என் மலர்
சேலம்
- 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்த வர்களின் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்ட எல்லைகளில் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடத்த சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மற்றும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருகே உள்ள சேலம் மாவட்ட எல்லையான தலை வாசல், ஆத்தூர், மணிவிழுந்தான், கல்வராயன்மலை கிராமங்களில் போலீசார் தீவிரமாக கள்ளச்சாராய சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமசேஷபுரம், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தலைவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 25), ராமசாமி (58) மற்றும் காமக்காபாளையம் பகுதியை சேர்ந்த பெரியம்மாள் (60), வடகுமறை பகுதியை சேர்ந்த சிவகாமி (60) ஆகிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பிடிபட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு உடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 4 வழிச்சாலையாக உள்ள இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இந்நிலையில், நேற்று காலை சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சாலையோரம் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டாலும் அவ்வழியாக கனரக வாகனங்கள், பஸ்கள் என அடுத்தடுத்து வாகனங்கள் சென்றன. வாகன போக்குவரத்து இல்லாத இடத்தை தேர்வு செய்து இதுபோன்ற ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்காமல் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, ஆபத்தை உணராமல் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் செல்லும் வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது.
- குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. அதன்படி இங்கிருந்து வேலூர், சென்னை வரை குடிநீர் வழங்கப்படுகிறது.
தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியிலிருந்து 103 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 42.39 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 13.35 டி.எம்.சி.யாக உள்ளது.
- வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
- ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர்.
ஏற்காடு:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாப் தலங்களில் ஒன்றாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு திகழ்கிறது.
இங்கு தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று முதல் நாளை திங்கட்கிழமை வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சனிக்கிழமை தினமான நேற்று மதியம் முதல் ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்ல கூடிய ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனர். விடுமுறை இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். குடும்பத்துடன் அண்ணா பூங்காவில் உள்ள ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவை விளையாடி மகிழ்ந்தனர்.
லேடீஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் ஆகிய பாறைகள் இயற்கையாகவே காட்ச்சித்தளங்களாக அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம் நகரத்தின் அழகை கண்டு களித்தனர்.
ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள பகோடா காட்சி முனை பிரமிட் பாய்ன்ட் என அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. அதுபோல் ராஜ ராஜேஸ்வரி கோவில், சேர்வ ராயன் கோவிலை சுற்றுலாப் பயணிகள் வழிபட்டனர்.
ஏற்காடு பட்டு பண்ணையில் மெல்பெரி செடிகள் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது. இங்கு ரோஜா நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை சுற்றுலாப் பயணிகள் வீட்டுக்கு கொண்டு செல்ல வாங்கு வதை காண முடிந்தது.
கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மாலை வேளையில் படகு சவாரி நிறுத்தப்பட்ட நிலையிலும் அதிக படியான சுற்றுலாப் பயணிகள் படகு இல்லம் வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- கர்நாடகாவை சேர்ந்தவருக்கு ஜல் சக்தி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீராதாரங்களை தடுக்கும் விதமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் இருந்து உபரி நீரை பெற்று தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பூம்புகார் முதல் மேட்டூர் அணை வரை பேரணியாக சென்றனர்.
நேற்றிரவு சேலம் வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினருக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீராதாரங்களை தடுக்கும் விதமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக முதல்வர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே பேசி நீராதார பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும், ஆனால் அதனை வைத்து மோடி அரசியல் செய்கிறார். தற்போது கர்நாடகாவை சேர்ந்தவருக்கு ஜல் சக்தி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மோடி விவசாயிகளை புறக்கணித்து செயல்பட்டதால் தமிழ்நாடு, உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல இடங்களில் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆட்சி அமைக்கும் தகுதியை அவருக்கு மக்கள் வழங்கவில்லை என்றார். தொடர்ந்து மேட்டூருக்கு அவர்கள் புறப்பட்டு சென்றனர். இன்று அதிகாலை 1 மணியளவில் மேட்டூரை சென்றடைந்தனர்.
இதற்கிடையே அனுமதி இல்லாமல் பேரணியாக சென்றதாக சேலம் சூரமங்கலம் போலீசார் பி.ஆர்.பாண்டியன் உள்பட 70 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.
- கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.
