என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்
    • கவுன்சிலர்கள் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி ஆணையாளர் ஏகராஜ்நகராட்சி பொறியாளர் ருத்ரகோட்டி நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன் மேலாளர் தனலட்சுமி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் பிரிவு 24-பி-24-எச் மற்றும் மாநகராட்சிகள் சட்டம் பிரிவுகளின் படியும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் விதிகள் 2022 படியும் வார்டு குழு மற்றும் பகுதி சபா குறித்து வெளியிடப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை நிலை எண்கள் 92 மற்றும் 93 நாள் 24-6-2002 மற்றும் தமிழ்நாடு அரசு 358 நாள் 24-6-2022 மன்றத்தின் பார்வைக்கும் பதிவுக்கும் பொருள் வைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டையும் வார்டுக்குழு மற்றும் பகுதி சபா உருவாக்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு வார்ட்டு குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் ஆவார்.இதனைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை வார்டு பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும். உட்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தத் தீர்மானத்தை திமுக உறுப்பினர்கள் அப்துல்லா, கிருஷ்ணன், வினோத், குமார் உள்ளிட்டோர் மற்றும் திமுக பெண் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.ஆனால் அதிமுக உறுப்பினர்கள் கே பி சந்தோஷ், ஜோதி மற்றும் 2 அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள்.மேலும் வார்டுகளில் உள்ள குறைகள் குறித்தும் பேசினார்கள்.

    • ஒரு வீட்டில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதா, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், தாஜ் புரா, சத்யா நகர், திருதாமாந்தர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டின் அறையில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முக்கால் அடி உயர முருகர் சிலை, கால் அடியில் 3 மாரியம்மன் சிலைகள் மற்றும் 2 பெரிய வெள்ளி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சிலையை பறிமுதல் செய்து சாமி சிலைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்ததாக பாலாஜி வயது 39 காட்பாடி பாலாஜி நகரை சேர்ந்த தினேஷ்குமார் ஆற்காடு கன்னி கோவில் தெருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் ஐம்பொன் சிலைகள் எங்கிருந்து எப்போது கடத்தி வரப்பட்டது.

    இதேபோல் மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதா இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

    • சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
    • கொரோனா தாக்கத்தை விட தமிழக அரசின் இது போன்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் த.மா.கா. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். அதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். இலங்கை கடற்படையின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. கொரோனா தாக்கத்தை விட தமிழக அரசின் இது போன்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் அடுத்த தெருவுக்குப் போகும் வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் வாங்குவது நியாயம் அல்ல. காவல்துறை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

    அபராத தொகை செலுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்

    திடவும், அவர்களின் வருவாயை பெருக்கிடவும் அரசு பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த 140 டன் பச் சைப்பயறு பச்சை பயிறு மத்திய அரசின் நாபெட் நிறுவனத் தினால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக வேலூர் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முதன்மை கொள்முதல் முகமையாக செயல்பட உள்ளது. மையத்தில் பச்சைப் பயறு ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 755 வீதம் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) வரை கொள்முதல் செய் யப்படவுள்ளது.

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பச் சைப் பயறுக்கான கிரய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் காவேரிப்பாக்கம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் விளைபொருளுக்கு அதிக விலை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • தீப்பொறி பார்சலில் விழுந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 68). மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் தனது மகன் சக்கரவர்த்தி (40) என்பவருடன் நேற்று முன்தினம் மளிகை கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு தனது மைத்துனர் கோபி (46) என்பவரை தனபால் அழைத்ததாக கூறப்படுகிறது. கோபி மற்றும் கோபியின் மனைவி தீபா (40) ஆகிய இருவரும் கடைக்கு வந்துள்ளனர்.

    அப்போது தாங்கள் வைத்திருந்த பட்டாசு பார்சலை பிரித்துள்ளனர். அந்த நேரத்தில் சக்கரவர்த்தியின் மகன் பிரஜாத் லோபோ (10) சங்கு சக்கர பட்டாசை வெடித்துள்ளான். அந்தப்பட்டாசு தவறி, கோபி பிரித்து வைத்திருந்த பட்டாசு பார்சலில் விழுந்தது.

