என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • தலைமறைவான தனியார் பள்ளி டிரைவரை தேடி வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம் :

    அரக்கோணம் அடுத்த கீழாந்துறை பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சிவானிஸ்ரீ (வயது8). இவர் சம்பத்ரா யன்பேட்டையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை சிவானிஸ்ரீ தனது வீட்டிலிருந்து சைக்கிளில் அதே பகுதியில் உள்ள ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது சைனபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் வேன் மாணவர்களை இறக்கி விட்டு பின்னோக்கி வந்ததாக ெதரிகிறது.

    இதில் எதிர்பாராத விதமாக சிறுமி சிவானிஸ்ரீ மீது மோதி பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

    பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவானிஸ்ரீ இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

    • 92 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
    • அமைச்சர் காந்தி வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ராணிப்பேட்டை விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளி ஆகியோர் இணைந்து நடத்தும் உதவி உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், என்.ஐ.இ.பி.எம்.டி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்கண்ணா, மனவளர்ச்சி குன்றிய தனியார் பள்ளி தாளாளர் கேத்தரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி தாளாளர் கமலா காந்தி வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேசினார்.

    இதனை தொடர்ந்து மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 394பயனாளிகள் தேர்வு செய்து ரூ.22லட்சம் மதிப்பீட்டில் 92 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 101நபர்களுக்கு மோட்டார் பொருந்திய செயலி எந்திரம், 125 நபர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பூங்கொடி, விஸ்வாஸ் பள்ளி செயலாளர் மருத்துவர் ராஜேஸ்வரி, ஜிகே பள்ளி இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ்பாண்டியன், ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், புவனேஸ்வரி, அசோக் உள்பட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    • 10, 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு
    • பள்ளியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்

    அரக்கோணம்:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கருடா சாட்டர்பிள் டிரஸ்ட் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் ஆதிதிராவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 10-ம் மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    மேலும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளியை சுற்றி 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தாசில்தார் பழனி ராஜன், அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி, பாரிஅரக்கோணம் வழக்கறிஞர் சங்கத் தலைவர்

    லோகபிராமன், திருமலை, 29 வது வார்டு கவுன்சிலர் நந்தாதேவி, பழனி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது அலி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்
    • மாவட்ட செயலாளர் அமைச்சர் காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வருகிற 7ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் முதல் அ மைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள். நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் கொண்ட கொள்கையாலும் சரித்திர சாதனைகளாலும் கலாச்சார நினைவுகளோடும் நம்மோடு வாழ்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் வாழ, தமிழர் வாழ, தமிழ்நாடு வாழ, தமிழ் கலாச்சாரம் வாழ, தலைவர் மு. கருணாநிதியின் நினைவை போற்றி புகழ் பாடுவோம்.

    தமிழின தலைவர் கருணாநிதி உருவ படங்களுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம், நகரம், பேரூர், கிராம கிளை கழகங்களில் மற்றும் வட்ட கிளைக் கழகங்கள் சார்பில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவோம்.

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் கிளைகள் தோறும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முட்புதரில் லாரியை மறைத்து தப்பிச் சென்றனர்
    • செல்போன் எண் சிக்னலை வைத்து பிடித்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 வழி சாலையாக இருந்து இந்நிலையில் தற்போது 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தப் பணியில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ், மதுரை வீரன், சந்திரன் ஆகிய 3 பேரும் டிப்பர் லாரி டிரைவர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் டிரைவராக பணிபுரிந்து ஓட்டி வந்த லாரிகளை கடத்த ஒன்றாக கூடி பேசி லாரியை கடத்திச் சென்றுள்ளனர். சேந்தமங்கலம் அருகே சென்றபோது டீசல் காலியானதால் அதே பகுதியில் உள்ள ஏரியின் முட்புதரில் லாரியை மறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    தப்பிச்சென்ற 3 பேரையும், லாரியையும் கண்டுபிடித்து தருமாறு ஒப்பந்ததாரர் ராகுல் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 ேபரின் செல்போன் எண் சிக்னலை வைத்து 3 பேரையும் போலீகார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த லாரியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அரக்கோணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்
    • குடும்ப பிரச்சனையால் விபரீதம்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் மோகன் தாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷா (வயது 36). நேற்று மாலை விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி உஷா வீட்டில் மயங்கி கிடந்தார்.

    இதனைக் கண்ட அவரது உறவினர்கள் உஷாவை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உஷா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து உஷா குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அழைப்பு
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    ஆகஸ்ட் 15ம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மாவட்ட தலைநகரங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    அந்தந்த துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மீன்பிடித்த உ விபரீதம்
    • உறவினர்கள் மறியலால் பரபரப்பு

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி பாவேந்தர் நகரை சேர்ந்தவர் குண்டு என்கிற சுப்பிரமணி (வயது 58). திமிரி அடுத்த விலாரி ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார்.

    மீன் பிடித்தகராறு

    இவருக்கு தெரியாமல், திமிரி ராமப்பாளையம் வேலாயுதபாணி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் கலையரசன் ( 21 ), இவரது தம்பி வசந்த், தனுஷ், கோபி மற்றும் சிலர் இரவு நேரங்களில் விளாரி ஏரி யில் மீன் பிடித்து வந்தததாக கூறப்படுகிறது.

