என் மலர்
ராணிப்பேட்டை
- அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- 25 சதவீத பணிகள் நிறைவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கிராம ஊராட்சிகளில் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணைந்து கிராமத்தின் வளர்ச்சிக்கு அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22 மற்றும் 2023-ம் நிதி ஆண்டுகளில் 117 கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அந்த கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து கிராம வளர்ச்சிக்கும், கிராம மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கிடும் வகையில் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் பட்டா வழங்கி மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 635 வீடுகள் கட்டி தரப்பட வேண்டும். அதேபோன்று கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மரம், செடிகளை நட்டு வளர்த்திட வேண்டும்.
நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா ஆண்டையொட்டி 60 ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் குளம், ஏரிகள் மேம்படுத்துதல், புதிய நீர் நிலைகள் ஏற்படுத்துதல், பண்ணை குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகளை முடிக்க வேண்டும். தற்போது வரை 25 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கிராமத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கட்டாயம் சென்று சேர வேண்டும்.இதனை ஆய்வு செய்து அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் செயல்படுத்திட வேண்டும்.திட்டங்கள் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் இடம் தேர்வு செய்து வழங்கும் பணிகள் ஆகியவற்றினை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், துணை கலெக்டர்கள், கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.
- காலியிடம் இருக்கும் பட்சத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் தேர்வு
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம்
இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: 2022-23-ம் கல்வி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 16 விடுதிகளில் காலியாக உள்ள 417 இடங்களுக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ள மாணவ மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களை அணுகி குறிப்பிட்ட காலக்கெடுவிற்க்குள் https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி விடுதிகளுக்கு வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். தேர்வு குழுவால் விடுதியில் தங்கும் மாணவர்கள் 21, 22ம் தேதிகளில் தேர்வு செய்யப்படுவார்கள். கல்லூரி விடுதிகளுக்கு வருகிற 5.8.22-ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். தேர்வு குழுவால் விடுதியில் தங்கும் மாணவர்கள் வருகிற 10ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள்.
நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிருஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் 85 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் 10 சதவீதம் பிற வகுப்பினர்கள் 5 சதவீதம் சேர்க்கப்படுவார்கள்.
5 கிலோ மீட்டர் இருக்க வேண்டும்
பள்ளிக்கும் வீட்டிற்கும்மான தொலைவு 5 கிலோ மீட்டருக்கும் மேல் இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர் கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இல்லாத நிலையில் அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் பட்சத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ராணிப்பேட்டை பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றிய விவகாரத்தில் முற்றுகை
- சேர்மன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி சொந்தமான புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கடைகள் உள்ளது.
இந்த கடைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மட்டும் பயன்ப டுத்திக் கொள்ளாமல் பொதுமக்கள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் இடையூறு ஏற்படும் வகையில் முன்பக்கம் நடைபா தைகளை ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக அரக்கோணம் கமிஷனர் லதாவிற்கு புகார் தெரிவித்து வந்தனர்
இதையடுத்து கமிஷனர் லதா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடங்களை அகற்றக் கோரி கடை உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் சில வியாபாரிகளுக்கு இதற்கான அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் கிடைக்க ஒரு சில அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து வாக்குவாதம் செய்துள்ளனர். இதனை அடுத்து கமிஷனர் லதாவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கமிஷனர் லதா அலுவலகத்தில் இருந்து கோபமாக வெளியேறி உள்ளார் இதனைத் கேள்விப்பட்ட நகராட்சி நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி நுழைவாயில் முன்பு அமர்ந்து கமிஷனர் லதாவுக்கு ஆதரவாகவும் கமிஷனரை தரக்குறைவாய் பேசிய கவுன்சிலரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்
இதை கேள்விப்பட்ட நகராட்சி சேர்மன் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதான செய்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் நேற்று அரக்கோணம் நகராட்சி அலுவலகம் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பொதுமக்களுக்கு விதைகளுடன் கூடிய மஞ்சள் பை வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஊர்தியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக கூட்டரங்கில் உலக மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் குறித்த உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அனைவரும் திரும்ப கூறி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் மக்கள் குறைத்தீர்வு கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு விதைகளுடன் கூடிய மஞ்சள் பையினை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர் மணிமேகலை, துணை கலெக்டர் தாரகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சூரை தரைபாலம் வரை 3கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சூரை தரைபாலம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 6 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ. சாலைப் பணிக்கான பொருட்கள் தரமாகவும், பணிகள் தாமதப்படுத்தாமல் முடிக்க வேண்டும், சாலை தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.உதவி கோட்ட பொறியாளர் நித்தின், காங்கிரஸ் ஒன்றிய தலைவர்கள் உதயகுமார், செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் திருமால், ஒப்பந்ததாரர் வேலு மற்றும் பலர் உடனிருந்தனர்.
- 50 மாற்றுத்திறனாளிகளில் 5 பேர் தேர்வு
- ஏராளமானோர் பங்கேற்பு
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன் அடிப்படையில் இம்மாதத்தில் கடந்த 8ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 11 வேலை அளிப்பவர்கள் 66 வேலைநாடுனர்கள் கலந்து கொண்டனர்.இதில் 54 வேலை நாடுனர்கள் மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் கலந்து கொண்ட வேலை அளிப்பவர்கள் மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயற்கை உறுப்புகள் வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50 மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் நடத்தி 5 நபர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவில் ஆனி மாத பிரதோஷம் பூஜை நடைபெற்றது. பிரதோஷம் பூஜை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அருகம்புல் மலர் மாலை மற்றும் பல்வேறு வகையான மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் சோமசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்
- தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துண்டு துண்டாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 36). இவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுப்பிரமணிக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளதால் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 அடிக்குமேல் விரிவுப்படுத்தி உள்ளனர்
- பொதுமக்கள் அவதிக்குள்ளானதால் நடவடிக்கை
அரக்கோணம்:
அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து அரக்கோணம் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு அரசு மற் றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
பொதுமக்கள் நாள் தோறும் பல்வேறு காரணங்களுக்காக அரக்கோணம் நகருக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் காணப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டமும் அதிகமாக இருக்கும். பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடை வியாபாரிகள், பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையை 3 அடிக்குமேல் ஆக்கிரமித்து கடையை விரிவுப்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பலர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்தநிலையில் நேற்று நகராட்சி ஆணையர் லதா தலைமையில் நகராட்சி பொறி யாளர் ஆசிர்வாதம், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மற்றும் ஊழியர்கள் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் பாரபட்சமின்றி அகற்றினர்.
- அரக்கோணம் அரசு பள்ளியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு பற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபாலன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பத்திரிக்கையாளரும் மாஸ் மீடியா இயக்குனர் டி.பி.மோசஸ் முன்னிலையில் போதை ஒழிப்பு பற்றி பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
போதை வேண்டாம் சிறப்பு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளரும் மாஸ் மீடியா இயக்குனர் டி.பி.மோசஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு போதை வேண்டாம் என தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு வழங்கினார்.
அன்பு பாலம் மூலமாக சமுதாயத்தின் அடுத்த தலைமுறை காப்போம் என்ற உறுதி மொழியை மாணவ மாணவிகள் இன்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது பேசுகையில் மாணவ மாணவிகள் போதைப் பழக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
போதைப் பொருள் பயன்படுத்தும் நபர்களுக்கு வேண்டிய விழிப்புணர்வை மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர் அல்லது தங்கள் ஆசிரியரிடம் உடனடியாக தெரிவித்து அவர்களுக்கு அந்த உரிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்பது மாணவர்களின் ஒவ்வொரு கடமை என்றும்
போதைப் பொருளிலிருந்து நாம் விடுபட்டால் தான் நாம் அடுத்த தலைமுறையை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அதற்கு மாணவ மாணவிகள் நீங்கள் தான் உறுதி மொழி ஏற்று அதன்படி உங்கள் வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
விழிப்புணர்வில் அரக்கோணம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ஜூலை மாதம் 2-வது வாரம் அணுசரிப்பு
- 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி
ராணிப்பேட்டை:
தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 2-வது வாரம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அதன்படி நேற்று முதல் 15ஆம் தேதி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பல்வேறு தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்வி போட்டி தேர்வுகள் தனியார் துறை வேலைவாய்ப்பு சுய வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி போன்றவை நடைபெற உள்ளது.
தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த தொழில் முனைவர்களை கொண்டு சுய தொழில் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான வகுப்புகள் வலைதளம் மற்றும் வேலை நாடுநலவர்களுக்காக தற்போது துவங்கப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திய இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேலை நாடுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும் 15ஆம் தேதி தேசிய திறன் நாளாக அனுசரிக்க அன்றைய தினத்தில் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேற்கண்ட தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வுர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 04172 291400 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி குறித்த விவரங்களை அறிந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.