    இதில் பட்டாசு பார்சல் வெடித்ததில் கோபி அவரது மனைவி தீபா படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டைமாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நாளை வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அள வில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

    இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சுவாதி நட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கேடயத்தில் பக்தோசிதபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தனர். மங்கள வாத்தியங்களுடன் சுவாமி சன்னதி தெரு கோடி வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 4 பேர் கைது
    • பைக் மீது வேன் உரசியதால் கடத்தி கொலை செய்ததாக வாக்குமூலம்

    சோளிங்கர்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 22). இசை குழு நடத்தி வந்தார். இவரும், சோளிங்கர் அடுத்த ஆயலாம்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

    பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து, பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தலை தீபாவளிக்காக சரத்குமார் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.

    கடந்த 24-ந் தேதி தலை தீபாவளியை கொண்டாடினர். அன்று இரவு 7 மணியளவில் சரத்குமார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட மாமனார் உமாபதியுடன், சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.

    அப்போது, கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பைக்குகளில் வந்த 7 பேர் கும்பல் திடீரென சரத்குமாரை சரமாரியாக தாக்கியது. அப்போது, தடுக்க முயன்ற உமாபதியை சரமாரியாக தாக்கினர்.

    இதில் உமாபதி லேசான காயமடைந்தார். பின்னர், சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்தி சென்று, சுமார் 2 கி.மீ தொலைவில் கூடலூர் அருகே உள்ள ஒரு மறை வான இடத்தில் வைத்து, சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ஐப்பேடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக சரத்குமாரை கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஸ் யாதவ், அரக்கோணம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 'ஐப்பேடு பகுதியை சேர்ந்த தாமோதரன் (24), கோபி (24), அசோக் பாண்டியன் (24), துரைபாண்டியன் (23) ஆகிய 4 பேரை அரக்கோணம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    தகராறு

    கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் ஞான கொள்ளை பகுதியில் இருந்து ஆர். கே.பேட்டை கிராமத்திற்கு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சரத்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றுள்ளனர்.

    அப்போது ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்ற பைக் மீது வேன் உரசியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் வேனில் சென்றவர்கள், பைக்கில் வந்த நபர்களை தாக்கியுள்ளனர். இதில் பைக்கில் வந்தவர்களை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சரத்குமார் வேனில் வந்தவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த முன்விரோத தகராறில், எதிர்தரப்பைச் சேர்ந்த கோபி உள்ளிட்டோர் தங்களது கூட்டாளிகள் மூலம் சரத்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதில் கோபி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

    • ராணிபேட்டையில் அ.தி.மு.க. 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டையில் நடந்தது.

    மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணைகொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால், பொருளாளர் ஷாபூதீன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முனிசாமி, அம்மா பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.கோ.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் டாக்டர் கோ.சமரசம், மணிமேகலை, செங்கை கோவிந்தராஜன், முன்னாள் எம்எல்ஏ சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக வளர்ந்து வந்த பாதை குறித்தும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் செய்த சாதனைகளை விளக்கி பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசன், நகர அவைத் தலைவர் குமரன், நகர செயலாளர்கள் மோகன், இப்ராஹீம் கலிலுல்லா, சோளிங்கர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் பெல் கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், ஏ.எல்.விஜயன் டி.ராஜா, பேரூர் செயலாளர்கள் அம்மூர் தினகரன், ஆர்.வி.என்.மஞ்சுநாதன், ராணிப்பேட்டை நகர நிர்வாகிகள் பிலிப்ஸ், தியாஜராஜன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர மாவட்ட பிரதிநிதி அஸ்லாம்கான் நன்றி கூறினார்.

    • வெங்கடேசன் 4 குழந்தைகளையும் விவசாய கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.
    • எனது மகனுக்கும் போலீஸ் வேலைக்காக பயிற்சி கொடுத்து வருகிறேன்.

    ராணிப்பேட்டை :

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகன்பேட்டை அருகே உள்ள கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் குழந்தைகளாக இருந்தபோது தாய் ஷகிலா இறந்து விட்டார். வெங்கடேசன் 4 குழந்தைகளையும் விவசாய கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.

    மூத்த மகள் பிரீத்தியை (வயது 27) பிளஸ்-2 வரை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். 2-வது மகள் வைஷ்ணவி (25) பி.ஏ. பட்டப்படிப்பும், மூன்றாவது மகள் நிரஞ்சனி (22) பி.எஸ்சி. பட்டப்படிப்பும் படிக்க வைத்துள்ளார். சகோதரிகள் 3 பேரும் போலீஸ் வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தனர்.

