என் மலர்tooltip icon

    சேலம்

    • நான் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவள். வேறு சமூகத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்து கொண்டு வீரபாண்டியில் வசித்து வருகிறேன்.
    • இந்த நிலையில், வீரபாண்டி அருகே உள்ள அரசம்பாளையம் ஊர் தர்மகத்தாக்கள் எங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர்.

    சேலம்:

    சேலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் - ஜானகி தம்பதியினர் மற்றும் அவரது குடும்பத்தினர், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட ஜானகி இதுகுறித்து கூறும்போது, நான் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவள். வேறு சமூகத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்து கொண்டு வீரபாண்டியில் வசித்து வருகிறேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில், வீரபாண்டி அருகே உள்ள அரசம்பாளையம் ஊர் தர்மகத்தாக்கள் எங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். இது சம்பந்தமாக வீரபாண்டி பஞ்சாயத்து தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும், ஊர் தர்மகத்தா, எந்த கோவிலுக்கும் செல்லக்கூடாது, எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது, யாரையும் சந்திக்க கூடாது எனக் கூறி எங்களை ஒதுக்கி வைத்து விட்டனர். எங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டின் உரிமையாளரையும் ஒதுக்கி வைத்து விட்டனர்.

    இதனால் அந்தப் பகுதியில் எந்த பொருளும் வாங்க முடியாமலும், வாழவும் முடியாத சூழ்நிலை உள்ளது.

    இது குறித்து தர்மகத்தாவிடம் கேட்டதற்கு, எங்கள் ஜாதி பெயரை சொல்லி பேசி மிரட்டினார். இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் ஊருடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும். எங்களை இழிவாக பேசிய தர்மகத்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

    • சேலம் மார்க்கெட்டில், பண்ருட்டி பலாப்பழம், கொல்லிமலை பலாப்பழம் மற்றும் கேரள பலாப்பழம் ஆகிய வகைகள் விற்பனைக்கு வருகின்றன.
    • தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழம் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டில், பண்ருட்டி பலாப்பழம், கொல்லிமலை பலாப்பழம் மற்றும் கேரள பலாப்பழம் ஆகிய வகைகள் விற்பனைக்கு வருகின்றன.

    பண்ருட்டி பலாப்பழம்

    தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழம் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. சீசன் காரணமாக பலாப்பழம் லோடு அதிகளவில் சேலத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

    சேலம் சத்திரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழ மண்டிகளில் பண்ருட்டி பலாப்பழங்கள், 5 கிலோ முதல் 40 கிலோ எடை வரையில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்வு செய்து தங்களுக்குப் பிடித்தமானவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

    மேலும் சில்லரை வியாபாரிகள் இங்கிருந்து வாங்கிச் சென்று சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    பலாப்பழம் வரத்து குறித்து கடைக்காரர்கள் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்று வட்டாரங்களில் விளையும் பலாப்பழம், தனித்த சுவை கொண்டது. தற்போது அறுவடை தொடங்கி உள்ளது.

    சேலத்தில் ஒவ்வொரு பழ மண்டிக்கும் தேவைக்கேற்ப 2 நாட்களுக்கு ஒருமுறை சராசரியாக 2 முதல் 4 டன் வரை பண்ருட்டி பலாப்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.

    போக்குவரத்து செலவு, நடைமுறை செலவு ஆகியவை அதிகரித்துவிட்டதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பலாப்பழத்தின் விலை அதிகரித்துவிட்டது.

    கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. பலாப்பழங்கள் ஒவ்வொன்றும் 5 கிலோ முதல் 40 கிலோ வரை எடையுடன் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    • குமார்-விஜயலட்சுமி தம்பதியினர், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
    • கால்நடை உதவியாளர் பணிக்கான ஆணையை, ரூ.4 லட்சம் வழங்கினால் நான் வாங்கி தருகிறேன் என்றார். இதனை நம்பி, ஓமலூர் அங்காளம்மன் கோவில் அருகே 4 லட்ச ரூபாயை கொடுத்தோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த குமார்-விஜயலட்சுமி தம்பதியினர், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

    அதன்பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 2015-ம் ஆண்டு எனது மனைவிக்கு கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன்.

    அப்போது பண்ணப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் அறிமுகத்தில் வேல்முருகன் என்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலையின் மைத்துனர் எனக்கூறினார்.