சேலம்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை ஆகிய பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமாக முட்டை உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த முட்டைகள் தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கும், தமிழகத்தின் பிற மாவட்டடங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணைகளில் ரெக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதனை பண்ணயைாளர்கள் கடை பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி 460 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்றுகாலை 540 காசுகளாக இருந்தது . இதற்கிடையே நேற்று நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
இதையடுத்து 540 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை 5 காசுகள் உயர்த்தி 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு , சென்னை 600 காசுகள் , ஐதராபாத் 520, விஜயவாடா 520, பர்வாலா 463, மும்பை 575, மைசூரு 545, பெங்களூரு 585, கொல்கத்தா 540, டெல்லி 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து கோழிப்பண்ணை யாளர்கள் கூறியதாவது-
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் குளிர்ந்த சீேதாஷ்ன நிலை நிலவி வருகிறது.
இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் கர்நாடகா , மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாமக்கல்லில் நேற்று முட்டை கோழி பண்ணை யாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது . இதில் ஒரு கிலோ 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கோழி விலையை 5 ரூபாய் உயர்த்தி 97 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.
- சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.
- மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்காக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகிளில் நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காடு, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
ஏற்காட்டில் நேற்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய மழை 3.30 மணி வரை சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது. ஏற்காடு ஒண்டிக்கடை பஸ் நிலையம், டவுன், செங்காடு, மஞ்சகுட்டை, வாழவந்தி, கொம்பக்காடு, நாகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கன மழை கொட்டியது.
மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கன மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இதே போல டேனீஸ்பேட்டை, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஆனைமடுவு, வாழப்பாடி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது . சேலம் மாநகரில் நேற்று 3 மணியளவில் தொடங்கிய மழை லேசான தூறலுடன் நின்று போனது. இதனால் சேலம் மாநகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 17 மி.மீ.மழை பெய்துள்ளது. சேலம் 0.6, வாழப்பாடி 3, ஆனைமடுவு 1, ஆத்தூர் 1, தம்மம்பட்டி 9, சங்ககிரி 2.3, மேட்டூர் 3.2, டேனீஸ்பேட்டை 14 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 51.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
- ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் வின்சென்டில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரியில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரியில் 20 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இளநிலை படிப்புக்கு 1400 இடங்கள் உள்ளன. இதற்காக நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இங்கு சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த 29-ந் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று கல்லூரியில் தொடங்கியது. கல்லூரி முதல்வர் செண்பக லெட்சுமி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.
இதில் இளங்கலை கணிதம், புள்ளியில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், நிலவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.ஏ. தமிழ், பி.காம், பி.காம். சி.ஏ, பி.காம். கூட்டுறவு, நிலவியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவ-மாணவிகள் விரும்பி தேர்வு செய்தனர். இதனால் அந்த பாடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து நாளை ( 11-ந் தேதி) பி.காம், பிகாம் சி.ஏ., கூட்டுறவு, பி.பி.ஏ., பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியில் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறப்பட்ட செல்போன்குறுஞ்செய்தி, இ.மெயில் விவரம் ஆகியவற்றுடன் 10,11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் , சாதி சான்று, மாற்று சான்று, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருகிற 15-ந் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
- அ.தி.மு.க. ஓட்டு எங்கும் போகவில்லை. எங்களுக்குதான் தான் கிடைத்து இருக்கிறது.
- தி.மு.க. அமைச்சர் ரகுபதிக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு அருகதை கிடையாது.
சேலம்:
சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த தேர்தல் குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பல விமர்சனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் உங்களை நான் சந்தித்து பேசுகிறேன்.
தேர்தல் பிரசாரத்தை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த நான் ஒருவர் மட்டும் தான் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்தேன். அதுபோல் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. கூட்டணி பலம் இல்லை, தி.மு.க கூட்டணி பலத்தில் போட்டியிடுகிறது என விமர்சனம் செய்கிறார்கள். அ.தி.மு.க. இந்த தேர்தலில் 2019 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்றி இருக்கிறோம். இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறோம்.
அ.தி.மு.க. ஓட்டுக்கள் எதிர்கட்சிக்கு சென்று விட்டது என சொல்கிறார்கள். அ.தி.மு.க. ஓட்டு எங்கும் போகவில்லை. எங்களுக்குதான் தான் கிடைத்து இருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தான் கூடுதல் வாக்குகள் பெற்று இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அமோக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும்.
