என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ரூ.30 கோடியில் அமைகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் ரூ.30 கோடியே 23 லட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளாக பொன்னை ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறுகள், தரைத்தள மற்றும் மேநீர் தேக்கத் தொட்டிகள், பிரதான குடிநீர் மற்றும் விநியோக பைப் லைன் ஆகியவை அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் சங்கீதா மகேஷ், துணைத் தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அம்சா, வாலாஜா ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கட்ரமணன், செயல் அலுவலர் கோபிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இத்திட்டத்தின் மூலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் முடிக்கப்படும்.

    இதனால் பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் 14 ஆயிரத்து 505 பேர் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 56 பேர் கலந்து கொண்டனர்
    • கலெக்டர் தலைமை தாங்கி பேசினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

    இந்த பயிற்சியில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 56 பேர் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பூர்த்தி செய்த படிவத்தினை எவ்வாறு மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து, மாநில அளவிலான பயிற்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் விரிவாக பயிற்சி அளித்தaனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உட்பட இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கடும் அவதி
    • சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் மிக முக்கியமான சாலையாக, காந்தி ரோடு உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கனரக வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டும் செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆனால் இன்று காலை 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் காந்தி ரோட்டை ஆக்கிரமித்து நின்றது. வழிமறித்தபடி நின்று கொண்டிருந்த கனரக வாகனங்களை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    காலை நேரத்தில் வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக நின்றதால், காந்தி ரோட்டில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், காந்தி ரோட்டில் அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிகிச்சைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்
    • 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசாருக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. காவேரிப்பாக்கம், அவளூர், பாணாவரம், நெமிலி, கொண்டபாளையம், சோளிங்கர், ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். பயிற்சியில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கலந்து கொண்டார். அப்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முன் அவருக்கு செய்யவேண்டிய சிகிச்சைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் மழைக் காலங்களில் ஆறு, குளம், ஏரி கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தவறி விழுந்து மீட்கப்படுவோருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என விளக்கம் அளிக்கப்பட்டது.

    • பூமிபூஜை நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த கீழ்வீதி ஊராட்சியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையினால் ஆதி திராவிடர் காலணிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.இதனால் அப்பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதையடுத்து பழுதடைந்த சாலையை சீரமைக்க ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் சாலையின் இருபுறமும் தடுப்புச் சுவருடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, ஒன்றியக்குழு துணைதலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்றதலைவர் ஆனந்தி செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமேகலை வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அர்ச்சனா கலையரசு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (38) பெல் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார்.

    நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார்.பின்னர் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடைப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை உட்பட பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக மகேஸ்வரன் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரன் வீட்டில் திருட்டு போன நகை, பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது
    • ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது.

    மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி நவீன்துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் ஆற்காடு அடுத்த மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி. டிரைவர். சத்தியமூர்த்தி (28) கடந்த ஆண்டு ஆற்காடு - செய்யாறு சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற போது எதிரே வந்த கார் மோதி விபத்தில் உயிரிழந்தார்.

    விபத்து தொடர்பாக இழப்பீடு கேட்டு சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இன்சூரன்ஸ் நிறுவனம் சத்தியமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் மொத்தமாக 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

    • 2 பேர் கைது
    • கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை,காரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவில் ராணிப்பேட்டை பஜாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தனது நண்பர்களிடம் பைனான்ஸ் வசூல் செய்வதற்காக வந்து வசூல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளா என்கிற இளம்பரிதி (32), ஆர்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த லொட்டா என்கிற சண்முக பிரியன் (26) ஆகிய இருவரும் ஏற்கனவே சினிமா தியேட்டரில் படம் பார்த்தபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜீவ் காந்தியை வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்.

    கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் ரூ.7ஆயிரத்து 500 மற்றும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ராஜீவ் காந்தி ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதி, சண்முக பிரியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 35 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பழமை வாய்ந்த ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் முயற்சியால் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் யாக சாலை பூஜைகளுக்கு பின்னர் பட்டாச்சாரியார்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நேற்று மாலை பெருமாள் திருக்கல்யாண உற்சவமும், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது

    முன்னதாக நேற்று முன்தினம் மகாரண்யம் முரளிதர சுவாவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை ஓச்சேரியை அடுத்த பெரும்புலிப்பாக்கம் பகுதியில் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான், மாவட்ட பிரதிநிதி ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதில் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் பேரூர் செயலாளர் பாஸ்(எ) நரசிம்மன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • பாணாவரம், அவளூர் காவல் நிலையங்களில் நடந்தது
    • வழக்குகளை விரைவில்‌ முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் மற்றும் அவளூர் போலீஸ் நிலையங்களில் வேலூா் சரக டி.ஐ.ஜி முத்துசாமி திடீா் ஆய்வு மேற்கொண்டாா் .

    இதில்,அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்குக் கோப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து டி.ஐ.ஜி. நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இரவு ரோந்து பணி மூலம் குற்றங்களை தடுக்க வேண்டும். மனுதார ர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கண்ணிய மான வார்த்தைகளில் பேச வேண்டும் என்று போலீசாரிடம் அறிவுறுத்தினார். அங்கு பணிபுரிபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.தொடா்ந்து, பாணாவரம் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.

    ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ்அசோக், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ராஜா, மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    அதேபோல அவளூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த டி.ஐ.ஜி., பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மணிமாறன்,சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

    • வினோத் காந்தி வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில், மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தூய்மை பணியாள ர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கி, அம்மூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்க்கு வேட்டி,சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அம்மூர் பேரூராட்சிமன்ற தலைவர் சங்கீதா மகேஷ், துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மூர் பேரூர் தி.மு.க. செயலாளர் பெரியசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், சிவா,வேதா சீனிவாசன் உள்பட தி.மு.க மற்றும் சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×