என் மலர்
தேனி
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிழற்குடை கட்டப்பட்டது.
- காலை நேரங்களில் மது பாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் சிலர் நிழற்குடையில் அமர்ந்து மது குடிக்க தொடங்கினர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில் கருப்பையாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. எனவே இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1 கி.மீ. தொலைவு நடந்து சென்று கருப்பையாபுரம் விலக்கில் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறி சென்று வந்தனர். வெயிலில் காத்திருப்பதால் கருப்பையாபுரம் விலக்கில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிழற்குடை கட்டப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் நிழற்குடையில் காத்திருந்து பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் மூலக்கடை பகுதியில் அதிகாலை முதல் மது பாட்டில்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
எனவே காலை நேரங்களில் மது பாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் சிலர் நிழற்குடையில் அமர்ந்து மது குடிக்க தொடங்கினர். இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போலீஸ் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். தற்போது நிழற்குடை முற்றிலுமாக மது அருந்தும் பார் ஆக மாறிவிட்டது.
இதனால் தற்போது நிழற்குடை முழுவதும் காலி மது பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காலை நேரங்களில் கருப்பையாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு நிழற்குடையில் மது அருந்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மல்லிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
- மல்லிகிருஷ்ணன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரியை அழைத்துள்ளார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் மல்லிகிருஷ்ணன் (வயது32). இவருக்கும் உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். மல்லிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஈஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அங்கு சென்று மல்லிகிருஷ்ணன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரியை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து தனக்குத்தானே மார்பில் குத்திக்கொண்டு மயக்கம் அடைந்தார். அவரது உறவினர்கள் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவர்கள் மல்லி கிருஷ்ணனை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
- டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூரில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தை கூடலூர் நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் ஜெகன் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை முல்லை பெரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்வதும், சில நேரங்களில் ஏமாற்றி செல்வதுமாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 378 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. 84 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கொடைக்கானல் வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றி பார்க்க தடை விதிக்கப்படுவதாகவும், நீர்வரத்து சீரான பின்னர் அனுமதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் டேவி ட்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருந்தபோதும் யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு 2.8, தேக்கடி 1.4, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, சண்முகநாதி அணை 2, போடி 0.6, வைகை அணை 0.6, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 1.2, ஆண்டிபட்டி 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா, திட்டக்குழு தலைவர் ப்ரிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
- சிறப்பான நிர்வாகம் நடைபெறும் கிராம ஊராட்சி, வளர்ச்சியில் பாலின சமத்துவ ஊராட்சி உள்பட 9 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா, திட்டக்குழு தலைவர் ப்ரிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ராஜபாண்டியன், நாராயண பாண்டியன், பாண்டியன், வளர்மதி, தமயந்தி, தங்கராஜ், தினகரன், நயினார் முகமது, பவானி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலகில் வாழும் ஒட்டு மொத்த மனித குலமும் செழிப்பு, அமைதி, மற்றும் நட்புறவுடன் வாழ்ந்து, நாம் வாழும் பூமியை பாதுகாத்து நம்முடைய சந்ததியினர் சீரும் சிறப்பாக வாழும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி, நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை உள்ளடக்கிய 9 கருப்பொருட்களை 2030-ஆம் ஆண்டுக்குள் இலக்கினை அடைவதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நடைபெற்ற கூட்டத்தில், கருப்பொருட்களாக வறுமை இல்லாத வாழ்வாதாரம் நிறைந்த கிராம ஊராட்சி, நல வாழ்வு கிராம ஊராட்சி, குழந்தைகளின் நலன் கொண்ட கிராம ஊராட்சி, குடிநீரில் தன்னிறைவு அடைவது, சுத்தமான, பசுமையான கிராம ஊராட்சி, உட்கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி, சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு நிறைந்த கிராம ஊராட்சி, சிறப்பான நிர்வாகம் நடைபெறும் கிராம ஊராட்சி, வளர்ச்சியில் பாலின சமத்துவ ஊராட்சி ஆகிய 9 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, சுகாதாரம், தொற்றுநோய், ரத்த சோகை, தடுப்பூசி, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பெண் குழந்தைகள் கல்வி, மகளிர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும், நீர் பாதுகாப்பு மேலாண்மை, தரிசு நில மேம்பாடு, சாலை வசதி, சமூக நீதி, தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணிகளை விரைந்து முடிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ், மாவட்ட ஊராட்சி செயலாளர் / திட்ட அலுவலர் சிவகுமார், உதவி இயக்குநர் அண்ணாதுரை மற்றும் நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனுமந்தன்பட்டியில் இருந்து சின்னமனூர் செல்லும் பைபாஸ் சாலையில் பெரியாறுப்பாலத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதி அதில் வந்த 6 பேர்களும் படுகாயமடைந்தனர்.
- இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தமபாளையம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சவடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 40). இவர் தனது அண்ணன் லோகநாதரெட்டி (42) மற்றும் அவரது மகன்களான சுஜித் ரெட்டி (14), ரோகித் (11) மற்றும் கல்யாண்குமார் (44), பிரகாஷ் (44) ஆகியோருடன் ஒரு காரில் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று விட்டு மீண்டும் தேனி வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அனுமந்தன்பட்டியில் இருந்து சின்னமனூர் செல்லும் பைபாஸ் சாலையில் பெரியாறுப்பாலத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதி அதில் வந்த 6 பேர்களும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, பாலாபிஷேகம், யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
- அதன் பின்னர் பல்வேறு புனித தீர்த்தங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்மாள்புரம் மலைக்கிராமத்தில் செல்வ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, பாலாபிஷேகம், யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் பல்வேறு புனித தீர்த்தங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் வருசநாடு, சிங்கராஜபுரம், பூசனூத்து ,அம்பேத்கர் காலனி, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர். பிரதிஷ்டையில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கிராம கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார். இதில் கடமலை மயிலை தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, க.மயிலாடும்பாறை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
- இதனைத்தொடர்ந்து நேற்று இரவு விநாயகர் சிலை வடபுதுப்பட்டியில் உள்ள வீதிகளை ஊர்வலமாக சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது.
தேனி:
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி விழா கமிட்டி தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் மரக்கடை பாண்டி, பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரசாத், மனோஜ் உள்பட விழா கமிட்டியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவு விநாயகர் சிலை வடபுதுப்பட்டியில் உள்ள வீதிகளை ஊர்வலமாக சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து தேனியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வடபுதுப்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது.
- மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்பட வில்லை.
இதனால் விவசாய பணிகளில் தாமதம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.64 அடியாக உள்ளது. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1698 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 417 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2430 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.16 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.22 அடியாக உள்ளது. அணைக்கு 12 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.36 மி. கன அடியாக உள்ளது.
பெரியாறு 20.4, தேக்கடி 5.8, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.4, போடி 6.8, வைகை 0.4, சோத்துப்பாறை 17, மஞ்சளாறு 5.2, வீரபாண்டி 2.4, அரண்மனைபுதூர் 3.8, பெரியகுளம் 0.5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- தேனி துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தேனி:
தேனி துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டி பட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைபுதூர், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
- விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியும், இந்து எழுச்சி முன்னணியும் இணைந்து 38-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். 1
- 12 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பொன்னகரத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக முத்தாலம்மன் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
சின்னமனூர்:
சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியும், இந்து எழுச்சி முன்னணியும் இணைந்து 38-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். 12 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பொன்னகரத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக முத்தாலம்மன் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
சுண்டல், கொழுக்கட்டை, அவல் படைத்து வழிபட்டனர். விழாவிற்கு கவுரவத்தலைவர் குப்பமுத்து, வழிகாட்டுக்குழு தலைவர் பால்பாண்டி, ராஜபாண்டியன் ஆகியோர் தலைமையில் சின்னமனூர் நகர தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் நகர் ஒன்றிய வார்டு பொறுப்பாளர் சந்திரன், வெற்றிவேல், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பிளாஸ்டிக்கால் ஆன குடை, மலர், மாலைகள் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சின்னமனூர்:
சின்னமனூரில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, சென்னை தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை தேசிய பசுமை படை மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டம் சார்பில் மாசில்லா பசுைம வழி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை கொண்டு சிலைகளை வடிவமைத்தல், பிளாஸ்டிக்கால் ஆன குடை, மலர், மாலைகள் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை சித்ரா தொடங்கி வைத்தார். பசுமை படை ஒருங்கிணை ப்பாளர் வெங்கடேசன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






