என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தி.மு.க.விடம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரிக்கை விடுப்போம் என்று பூத் கமிட்டி கூட்டத்தில் ப.சிதம்பரம் கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள சிவகங்கை நாடாளுமன்ற அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் கல்லல் தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    முன்னாள் தலைவர் ராஜரத்தினம், காங்கிரஸ் துணைத்தலைவர் மாங்குடி, அப்பாவு ராமசாமி, ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் களஞ்சியம், முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம், சுந்தரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது:-

    சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி கட்சியான தி.மு.க.விடம் சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை விடுப்போம். நமது கட்சி வெற்றி பெற்றால் போதாது. நமது கூட்டணி கட்சியினர் நிற்கும் அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற பாடுபட வேண்டும். அது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும்.

    தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. அரசு என்பது வெற்று பேச்சு அரசாக செயல்பட்டு வருகிறது. தேர்தலை மனதில் கொண்டு தற்போது பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். முதலில் கூட்டுறவு கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என அடுத்தடுத்த கடனை தள்ளுபடி செய்வதாக கூறும் அவர் இதற்காக எவ்வளவு நிதியை வைத்துள்ளார் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகள் 7 மாதம் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது வைகை-குண்டாறு திட்டம் இணைப்பு என தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தில் திட்டத்தை செயல்படுத்த போவதாக கூறியுள்ளார்.

    அந்த 4 ஆண்டு காலத்திற்கு முன்பே இந்த திட்டத்தை தொடங்கியிருந்தால் தற்போது அவை நிறைவு பணியை எட்டியிருக்கும். ஆனால் தற்போது தேர்தலை மனதில் வைத்து பேச ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க. அரசு வெற்று பேச்சு அரசு என தெரிகிறது.

    இந்த வெற்று பேச்சு அரசாக உள்ள அ.தி.மு.கவின் தோளில் ஏறிக்கொண்டு வந்து தமிழகத்தில் நுழைந்து விடலாம் என்று பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால் பா.ஜ.க. என்ற நச்சு செடியை ஒருபோதும் தமிழக மக்கள் தமிழகத்தில் விடமாட்டார்கள் என்பதை அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    எனது கடைசி மூச்சு உள்ளவரை பாஜகவை நான் எதிர்ப்பேன் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம், பாஜக கட்சி தலைவர்கள் அதிமுகவின் தோள்களில் ஏறிக்கொண்டு தமிழகத்தில் நுழைய முடியும் என்று எண்ணி பார்க்கிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார்.

    மேலும், பாஜகவை தோளில் சுமந்துகொண்டு வருவதற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என குறிப்பிட்டுளார். நான் மிக தெளிவாக இருக்கிறேன் என்று கூறி எனது உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை நான் எதிர்ப்பேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன் என பேசியுள்ளார்.
    காளையார்கோவில் பகுதிகளில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி - பரமக்குடி நெடுஞ்சாலையின் ஓரங்களில் ஏராளமான பட்டுப்போன மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் பகுதிகளில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி - பரமக்குடி நெடுஞ்சாலையின் ஓரங்களில் ஏராளமான பட்டுப்போன மரங்கள் உள்ளன. இந்த பட்டுப்போன மரங்கள் எந்நேரமும் சாலையின் குறுக்கே முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே சாலை ஓரங்களில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 86 பேர் காயம் அடைந்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் மலைக்குன்றின் மேல் உள்ள முருகப்பெருமான் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது, தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான மஞ்சுவிரட்டு விமரிசையாக நடக்கும்.

    இந்த ஆண்டுக்கான மாசி மகம் திருவிழா அரளிப்பாறையில் நடந்து வருகிறது. இதில் மஞ்சு விரட்டு நேற்று நடைபெற்றது.

    மஞ்சு விரட்டை காண சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். இதனால் மலைக்குன்று முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    முதலில் தொழுவத்தில் இருந்து வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட்ட 110 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இது தவிர ஆங்காங்கே வயல்வெளிகளில் 800-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

    மஞ்சுவிரட்டில் காளைகள் சீறி பாய்ந்து ஓடின. அவற்றை மாடுபிடி வீரர்கள் விரட்டி சென்று பிடித்தனர். ஒரு சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி விட்டு சென்றன.

    மாடு முட்டியதில் பார்வையாளர்களும், மாடுபிடி வீரர்களும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சிவகங்கை, மதுரை, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் டி.புதுபட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் சேது (வயது 28), ஆத்தங்குடியை சேர்ந்த முத்து மகன் அஜித்குமார் (26), மேல வண்ணாருப்பு பகுதியை சேர்ந்த வெள்ளி மகன் மகேஷ்(22),அநாமனூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மருதுபாண்டி(40) ஆகிய 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 4 பேரும் பார்வையாளர்கள் எனக் கூறப்படுகிறது.

    மேலும் 86 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் லேசான காயம் அடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க அரளிப்பாறை மஞ்சு விரட்டில் மாடு முட்டி 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 986 மாணவ, மாணவிகளுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    தமிழக அரசு அறிவித்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாத 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினார் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஹேமலதா அனைவரையும் வரவேற்று பேசினார்.

    கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு இணையதள வசதி மிக முக்கியமான ஒன்று. ஏழை எளியோர் வீட்டுப்பிள்ளை இதுபோன்ற பயன்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதை எண்ணி தமிழகத்திலுள்ள பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச 2 ஜிபி டேட்டா கார்டு வழங்க உத்தரவிட்டார்.

    இந்ததிட்டத்தினால் சிவகங்கை மாவட்டத்தில் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் பயிலும் 24 ஆயிரத்து 986 மாணவ, மாணவிகளுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளாபாலசந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி நன்றி கூறினார்.
    கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பணிகளை ஆய்வு செய்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 13-ந்தேதி முதல் நடந்து வருகின்றன. கீழடியில் 9 குழிகள் தோண்ட நூல் கட்டி அளவீடு செய்து ஒரு குழி மட்டும் 3 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் பாசி, மணிகள், சில்லு வட்டுகள் மற்றும் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நேற்று வந்தார். அவரை மாவட்ட உரிமையியல் நீதிபதி அச்சுதன் வரவேற்றார். பின்பு தலைமை நீதிபதி, கீழடியில் குழி தோண்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் பற்றிய விவரம் கேட்டறிந்தார். தலைமை நீதிபதியிடம் தொல்லியல் அலுவலர்கள் பாஸ்கரன், அஜய்குமார் ஆகியோர் விளக்கி கூறினார்கள். பின்பு 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தையும் தலைமை நீதிபதி பார்வையிட்டார்.
    காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சங்க பொருளாளர் பானுமதி, மாவட்ட இணைச் செயலாளர் மலர்க்கொடி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி முன்னிலை வகித்தார்.

    மாவட்டச் செயலாளர் சீமைச்சாமி, மாநில துணைத் தலைவர் பாண்டி, உள்பட பலர் வாழ்த்திப்பேசினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட துணைத் தலைவர்கள் பாண்டி, முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் ரெத்தினம், மற்றும் 247 பெண்கள் உள்பட 259 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 331 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிப்பது தொடர்பான அனைத்துகட்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலெட்சுமி மற்றும் அதிகாரிகளும் அ.தி.மு.க. சார்பில் அர்ச்சுனன், வி.ஆர்.பாண்டி, ரமேஷ், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து மற்றும் அழகர்சாமி மதன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    பா.ஜ.க. நகர் தலைவர் தனசேகரன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுசெயலாளர் மயில்சாமி, மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் கோபால், நகர் செயலாளர் கண்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் பழனிச்சாமி, விஜயகுமார், கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் பேசியதாவது:-

    இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள வாணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள கோட்டையூர் என்ற கிராமத்திற்கு சென்று வாக்களிக்கின்றனர். எனவே வாணி மற்றும் ஏனாதி ஆகிய 2 கிராமத்திற்கும் சேர்த்து வாணி கிராமத்தில் தனியாக ஒரு வாக்குச் சாவடி அமைக்க வேண்டும். இதே போல திருப்புவனத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. எனவே அதை சீரமைக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை தனி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடி தொகுதியில் 345 வாக்குசாவடிகளும் திருப்பத்தூர் தொகுதியில் 334 வாக்குச்சாவடிகளும் சிவகங்கை தொகுதியில் 348 வாக்குச்சவடிகளும் மானாமதுரை தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளும் சேர்த்து மொத்தம் 1,348 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள இடங்களில் வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் காரைக்குடி தொகுதியில் 98 வாக்குசாவடிகளும் திருப்பத்தூர் தொகுதியில் 76 வாக்குச்சாவடிகளும் சிவகங்கை தொகுதியில் 79 வாக்குசாவடிகளும் மானாமதுரை தொகுதியில் 77 வாக்குச்சாவடிகள் உள்பட 331 வாக்குசாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் 330 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே வாக்குச்சாவடி உள்ள வளாகத்திற்கு உள்ளேயே உள்ள கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடி மட்டும் வேறு இடத்தில் அமைந்துள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் சேர்த்து 1,679 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    மேலும் திருப்புவனத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாணி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் 14 கிடாய் வெட்டி எம்.எல்.ஏ. நாகராஜன் சிறப்பு பூஜை செய்தார்.
    மானாமதுரை:

    ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டியும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நாகராஜன், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் 14 கிடாய் வெட்டி சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து நாகராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கான திட்டத்தை துரிதமாக செயல்படுத்துகின்றனர். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளாலும், காவிரி, வைகை, குண்டாறு திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் என மக்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருவதால், வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பூஜை செய்துள்ளேன். இந்த கோவிலில் வேண்டினால் நினைத்தது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருப்புவனம் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.கே. கணேசன், சோனைரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    சிவகங்கையில் அம்மா மினி கிளினிக்குகளை கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்து பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் மற்றும் உருளி ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து பேசியதாவது:- 

    சிவகங்கை மாவட்டத்தில் 36 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளது. இந்த அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என 3 பேர் பணிபுரிவார்கள். அவசர சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை என அனைத்து வகை சிகிச்சைகளும் பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், ஊசி மருந்துகள் என போதிய அளவு இருப்புடன் இந்த அம்மா மினி கிளினிக்குகள் செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், பொது சுகாதாரத்துறையின் மூலம் 100 கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, உருளி ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு தனியார் விடுதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை நகர தலைவர் பழனிவேல்ராஜன், வட்டாரத்தலைவர் ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.அருணகிரி, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

    பா.ஜனதா என்னும் விஷ செடி வளர விடாமல் தடுப்பணை போட வேண்டும். அதற்கு காங்கிரஸ் ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த ஒரு கோடி தொழிலாளர்கள் நடந்தே தங்கள் மாநிலங்களுக்கு சென்றனர். இது பா.ஜனதா ஆட்சியின் அவலம் அல்லவா?

    ஊரடங்கினால் 12 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். வேலை வாய்ப்பு நிறுவனத்தில் 2 கோடியே 80 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பா.ஜனதா ஆட்சியால் 35 சதவீத குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டு உள்ளன. இதுவரை திறக்கப்படவில்லை. வருகிற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் அவசர தேவைக்காக வெளியே வந்தவர்கள் மீது வழக்கு போட்டதே தவறு. இப்போது அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளது நகைப்புக்குரியது. கடந்த 4 ஆண்டு காலமாக தூங்கி விட்டார் போல.

    தற்போது ஆட்சி முடிய போகிற தருணத்தில் தேர்தலுக்காக அவசர, அவசரமாக புதிய திட்டங்களை அறிவிக்கிறார், எடப்பாடி பழனிசாமி. மக்களுக்கு தெரியும் இந்த ஆட்சியின் நிலை. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு குளிர் சாதன பஸ்கள் நேற்று முதல் இயங்க தொடங்கின.
    காரைக்குடி:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 8 மாதம் காலம் வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளன. கடந்த 11 மாதங்களாக குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேற்று முதல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை இயக்க உத்தரவு பிறப்பித்தது.

    இதையொட்டி நேற்று அதிகாலை முதல் குளிர்சாதன பஸ்களை சுத்தம் செய்து பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல், பஸ்சை இயக்கி பார்த்து பழுதுகளை சரி செய்யுப்பட்டது. அதன் பின்னர் பணிமனையில் இருந்து பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இயக்கப்பட்டது. காரைக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கும், காரைக்குடியில் இருந்து மதுரைக்கும் தலா 3 முறை குளிர் சாதன விரைவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முககவசம் அணிந்தவர்களே பஸ்சுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 11 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் அரசு விரைவு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ×