என் மலர்
நீங்கள் தேடியது "Dies in a car crash"
- பொதுமக்கள் சாலை மறியல்
- அமைச்சர், கலெக்டர், எஸ்.பி., பேச்சுவார்த்தை நடத்தினர்
அரக்கோணம்:
வேலூர் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). வேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி எஞ்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவரும் இவரது மனைவியும் வேலூரில் இருந்து அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
காரை எஞ்ஜினீயர் வெங்கடேசன் ஓட்டி வந்தார். சாலை கிராமம் எஸ். ஆர். கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை 5 மணி அளவில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென பஸ் நிறுத்தத்தின் உள்ளே புகுந்தது. அங்கு பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மீது கார் மோதியது.
இந்த விபத்தில் புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் (45), எஸ். ஆர். கண்டிகை சேர்ந்த கன்னியப்பன் (65) மற்றும் மாறன் கண்டிகை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது வாய் பேச இயலாத மகள் உண்ணாமலை (45) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, தாசில்தார் பழனிராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறி உடல்களை எடுக்க விடாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படவே மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் 3 பேர் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