கேள்வி: அ.தி.மு.க.வுக்கு ஒரு சில தொகுதிகளில் டெபாசிட் கிடைக்கவில்லையே?
பதில்: ஒரு சில தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. அவை கொஞ்சம் காலத்தில் சரி செய்யப்படும்.
கே: பா.ஜ.க. கூட்டணி இருந்திருந்தால் வெற்றி கிடைத்து இருக்குமா?
ப: கூட்டணி இருந்திருந்தால், போயிருந்தால், அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 2014, 2019, 2024-ல் கூட்டணி மாறி மாறி அமைப்பாங்க. அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கட்சி கூட்டணி அமையும். 1992-ல் தி.மு.க. 2 இடங்களில் வெற்றி பெற்றது. 1996-ல் அ.தி.மு.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆகவே தி.மு.க. அழிந்து போச்சா, அ.தி.மு.க. அழிந்து போச்சா அதெல்லாம் கிடையாது. தி.மு.க. கடந்த காலங்களில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. எனவே மாறி மாறி தான் ஆட்சிக்கு வருவாங்க.
ஆகவே அ.தி.மு.கவுக்கு பின்னடைவு என்பது திட்டமிட்டு பரப்புகின்ற ஒரு பொய்யான செய்தி.
கே: சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணிக்கு சேர்த்து இருந்தால்?
ப: இதற்கு மேல் அதை பற்றி பேசி என்ன பிரயோசனம். அரசியலில் வேண்டும் என்று திட்டமிட்டு எல்லோரும் சேர்ந்து ஒரு குழப்பத்தை விளைவித்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பிரிந்து போன பிறகு தான் 1 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக கிடைத்து இருக்கிறது.
கே: இனிவரும் காலங்களில் அ.தி.மு.க செயல்பாடு?
ப: இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும்.
தி.மு.க. அமைச்சர் ரகுபதிக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு அருகதை கிடையாது. அவர் அ.தி.மு.க. வேட்டியை மாற்றி கட்டி போனவர். அவரை அடையாளம் காட்டிய கட்சி அ.தி.மு.க., வேண்டும் என்றே திட்டமிட்டு அவர் அ.தி.மு.க. பற்றி பேசுகிறார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. கூட்டணி விலகி விட்டது. அண்ணாமலையின் கனவு இந்த தேர்தலில் நனவாகவில்லை. அந்த விரக்தியில் அவர் பேசுகிறார். பா.ஜ.க.வுக்கு தனிப்பெருபான்மை கிடைக்காததற்கு தமிழ்நாட்டில் அந்த கட்சியில் உள்ள தலைவர்களை போல் பல தலைவர்கள் இருப்பார்கள். அதனால் தான் அந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
நான் முதலமைச்சரானபோது என்னன்னவோ தகவல்கள் வந்தது. மூன்று மாதம் இருப்பாரா, நான்கு மாதம் இருப்பாரா என்றனர். ஆனால் நான்காண்டு ரெண்டு மாதம் சிறப்பான ஆட்சி தந்தோம். பிறகு கட்சி இரண்டாகும் என அவதூறு பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வந்தோம். வெற்றி வரும்வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதால்தான் தனித்துப் போட்டியிட்டோம்.
ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசிய கட்சியுடன் நாங்கள் சேர்ந்து இருப்போம். தமிழ்நாட்டு உரிமையை காக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை காக்கவும் உரிமைகள் பறி போகும்போது தடுக்கவும் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படவும் அ.தி.மு.க. இந்த முடிவை எடுத்தது.
தி.மு.க. கூட்டணி என்ன சாதிப்பார்கள் என பார்க்கத்தானே போகிறோம். பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு அதை பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்றார்.
தொடர்ந்து ஜெயக்குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேராது எனக் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, (கூட்டணியில் சேராதென ஏற்கனவே தான் பேட்டி அளித்த வீடியோவை எடப்பாடி பழனிசாமி காண்பித்தார்) முன்பே நாங்கள் இது குறித்து தெரிவித்துவிட்டோம். அது பற்றி தான் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார், என்றார்.
தொடர்ந்து நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது வேட்பாளர்களுக்கு உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி அமைத்த அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தே.மு.தி.க. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கூறி உள்ளனரே என்ற கேள்விக்கு, மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.
பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்ததாக கூறுகிறார்கள் என்று கேட்டதற்கு, அப்படி இல்லை அப்படி இருந்தால் எப்படி ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்திருக்கும். இந்த தேர்தலில் ஒரு சதவீதம் கூடுதலாக அ.தி.மு.க. வாக்குகள் பெற்றிருக்கிறது அவதூறு பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தி.மு.க. கூட்டணிக்காக ஸ்டாலின், உதயநிதி, திருமாவளவன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
* அ.தி.மு.க. கூட்டணியில் நான் மட்டுமே மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.
* கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.விற்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளது.
* 2019-ல் தி.மு.க. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 33.52, 2024-ல் பெற்ற வாக்குகள் 26.93.
* கடந்த தேர்தலை விட சுமார் 6 விழுக்காடு வாக்குகளை தி.மு.க. குறைவாக பெற்றுள்ளது.
* 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வாக்குகளும் 6 சதவீதம் அளவிற்கு குறைந்தது.
* தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி.
* எஸ்.பி.வேலுமணிக்கும் எனக்கும் பிரச்சனை என திட்டமிட்டு பொய் பரப்பி குழப்பம் விளைவிக்க முயற்சி.
* அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.
- தேர்தலில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி தான் வரும், அரசியல் பின்னடைவு இல்லை.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் 8 முறை வந்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
* பா.ஜ.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் கூட்டணி பலத்தோடு தேர்தலை எதிர்கொண்டன.
* பா.ஜ.க. கூட்டணிக்காக மோடி, ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
* 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 18.80 சதவீத வாக்குகள் பெற்றது.
* 2014-ல் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி குறைவாக வாக்குகள் பெற்றது.
* தேர்தலில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி தான் வரும், அரசியல் பின்னடைவு இல்லை.
* பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.
* 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை.
* 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
* 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் அதி.மு.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- ‘மருதமலை’ திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூரும் வகையில் டிப்-டாப் நபர் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது.
- டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
தனது 2-வது மனைவி மகனுடன் மாயமானது குறித்து புகார் கொடுக்க வந்த டிரைவர் அவளுக்கு நான் 3-வது கணவர் என்று கூறியதால் அவரை விசாரித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைசுற்றி கிறங்கி போனார்.
நடிகர் வடிவேலு பட நகைச்சுவை காட்சி போன்று நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு பேண்ட், சட்டை அணிந்த டிப்-டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்தார். அவரிடம் அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்த போது, தனது மனைவி மற்றும் 5 வயது மகன் மாயமாகி விட்டதாகவும் புகார் கொடுக்க வந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகார் குறித்து அவர் விசாரித்த போது அவருக்கு தலைசுற்றலே வந்து விட்டது என்று கூறலாம்.
ஆம். நடிகர்கள் அர்ஜூன், வடிவேலு நடித்த 'மருதமலை' திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூரும் வகையில் அந்த டிப்-டாப் நபர் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது. அந்த பட நகைச்சுவை காட்சியில் போலீஸ் நிலையத்துக்கு தம்பதியாக வந்தவர்களிடம் ஏட்டுவான நடிகர் வடிவேலு விசாரிக்கும் போது, இவர் தான் என் முதல் கணவர், இவர் எனக்கு முறைப்படி தாலிகட்டிய கணவர் என்று அந்த பெண் பட்டியலிட்டு ஏட்டு வடிவேலுவை கிறுகிறுக்க வைப்பார்.
அதேபோல் தான் புகார் கொடுக்க வந்தவரிடம் விசாரித்த போது, அவர் டிரைவர் என்பதும், தனது 2-வது மனைவியும், 5 வயது மகனும் மாயமாகி விட்டதாக கூறி இருந்தார். இதில் என்ன 2-வது திருமணம் தானே என்று யோசிக்க தொடங்கினால், காணாமல் போன பெண்ணுக்கு வந்த டிரைவர் 3-வது கணவராம். இப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலு பாணியில் சற்று தவித்து தான் போனார்.
இருப்பினும் அந்த டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர். தனது 2-வது மனைவியை காணவில்லை என அந்த பெண்ணின் 3-வது கணவர் புகார் கொடுத்தது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






