என் மலர்tooltip icon

    தேனி

    • அணையின் மதகு, சுரங்கப் பகுதி, பேபி அணை, பிரதான அணை ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக அங்கு உள்ள மரங்களை அகற்றுவதற்கான அனுமதியை தாமதமின்றி பெற வேண்டும்.

    தேனி:

    தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவை நடைமுறைப்படுத்தி நீர்மட்டம் உயர்வதை கண்காணிக்கவும், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்து தேவையான ஆலோசனைகள் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு பிரதிநிதி தலைமையில் தமிழக-கேரள அரசுகள் தரப்பில் தலா 2 பிரதிநிதிகளை கொண்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு குழுவினர் கடந்த ஆண்டு மே மாதம் 9-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

    10 மாத இடைவெளிக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை என்ஜினீயர் விஜயசரண்

    அணையின் மதகு, சுரங்கப் பகுதி, பேபி அணை, பிரதான அணை ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அணையின் சுரங்கப் பகுதியில் கசிவு நீர் அளவை பார்வையிட்டனர். அது துல்லியமாக இருந்தது. அதனால் அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர்.

    அதன்பிறகு குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் கண்காணிப்புக்குழு தலைவர் விஜயசரண் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 'அணையின் பராமரிப்பு பணிகளுக்கும், பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கும் தேவையான தளவாட பொருட்களை கொண்டு செல்வதற்கு வல்லக்கடவு சாலை மற்றும் ஆற்றுப் பாலத்தை சீரமைக்க வேண்டும்.

    பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக அங்கு உள்ள மரங்களை அகற்றுவதற்கான அனுமதியை தாமதமின்றி பெற வேண்டும். வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது' என்று தமிழக பிரதிநிதிகள் தரப்பில் வலியுறுத்தினர்.

    • ஒரு வேனில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
    • முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி விலக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 29). இவர் தனது நண்பர்களான சின்னமனூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (26), அதே பகுதியைச் சேர்ந்த மகரந்தன் (32) ஆகியோருடன் ஒரு வேனில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள கணவாய் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது, அருகில் வந்த காரை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராஜாங்கம், ராஜேஷ் மகரந்தன் மற்றும் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த விஜய் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

    அவர்கள் அனைவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுமார் 30க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாலம் வழியாக வனத்துறையினர் அழைத்து வந்து பாதுகாத்தனர்.
    • நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேவதானப்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட இந்த அருவியில் கடந்த மாதத்தில் இருந்தே தண்ணீர் குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் முதல் விட்டு விட்டு பெய்த மழையினால் அருவிக்கு தண்ணீர் வந்தது. இதனால் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

    மதிய வேளையில் திடீரென அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கொடைக்கானல் அடுத்துள்ள வெள்ளகவி, வட்டக்கானல் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் தண்ணீர் வரத்து அதிகரித்ததை கவனிக்காமல் ஆனந்தமாக குளித்துக் கொண்டு இருந்தனர்.

    ஒரு கட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே கரைக்கு அப்பால் 30 பேர் சென்றனர். அவர்கள் வெள்ளத்தை கடந்து வர முடியாமல் தவித்தனர். இதனைத் தொடர்ந்து ரேஞ்சர் டேவிட்ராஜா தலைமையில் வனவர் பூவேந்திரன், கண்காணிப்பாளர்கள் தமிழழகன், ஈஸ்வரன், காவலர்கள் விவேக், செந்தில் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு சுற்றுலா பயணிகளை மேலே ஏற அனுமதித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அருவியில் வழக்கமான வலது பாதையில் அவர்கள் கரையேறினர். சிலரை வனத்துறையினர் தண்ணீரில் இறங்கி தூக்கிவிட்டனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாலம் வழியாக வனத்துறையினர் அழைத்து வந்து பாதுகாத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கும்பக்கரை அருவியில் இன்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தேனி மாவட்ட த்தில் கடும் கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பேரூராட்சி தலைவர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி போலீஸ் குடியிருப்பில் திடக்கழிவு மற்றும் மக்கும் கழிவு மக்காத கழிவு ஆகிய குப்பைகளை தரம் பிரித்து வழங்க ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் (பொறுப்பு) செயல் அலுவலர் சண்முகம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள், வார்டு கவுன்சிலர் சின்னன், மஸ்தூர் யூனியன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
    • சம்பவ த்தன்று தனது வீட்டு கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் எரசக்க நாயக்கனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 53). கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலை யில் அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை.

    இதனால் சம்பவ த்தன்று தனது வீட்டு கழிவறையில் தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் சின்ன மனூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ டிரைவர் அடித்துக் கொல்லபட்ட சம்பவத்தால் தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
    • கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளிகளை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது36). இவருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    சரவணன் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று மாலை சவாரிக்காக செங்கற்கோவிலார் வீதி வழியாக ஆட்டோவை ஓட்டி சென்றார். தர்ம முனீஸ்வரர் வீதியில் சன்மார்க்க சங்கம் அருகே வந்தபோது, சரவணன் ஆட்டோவை திடீரென நிறுத்தியதாக தெரிகிறது.

