search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் ஆய்வு
    X

    வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

    தேனி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் ஆய்வு

    • நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ரத்தினம்நகர் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் (இ.நாம்) விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், சின்னமனூர் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ.நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    முதல் கட்டத்தில், விவசாயிகளின் விளைபொருள் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு லாட் உருவாக்கம் செய்யப்பட்டதையும்,

    இரண்டாவது கட்டத்தில், விளைபொருட்களின் மாதிரி மற்றும் தரம் சோதனை ஆய்வாளர்களால் (Assay Analyst) பரிசோதிக்கப்பட்டதையும், மூன்றாம் கட்டத்தில், மின்னணு முறையில் இணையதளத்தில் ஏலம் மேற்கொண்டதையும்,

    நான்காவது கட்டத்தில், விளைபொருட்களின் எடை சரிபார்க்கப்பட்டு விலைப்பட்டியல் உருவாக்கப்பட்டு விற்பனை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதையும், இறுதியாக, விளைபொருட்களுக்கான தொகையானது வங்கி காசோலை போன்ற முறையில் உரிய தொகை கிடைக்கப்பெற்ற பிறகு விளைபொருட்கள் வெளியே எடுத்து செல்வது வரை கணினியில் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டதையும், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டத் தொகை செலுத்திய நபர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

    விளைபொருட்களை எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி மற்றும் போக்குவரத்து செலவினங்களை குறைக்கும் நோக்கில், விவசாயிகளின் இருப்பிடம் மற்றும் தோட்டத்திற்கே அலுவலர்கள் நேரில் சென்று, இ.நாம் செயலி மூலம் விற்பனை செய்து கொடுக்கப்படும் என்கிற விற்பனை திட்டத்தினை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடம் திட்டத்தில் மேற்கொண்ட பரிவர்த்தனை, அதன் பயன்பாடுகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்படும் வேளாண் விளைபொருளின் விவரங்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக்கடன் தொடர்பான பதிவேடுகளையும், விதை பரிசோதனை நிலைய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் அதனை பராமரிக்கும் முறை குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

    விதைமாதிரிகள் உரிய முறையில் விவசாயிகளிடம் பெற்று காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×