    இதை சுப்பிரமணி தரப்பினர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கலையரசன் தரப்புக் கும் சுப்பிரமணி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு திமிரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வீட்டில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த தாக கடந்த 24 ந் தேதி குண்டு ( எ ) சுப்பிரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து கடந்த ஒருமாதமாக இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை 11.45 மணிய ளவில் கலையரசன் , தம்பி வசந்த் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுப்பிரமணியின் உறவினரான திமிரி ராமபாளையம் தெரு வில் உள்ள தினகரன் ( 45 ) வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்த தினகரனின் மகன் அசோக்குமார் (25), உறவினர்கள் தினேஷ் (24), சேகர் (60) ஆகியோருக்கும், கலையரசன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார், தினேஷ் ஆகியோர் கலையரசனை கத்தியால் வெட்டினர்.

    வாலிபர் கொலை

    இதில் பலத்தவெட்டு காயம் அடைந்த கலையரசனை அக்கம், பக்கத்தினர் மீட்டு திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலையரசன் இறந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் தரப்பினர் அசோக்குமார் வீட்டை சூறையாடினர். வெளியே இருந்த காய்கறி கடை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 3 டூவீலர்களை அடித்து நொறுக்கினர். மேலும் அங்குள்ள 3 க்கும் மேற்பட்ட வீடுகளையும் சூறையாடினர். ஒரு சிலர் திமிரி-ஆரணி சாலை யில் அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    தகவல் அறிந்த ராணிப் பேட்டை டிஎஸ்பி பிரபு, திமிரி இன்ஸ்பெக்டர் லதா, ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் காண் டீபன், ராணிப்பேட்டை இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி, திமிரி சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற் றும் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இன்று காலையில் ஆற்காடு-ஆரணி செல்லும் சாலையில் கலையரசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டனர்.

    இந்த கொலை சம்பந்தமாக தினகரன், அவரது மகன் அசோக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    • 1112 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர்களிடம் இருந்து விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையம், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளரால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1112 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணியினை கண்காணித்திட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 112 மேற்பார்வையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் இப்ப பணியினை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், தங்கள் ஆதார் எண்ணை வடிவம் 6பி-ன் மூலம் தெரிவித்துக் கொள்ளலாம்.மேலும் வாக்காளர் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் மூலமாகவும் சமர்ப்பித்து கொள்ளலாம்.‌ வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின், அவர்களிடம் இருந்து படிவம் 6பி-ல் குறிப்பிட்டுள்ள இதர 11ஆவணங்களில், ஏதேனும் ஒன்றின் நகலினை பெற்று இணைக்கப்பட வேண்டும்.ஒரு பணியானது வாக்காளர் விவரங்களை உறுதி செய்யவும், வாக்காளர்களுக்கு நீடித்த சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் பொருட்டு மட்டுமே பெறப்படுகிறது. எனவே பணியை சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளர்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஆபீசில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துணி நூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தின் சார்பில், அரசு மானியத்துடன் கூடிய சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்க ஜவுளி உற்பத்தி தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    ஜவுளி உற்பத்தி தொழில்

    மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :-ராணிப்பேட்டை மாவட்டம் வளம் நிறைந்த மாவட்டம். இத்தகைய சிறப்பு பெற்ற மாவட்டம் தொழில்துறையில் சிறந்து விளங்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தொழிற் பூங்காக்கள் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு அரசு 50 சதவீதம் மானியம் மற்றும் ரூ.2 கோடியே 50 லட்சம் வரை மானியமாக நிபந்தனைகளுடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அவ்வாறு அமையவுள்ள ஜவுளி பூங்காக்கள் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்துடன் குறைந்தபட்சமாக 3 தொழில் கூடங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜவுளி பூங்காக்கள் அமைத்திட சேலம் மாவட்டம், சங்ககிரி மெயின் ரோடு, குகை பகுதியில் அமைந்துள்ள தூணிநூல் துறையின் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்கள் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணிநூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குனர் அம்சவேணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், அரசு அலுவலர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் சாலை மறியல்
    • அமைச்சர், கலெக்டர், எஸ்.பி., பேச்சுவார்த்தை நடத்தினர்

    அரக்கோணம்:

    வேலூர் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). வேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி எஞ்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    இவரும் இவரது மனைவியும் வேலூரில் இருந்து அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

    காரை எஞ்ஜினீயர் வெங்கடேசன் ஓட்டி வந்தார். சாலை கிராமம் எஸ். ஆர். கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை 5 மணி அளவில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென பஸ் நிறுத்தத்தின் உள்ளே புகுந்தது. அங்கு பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மீது கார் மோதியது.

    இந்த விபத்தில் புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் (45), எஸ். ஆர். கண்டிகை சேர்ந்த கன்னியப்பன் (65) மற்றும் மாறன் கண்டிகை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது வாய் பேச இயலாத மகள் உண்ணாமலை (45) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, தாசில்தார் பழனிராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மறியலில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறி உடல்களை எடுக்க விடாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படவே மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் 3 பேர் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசில் புகார்
    • கலெக்டர் எச்சரிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஜீப் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவித்து போலியான அழைப்பானை அடையாளம் தெரியாத நபர்களால் அனுப்பப்பட்டு வருகிறது.

    இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஜீப் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை அவ்வாறு அறிவிப்பு இருந்தால் செய்தித்தாள்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

    போலியான அழைப்பினை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×