    மேலும், நீங்கள் விண்ணப்பித்த கால்நடை உதவியாளர் பணிக்கான ஆணையை, ரூ.4 லட்சம் வழங்கினால் நான் வாங்கி தருகிறேன் என்றார். இதனை நம்பி, ஓமலூர் அங்காளம்மன் கோவில் அருகே 4 லட்ச ரூபாயை கொடுத்தோம். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணமும் திருப்பி தரவில்லை.

    இது குறித்து கேட்டதற்கு பணமும் தர முடியாது வேலையும் வாங்கி தர முடியாது என கூறி, சமூகத்தின் பெயரை கூறி இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் எங்கு புகார் கொடுத்தாலும் உன்னால் ஒன்று செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். கடனைப் பெற்று, பணத்தை கொடுத்து தவித்து வருகிறோம்.

    கடந்த 8 ஆண்டாக அவரிடம் இருந்து பணத்தை வாங்க முடியவில்லை. இது குறித்து ஓமலூர் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.
    • இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.15 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.

    சேலம்:

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 295 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளி களிடமிருந்து 16 மனுக்கள் வரப்பெற்றன.

    முன்னதாக, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.15 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.

    இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • இந்திய ெரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா காலத்தில் இந்த பயணச் சலுகையானது நிறுத்தப்பட்டது.
    • கொரோனாவை காரணம் காட்டி இந்திய ெரயில்வேயில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    சேலம்:

    ெரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயணச்சீட்டு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீண்டும் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய ெரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா காலத்தில் இந்த பயணச் சலுகையானது நிறுத்தப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி இந்திய ெரயில்வேயில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. நடைமேடை டிக்கெட் விலை மாற்றம், பயணிகள் ரெயிலுக்கான டிக்கெட் விலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் முறைபடுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் பயண டிக்கெட் சேவை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

    இது தொடர்பாக மத்திய ெரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை சீட்டு முறை மீண்டும் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. அப்படி வரும் பட்சத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை பயணச்சீட்டில் சலுகை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மூத்த குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • நேற்று 102.72 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 102.71 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 2,023 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,873 கனஅடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 102.72 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 102.71 அடியாக சரிந்தது.

    • 1-வது யுனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது.
    • பழுது சரி செய்யப்பட்ட பிறகு முதல் யுனிட்டில் இருந்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும்.

    மேட்டூர்:

    மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யுனிட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 4 யுனிட்கள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு பழைய அனல்மின் நிலையத்தின் 1-வது யுனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.

    மற்ற யுனிட்டுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்ட பிறகு முதல் யுனிட்டில் இருந்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்று மேட்டூர் அனல்மின் நிலைய பொறியாளர் தெரிவித்தார்

    • மாம்பழங்கள் சேலத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
    • வெளியூர் வியாபாரிகள் பல்வேறு ரக மாம்பழங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது சேலத்து மாம்பழங்கள் தான். அத்தகைய மாம்பழங்கள் சேலத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சங்ககிரி , மேட்டூர், எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மா மரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் ,மே மாதங்களில் மாம்பழ சீசன் களை கட்டும்.

    சேலம் மாவட்டத்தில் மாம்பழம் சீசன் வழக்கமாக 60 நாட்களுக்கு மேலாக களை கட்டும். அப்போது சேலம் மார்க்கெட்டுகள், கடைவீதிகள் மற்றும் முக்கிய சாலைகள், தள்ளுவண்டிகளில் தெருவோர வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து வியாபாரம் செய்வார்கள். இதனால் எங்கும் சேலம் மாம்பழத்தின் மனம் வீசும்.

    தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி உள்ளதால் சேலம் உழவர் சந்தைகளுக்கும் மற்றும் பழ மண்டிகளுக்கும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் தினமும் அதிக அளவில் மாம்பழங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மாம்பழம் லோடு வருகிறது.

    தற்போது மாம்பழம் வரத்து தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்து இருக்கிறது.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது கிளி மூக்கு, பங்கனப் பள்ளி, சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, இமாம் பசந்த், ஆகிய மாம்பழங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    சேலம் ஏற்காடு ரோடு , அஸ்தம்பட்டி , செவ்வாய்ப்பேட்டை, கடை வீதி, பழைய பஸ் நிலைய கடை வீதி, புதிய பஸ் நிலையம் மற்றும் 5 ரோடு, ஜங்ஷன், அம்மாபேட்டை ,கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஆன்லைன் மூலம் வியாபாரமும் தொடங்கியுள்ளது. வெளியூர் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஆன்லைனில் புக்கிங் செய்து சேலம் மாம்பழத்தை வாங்கி ருசித்து வருகிறார்கள். இந்த வியாபாரம் இனி வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும்.

    இந்த மாம்பழங்கள் தற்போது கிலோ ரூ.50 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கிளி மூக்கு மாங்காய் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு கிளிமூக்கு மாங்காய்கள் 5 டன் வரையும், மற்ற ரக மாம்பழங்கள் 3 டன் அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் 25 டன்னுக்கும் அதிகமாக மாம்பழங்கள் வர வாய்ப்புள்ளது. அப்போது மாம்பழங்களின் விலையும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.

    அடுத்த மாதம் தொடக்கத்தில் அதிக சுவை கொண்ட பிரசித்தி பெற்ற மல்கோவா மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டு சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு மற்றும் பருவம் மாறிய மழையால் வரத்து குறைவால் வியாபாரிகள் பாதிப்படைந்த நிலையில் தற்போது மாம்பழ வரத்து அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியான நிலையில் வியாபாரம் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து சேலத்தைச் சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது . கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கிய மாம்பழ சீசன் தற்போது படிப்படியாக வரத்து அதிகரித்து வருகிறது.

    மார்க்கெட்டுகளுக்கு வந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.

    அதேபோல தற்போது வெளியூர் வியாபாரிகள் பல்வேறு ரக மாம்பழங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம். இன்னும் 15 நாட்களில் மாம்பழம் வரத்து உச்சம் பெறும். தொடர்ந்து 2 மாதங்களுக்கு மாம்பழம் விற்பனை அதிக அளவில் இருக்கும். தற்போது விலை சற்று அதிகமாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் விலை குறையும் .இதனால் மாம்பழ விற்பனையும் சூடு பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக சேலம் மாவட்ட எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மருந்து மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்ககிரி:

    சங்ககிரி விஎன்பாளையம் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (63). இவர் சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக சேலம் மாவட்ட எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை டாக்டர் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் கீதா, உள்ளிட்ட குழுவினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது நோயாளிகளுக்கு பன்னீர்செல்வம் ஆங்கில மருத்துவம் பார்த்தது உறுதியானது.

    போலி மருத்துவர் பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்து நோயாளிகளுக்கு பயன்படுத்தி வந்த மருந்து மாத்திரைகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, சங்ககிரி வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த தேவராஜன் (67), என்பவர் வீட்டில் வைத்து ஆங்கில மருத்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து தெரியவந்தது.

    அதன் பேரில் சங்ககிரி அரசு மருத்துவர் செந்தில்வேலுடன் சென்று சோதனை செய்தபோது போலி மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டு மருந்து மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சங்ககிரியில்

    போலி மருத்துவர்கள் 2பேர் கைது

    • மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
    • இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:கருப்பூர் அருகே

    தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

    சேலம் கருப்பூர் அருகே உள்ள மஞ்சுளாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மணிகண்டனுக்கு மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
    • நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    எடப்பாடி:கொங்கணாபுரத்தில்

    ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

    கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 3 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 550 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் நடந்தது. இதில் பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ. 7 ஆயிரத்து 350 முதல் ரூ. 8 ஆயிரத்து 361 வரை விற்பனையானது. இதேபோல் டி. சி. எச். ரக பருத்தியானது, ஒரு குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 600 முதல் ரூ. 8 ஆயிரத்து 529. வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரத்து 250 முதல் ரூ. 6 ஆயிரத்து 50 வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதையொட்டி சேலம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சென்னை, கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர் ஐ. சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், ராஜேந்திரன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கௌதம், இளைஞர் அணி பொதுச் செயலாளர்கள் காளிமுத்து என்ற கவுதம், கலைச் செல்வன், பொருளாளர் ராசி எஸ்.கிரிதரன் உள் பட பலர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    நேற்று இரவு 8.37 மணிக்கு சென்னை கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் முதலாவது நடை மேடைக்கு வந்தது.

    அப்போது ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    தொடர்ந்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் ரயிலுக்கு பச்சைக்கொடி காண்பித்து கோவைக்கு உற்சாகமாக வழி அனுப்பி வைத்தார்.

    முன்னதாக சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் கட்சியினர் மேள தாளங்கள் முழங்க மலர் தூவி ரயிலை வரவேற்றனர்.5 நிமிடம் சேலத்தில் நின்ற நிலையில் இரவு 8. 43 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு சென்றது.

    சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காண்பதற்காக 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.இதையொட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில்

    வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

    ×