை பார்க்க செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை தேடி வருகின்றனர்.

    • ஒரு பகுதியில் பணிகள் முடிவடைந்த நிலையில் மற்றொரு பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி பணிகள் நடந்து வருகின்றன.
    • தற்போது தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதால் நீர் திறப்பு 150 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு ரூ.1296 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கியது.

    இதற்காக லோயர்கேம்ப் குறுவனூத்து பாலம் வண்ணாத்துறையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. ஒரு பகுதியில் பணிகள் முடிவடைந்த நிலையில் மற்றொரு பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி பணிகள் நடந்து வருகின்றன.

    நேற்று காலை இந்த தடுப்பணை பணிகளுக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இன்று காலை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதால் நீர் திறப்பு 150 கனஅடியாக குறைக்கப்பட்டது. பணிகள் விரைவில் முடிந்ததும் வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
    • 7-ந் தேதி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    செப்டம்பர் 8-ம் தேதி தேவமாதா பிறந்த தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து ஆர்.சி கிறிஸ்துவ தேவாலயங்களிலும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

    தேனி மாவட்டம் போடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    போடி பார்க் நிறுத்தம் அருகில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் இருந்து தேவமாதா உருவம் பொறித்த கொடி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    பின்னர் ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழிபாட்டுடன் தேவாலய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 7-ந் தேதி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற உள்ளது.

    • விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
    • கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் ஓணம் பண்டிகை வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, பாயாசம் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், டாக்டர் சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், சயின்ஸ் அண்டு ஹிமானீட்டீஸ் துறையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சித்ரா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தினர்.

    • தேனி மாவட்டம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.
    • போதிய மழையின்மை காரணமாக வறட்சியான சூழல் நிலவுவதால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் குறுமிளகு விளைச்சல் குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.

    போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான குரங்கணி, டாப் ஸ்டேஷன், போடி மெட்டு மற்றும் கேரள பகுதிகளான வண்டல் மேடு, பியல்ராவ், பூப்பாறை, ராஜா காடு, கஜானா பாறை போன்ற பகுதிகளில் மிளகு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.

    ஏலத் தோட்டத்தில் உள்ள மரங்களில் துணைப் பயிராக வளர்க்கப்படும் குறுமிளகு மத்திய அரசின் நறுமண உற்பத்தி பொருள்கள் அமைப்பு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

    ஏலக்காய் போன்று இதுவும் பணப்பயிர்களின் ஒன்றாக கருதப்படுவதாலும் முக்கிய ஏற்றுமதி பயிராக திகழ்வதாலும் மத்திய அரசு நறுமண ஏற்றுமதி பொருள்களின் விதிமுறைகள் இதற்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு 1 கிலோ ரூ. 430 முதல் முதல் ரூ.450 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ. 150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்து முதல் தர மிளகு கிலோ ரூ. 650 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    வெளிச்சந்தையில் ரூ. 520 வரை விற்கப்பட்ட மிளகு தற்போது அதன் தரத்தை பொறுத்து ரூ.680 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது.

    போதிய மழையின்மை காரணமாக மிளகு சாகுபடி குறைந்து வருவதால் மேலும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விலை உயர்ந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    • கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்தவரை வேலைக்கு அழைத்தார்.
    • இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே எல்லப்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது தோட்டத்து கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டது. பழுதை சரிபார்ப்பதற்கு உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 45) என்பவரை வேலைக்கு அழைத்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்ற ஆனந்த் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி ஆனந்தை மீட்டனர்.

    கிணற்றில் தவறி விழுந்ததில் ஆனந்துக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை அதிகம் நடைபெற்று வருகிறது.
    • இதனால் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் வருவாய் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரியகுளம் நகராட்சி, 5 பேரூராட்சி மற்றும் 17 ஊராட்சி பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பத ற்காக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது.