    அதன்படி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு 3 பேரும் தேர்வாகி உள்ளனர். அவர்கள் மூவரும் திருவள்ளூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தனர். இதனைத்தொடர்ந்து பயிற்சி முடித்து தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தனர். ஒரே குடும்பத்தில் இருந்து அக்காள், தங்கைகள் என மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு சேர்ந்ததால் குடும்பத்தில் உள்ளவர்களும், கிராம பொதுமக்களும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    மகள்கள் போலீஸ் வேலையில் சேர்ந்தது குறித்து வெங்கடேசன் கூறியதாவது:-

    எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் விளைச்சல் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். இதனிடையே பிளஸ்-2 வரை படிக்க வைத்த முதல் மகள் பிரீத்தியை குடும்ப உறவில் ராஜீவ் காந்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்கு 7 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். 2-வது மகள் வைஷ்ணவி சென்னை வண்ணார பேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ.வும், 3-வது மகள் நிரஞ்சனி அரக்கோணம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி.யும் படிக்க வைத்தேன்.

    போலீஸ் வேலையில் சேர்ப்பதற்காக 3 மகள்களுக்கும் எழுத்து தேர்வுக்கான பயிற்சி மற்றும் என்னுடைய நிலத்திலேயே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைவதற்கான ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை அவர்களுக்கு கொடுத்து வந்தேன். அதன் பயனாக இன்று 3 பேரும் போலீஸ் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்து வேலையில் சேர்ந்துள்ளனர்.

    நான் பிளஸ்-2 வரை படித்து போலீஸ் வேலையில் சேர முயற்சித்து கிடைக்காததால், எனது கனவினை நிறைவேற்றுவதற்காக பிள்ளைகளிடம் தாய் இல்லாததையும், குடும்ப சூழ்நிலையையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி கடினமாக பயிற்சி பெற தெரிவித்தேன். அதன்படி போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற எனது கனவினை எனது 3 மகள்களும் நிறைவேற்றியுள்ளனர். எனது மகனுக்கும் போலீஸ் வேலைக்காக பயிற்சி கொடுத்து வருகிறேன். அடுத்த மாதம் நடக்க இருக்கும் போலீஸ் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார். அந்த தேர்வில் கலந்து கொண்டு என் மகன் நிச்சயம் தேர்ச்சி பெற்று போலீஸ் வேலையில் சேருவான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரசவம் பார்த்த பெண்போலீசுக்கு பாராட்டு
    • முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி

    அரக்கோணம்

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை செய்து வருபவர் அஸ்வின் குமார். இவரது மனைவி சாந்தினி (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான அவரை சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனைக்கு பிரசவத் துக்காக நேற்று முன்தினம் மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அஸ்வின் குமார் அழைத்துச்சென்றார்.

    ரெயில் அரக்கோணம் அருகே வந்தபோது சாந்தினிக்கு பிரசவவலி அதிகமானது. இது குறித்து அஸ்வின் குமார் உடனே அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    ரெயில் அரக்கோணம் வந்தடைந்ததும் அங்கு தயாராக இருந்த பெண் போலீசார் சாந்தினியை இறக்கி பெண்கள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெண் போலீஸ் பரமேஸ்வரி உதவியுடன் சாந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    அதைத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சாந்தினி மற்றும் பிறந்த ஆண் குழந்தையையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரசவத்திற்கு உதவியாக இருந்த அரக்கோணம் ரெயில்வே பெண் போலீஸ் பரமேஸ்வரியை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் பாராட்டினர்.

    • ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள்
    • மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து 36 கண் மதகு வழியாக வெளியேறும் தண்ணீரின் அளவு கடந்த 2 நாட்களாக அதிகமாக செல்வதால் கர்ணாவூர் ஆலப்பாக்கம் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    சுற்றுவட்டார பகுதியில் இருந்து பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்

    தரைப் பாலத்திற்கு மேலே 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் இருசக்கர வாகனமும் சைக்கிளில் செல்பவர்களும் மிகுந்த போராட்டத்திற்கு பின்னரே பாலத்தை கடந்து செல்கின்றனர்

    மேலும் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பது குறித்து பலமுறை தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்

    அதிகமாக தண்ணீர் சென்றால் பனப்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் செல்பவர்கள் 12 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

    ஏற்கனவே கடந்த வருடம் தரை பாலத்தை கடந்த போது 2 வாலிபர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். அதேப்போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×