    அப்போது பின்னால் வந்த தேவகோட்டை அருணகிரி பட்டணம் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி(44) என்பவரது மோட்டார் சைக்கிள், ஆட்டோவின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயபாண்டி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதனால் அவர் ஆட்டோ டிரைவர் சரவணனுடன் தகராறு செய்தார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயபாண்டி, சரவணனை சரமாரி தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஜெயபாண்டியின் உறவினரான பழனியப்பன் (40) என்பவரும் சரவணனை தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஜெயபாண்டி மற்றும் பழனியப்பன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தாக்குதலில் காயமடைந்த சரவணனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆட்டோ டிரைவர் அடித்துக் கொல்லபட்ட சம்பவத்தால் தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி உசேன், நமச்சி வாயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு பாத்திபனும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.சரவணன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பழனியப்பன் அதே ஊரில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    ஜெயபாண்டி சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று ஆட்டோ டிரைவரை கொலை செய்து விட்டார். அவர் வெளி நாட்டிற்கு தப்பி சென்று விடலாம் என்பதால் அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெயபாண்டி, பழனியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளிகளை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.
    • போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது 8-வது வார்டு காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 21), கோட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோபிநாத் (19) ஆகிய இருவரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரை திருவிழாவுக்காக ஊர்திரும்புவார்கள்.
    • திரு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தகோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் நடைபெறும்.

    இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரை திருவிழாவுக்காக ஊர்திரும்புவார்கள்.

    அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பால்குடம், காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். மே மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவதால் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்கும் வண்ணம் ராட்டிணம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஏப்.18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பக்தர்கள் மஞ்சள் காப்பு அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோவிலில் கம்பம் நடுதல், பல்லக்கில் வீதி உலா, அம்மன் புறப்பாடு, தேரோட்டம் ஆகியவை மே 5ந் தேதி முதல் 16ந் தேதி வரை நடைபெறுகிறது. திரு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் குழுவினர் நாளை அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
    • பேபி அணையில் உள்ள 13 மரங்களை அகற்றி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. அணையின் உறுதி தன்மை குறித்து கேரள அரசு மற்றும் சில அமைப்பினர் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் குழுவினர் நாளை அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் அங்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், கேரள அரசு சார்பில் நீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலர் ஜோஸ், நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ்வர்க்கீஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு மேமாதம் 9-ந்தேதி அணைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் நாளை ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் பராமரிப்பு பணிகளுக்காக தளவாட பொருட்கள் கொண்டு செல்ல வல்லக்கடவில் இருந்து அணைக்கு வரும் வனப்பாதையை சீரமைக்க வேண்டும். பேபி அணையில் உள்ள 13 மரங்களை அகற்றி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தளவாட பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்ககூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தும் தொடர்ந்து கேரள வனத்துறை பிரச்சினை செய்து வருகின்றனர்.

    எனவே நாளை ஆய்வின்போது தமிழக அதிகாரிகள் இதுகுறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைக்குமா என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    • கிராமங்களுக்கான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறி உள்ளது.
    • பொதுமக்கள் விளை பொருட்களை தலைசுமையாகவோ, மாட்டு வண்டிகளிலோ எடுத்து வந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பூசணியூத்து, முத்தூத்து, தேக்கிளைகுடிசை, திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பயிர்கள் ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

    இந்தநிலையில், இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினரின் தடை காரணமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களுக்கான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறி உள்ளது.

    இதனால் ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சாலை வழியாக இயக்க முடியவில்லை. எனவே இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விளை பொருட்களை சிங்கராஜபுரம் கிராமம் வரை தலைசுமையாகவோ அல்லது மாட்டு வண்டிகளிலோ எடுத்து வந்து அதன் பின்னர் லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

    இதனால் நேர விரையம் ஏற்பட்டு விளை பொருட்களை உரிய நேரத்திற்கு சந்தைக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கம்பம் வடக்கு போலீசார் போதை பொருள் தடுப்பு சம்மந்தமாக ரோந்து சென்றனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் வடக்கு போலீசார் போதை பொருள் தடுப்பு சம்மந்தமாக ரோந்து சென்றனர். அப்போது கம்பம் உழவர்தெருவை சேர்ந்த மஞ்சுளா (வயது 47) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைதுசெய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கோம்பைரோட்டை சேர்ந்த விமலா (35) என்பவரும் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அணைக்கு 50 கனஅடி நீர் வருகிறது. 256 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2051 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.80 அடியாக உள்ளது. அணைக்கு 50 கனஅடி நீர் வருகிறது. 256 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2051 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது.

    அணைக்கு 163 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2555 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை. இருப்பு 149.08 மி.கனஅடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 44.94 அடியாக உள்ளது. அணைக்கு 13 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 12.80 மி.கனஅடியாக உள்ளது. தேக்கடி 3.2, கொடைக்கானல் 9.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    ×