    இந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தனர். இதில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை அதிகம் நடைபெறுவ தாகவும், இதனால் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக மக்கள் கூடும் இடங்களான தென்கரை காந்தி சிலை நிறுத்தம், வைகை அணை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்று மது விற்பனை நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க முறைகேடாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்ப னையை தடுத்து நிறுத்த இரவு ரோந்து பணியையும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும், முக்கிய இடங்களில் புற காவல் நிலையங்கள் அமைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் உள்ள அடைக்கல மாதா தேவாலயம் பழமை வாய்ந்தது. இந்த தேவாலயத்திற்கு கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து நவநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனை ெதாடர்ந்து விசேஷ திருப்பலி கோவிலில் நடைபெற்று, அடைக்கலமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது .கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

    அதனை தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. விழா நிகழ்ச்சிகளுக்கு தேனி மாவட்ட அருள் தந்தை முத்து தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சேவா மிஷனரி அருள் சகோதரிகள், தேனி காணிக்கை அருட் சகோதரிகள், கமலவை அருட் சகோதரிகள் மற்றும் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • கடந்த 3 மாதங்களாக இவர் வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.
    • கடந்த சில நாட்களாக ஊருக்குள் வந்தது தெரியவரவே வனத்துறையினர் அவரை பிடிக்க சென்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வனவேட்டையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய மன்னூத்து பகுதியை சேர்ந்த சவுந்திரபாண்டியன் என்பவரை தேடி வந்தனர். கடந்த 3 மாதங்களாக இவர் வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக ஊருக்குள் வந்தது தெரியவரவே வனத்துறையினர் அவரை பிடிக்க சென்றனர். வீட்டில் இருந்த சவுந்திரபாண்டியனை விசாரணைக்காக ஜீப்பில் அழைத்துச்சென்றனர்.

    அப்போது அண்ணாநகரில் குபேந்திரன் என்பவர் வனத்துறையினரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சவுந்திரபாண்டியனை விடுவிக்குமாறு கூறினார். ஆனால் வனத்துறையினர் விடாததால் தொடர்ந்து மிரட்டும் தோணியில் பேசினார். இதுகுறித்து வனவர் ஜெயக்குமார் கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குபேந்திரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகளும், ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது.
    • புதிய கட்டிடங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடைகள் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. புதிய ரேஷன் கடைகளை ஆண்டிபட்டி எம்.எஎல்.ஏ. மகாராஜன் திறந்து வைத்தார்.

    சில்வார்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, டி. சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகளுக்கான கட்டிடம், கன்னியப்பிள்ளை பட்டி ஊராட்சி வரதராஜபுரம் ரோடு பிரிவில் ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது.

    புதிய கட்டிடங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஆண்டிபட்டி நகர செயலாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், டி.சுப்புலாபுரம் ஊராட்சி தலைவர் அழகுமணி, ராஜகோபாலன்பட்டி ஊராட்சித் தலைவர் வேலுமணி மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ரத்தினம்நகர் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் (இ.நாம்) விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், சின்னமனூர் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ.நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    முதல் கட்டத்தில், விவசாயிகளின் விளைபொருள் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு லாட் உருவாக்கம் செய்யப்பட்டதையும்,

    இரண்டாவது கட்டத்தில், விளைபொருட்களின் மாதிரி மற்றும் தரம் சோதனை ஆய்வாளர்களால் (Assay Analyst) பரிசோதிக்கப்பட்டதையும், மூன்றாம் கட்டத்தில், மின்னணு முறையில் இணையதளத்தில் ஏலம் மேற்கொண்டதையும்,

    நான்காவது கட்டத்தில், விளைபொருட்களின் எடை சரிபார்க்கப்பட்டு விலைப்பட்டியல் உருவாக்கப்பட்டு விற்பனை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதையும், இறுதியாக, விளைபொருட்களுக்கான தொகையானது வங்கி காசோலை போன்ற முறையில் உரிய தொகை கிடைக்கப்பெற்ற பிறகு விளைபொருட்கள் வெளியே எடுத்து செல்வது வரை கணினியில் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டதையும், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டத் தொகை செலுத்திய நபர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

    விளைபொருட்களை எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி மற்றும் போக்குவரத்து செலவினங்களை குறைக்கும் நோக்கில், விவசாயிகளின் இருப்பிடம் மற்றும் தோட்டத்திற்கே அலுவலர்கள் நேரில் சென்று, இ.நாம் செயலி மூலம் விற்பனை செய்து கொடுக்கப்படும் என்கிற விற்பனை திட்டத்தினை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடம் திட்டத்தில் மேற்கொண்ட பரிவர்த்தனை, அதன் பயன்பாடுகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்படும் வேளாண் விளைபொருளின் விவரங்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக்கடன் தொடர்பான பதிவேடுகளையும், விதை பரிசோதனை நிலைய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் அதனை பராமரிக்கும் முறை குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

    விதைமாதிரிகள் உரிய முறையில் விவசாயிகளிடம் பெற்று காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ×