search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 4 பேர் பலி- 86 பேர் காயம்

    சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 86 பேர் காயம் அடைந்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் மலைக்குன்றின் மேல் உள்ள முருகப்பெருமான் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது, தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான மஞ்சுவிரட்டு விமரிசையாக நடக்கும்.

    இந்த ஆண்டுக்கான மாசி மகம் திருவிழா அரளிப்பாறையில் நடந்து வருகிறது. இதில் மஞ்சு விரட்டு நேற்று நடைபெற்றது.

    மஞ்சு விரட்டை காண சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். இதனால் மலைக்குன்று முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    முதலில் தொழுவத்தில் இருந்து வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட்ட 110 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இது தவிர ஆங்காங்கே வயல்வெளிகளில் 800-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

    மஞ்சுவிரட்டில் காளைகள் சீறி பாய்ந்து ஓடின. அவற்றை மாடுபிடி வீரர்கள் விரட்டி சென்று பிடித்தனர். ஒரு சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி விட்டு சென்றன.

    மாடு முட்டியதில் பார்வையாளர்களும், மாடுபிடி வீரர்களும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சிவகங்கை, மதுரை, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் டி.புதுபட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் சேது (வயது 28), ஆத்தங்குடியை சேர்ந்த முத்து மகன் அஜித்குமார் (26), மேல வண்ணாருப்பு பகுதியை சேர்ந்த வெள்ளி மகன் மகேஷ்(22),அநாமனூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மருதுபாண்டி(40) ஆகிய 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 4 பேரும் பார்வையாளர்கள் எனக் கூறப்படுகிறது.

    மேலும் 86 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் லேசான காயம் அடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க அரளிப்பாறை மஞ்சு விரட்டில் மாடு முட்டி 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×