என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 635 வீடுகள் கட்டிதரப்பட வேண்டும்
- அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- 25 சதவீத பணிகள் நிறைவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கிராம ஊராட்சிகளில் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணைந்து கிராமத்தின் வளர்ச்சிக்கு அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22 மற்றும் 2023-ம் நிதி ஆண்டுகளில் 117 கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அந்த கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து கிராம வளர்ச்சிக்கும், கிராம மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கிடும் வகையில் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் பட்டா வழங்கி மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 635 வீடுகள் கட்டி தரப்பட வேண்டும். அதேபோன்று கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மரம், செடிகளை நட்டு வளர்த்திட வேண்டும்.
நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா ஆண்டையொட்டி 60 ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் குளம், ஏரிகள் மேம்படுத்துதல், புதிய நீர் நிலைகள் ஏற்படுத்துதல், பண்ணை குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகளை முடிக்க வேண்டும். தற்போது வரை 25 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கிராமத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கட்டாயம் சென்று சேர வேண்டும்.இதனை ஆய்வு செய்து அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் செயல்படுத்திட வேண்டும்.திட்டங்கள் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் இடம் தேர்வு செய்து வழங்கும் பணிகள் ஆகியவற்றினை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், துணை கலெக்டர்கள், கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.






