என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேர் கைது
- ஆட்டோ டிரைவர் அடித்துக் கொல்லபட்ட சம்பவத்தால் தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
- கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளிகளை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது36). இவருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
சரவணன் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று மாலை சவாரிக்காக செங்கற்கோவிலார் வீதி வழியாக ஆட்டோவை ஓட்டி சென்றார். தர்ம முனீஸ்வரர் வீதியில் சன்மார்க்க சங்கம் அருகே வந்தபோது, சரவணன் ஆட்டோவை திடீரென நிறுத்தியதாக தெரிகிறது.
அப்போது பின்னால் வந்த தேவகோட்டை அருணகிரி பட்டணம் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி(44) என்பவரது மோட்டார் சைக்கிள், ஆட்டோவின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயபாண்டி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் அவர் ஆட்டோ டிரைவர் சரவணனுடன் தகராறு செய்தார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயபாண்டி, சரவணனை சரமாரி தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஜெயபாண்டியின் உறவினரான பழனியப்பன் (40) என்பவரும் சரவணனை தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஜெயபாண்டி மற்றும் பழனியப்பன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தாக்குதலில் காயமடைந்த சரவணனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆட்டோ டிரைவர் அடித்துக் கொல்லபட்ட சம்பவத்தால் தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி உசேன், நமச்சி வாயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு பாத்திபனும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.சரவணன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பழனியப்பன் அதே ஊரில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
ஜெயபாண்டி சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று ஆட்டோ டிரைவரை கொலை செய்து விட்டார். அவர் வெளி நாட்டிற்கு தப்பி சென்று விடலாம் என்பதால் அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெயபாண்டி, பழனியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளிகளை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.






