என் மலர்
ராணிப்பேட்டை
- கூட்ட நெரிசலில் துணிகரம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அகன் நகர் பகுதியை சேர்ந்த அருள்ராஜ். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் இவரது செல்போனை திருடிச் சென்றார். இது குறித்து அருள்ராஜ் அரக்கோணம் ரெயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடி சென்ற நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடைமேடையில் சுற்றி திரித்து கொண்டிருந்த வாலிபரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் திருவள்ளூரை அடுத்த செவ்வாய்பேட்டை திருவூர் பகுதியை சேர்ந்த அருண் குமார் (வயது 25) என்பதும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து அருண்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
- போலீசார் பேச்சுவார்த்தை
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த லாடவரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. விளைநிலங்களுக்கு அருகே இந்த கடை இருப்பதால் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை விலை நிலங்களில் வீசி செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
மேலும் பெண்கள் அந்த வழியாக செல்லவும் அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 12 மணி அளவில் கடையை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்களை கடை திறக்க விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.
- குடிபோதையில் அட்டகாசம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த குருவராஜ பேட்டையை சேர்ந்தவர் விஜயன். அவரது மகன் குமார் (வயது 30), இவர், அப்பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகே மினி லாரியை நிறுத்தி இருந்தார்.
அப்போது சோகனூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23), தனுஷ் (20), பரத் (18) ஆகி யோர் குடிபோதையில் லாரியின் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், தனஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமே தகுதியானவர்கள்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து, மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டது.
இதுவரை 2, 3, 4-ம் ஆண்டில் படிக்கும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பயன்பெற்று வந்தனர். தற்போது வலைதளங்களில் https://www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்விப் படிக்கும் நிறுவனங்களில் வருகிற 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரத்தில் 9150056809, 9150056805, 9150056801, 9150056810 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல் படிப்பு, தொழில்நுட்பப் படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்திற்கான விண்ணப்பம் முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
- கலெக்டர் தகவல்
- ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தனர்:-
பல்வேறு இடங்களில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாகுபாடு இன்றி அகற்றப்பட்டு, இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது, தொடர்ந்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே இதில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை. இது போன்ற பிரச்சனைகளை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம் என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-
சீக்கராஜபுரம், வடகால் பொன்னை ஆற்றுக்கால்வாயில் ஆக்கிரம்புகள் உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக பொன்னையாற்றில் தண்ணீர் சென்றும், வடகால் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரையில் ஆழ்துளை போடப்பட்டு பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வித அரசியல் தலையிடும் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
கடன் சங்கங்களில் விவசாயிகள் 6 மாதத்திற்கான பயிர் கடன்கள் வருகின்றனர்.இதனை ஒரு வருட பயிர் கடன் வழங்கும் நடைமுறையாக செயல்ப டுத்தினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் பிரச்சனைகள் விளை பொருட்கள் நாசமாகிறது. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காட்டுப் பன்றிகளை சுட அரசு உத்தரவிட்டும், வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றனர்.
- உன் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உருக்கம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 35). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவருக்கு பிரியா( 28) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சிவானந்தத்திற்கு வேலை செய்யும் இடத்தில் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து நெமிலி அருகே ஒருவரிடம் மாத சீட்டு கட்டி வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீட்டு பணத்தை எடுத்து இருவரும் ஆளுக்கு பாதி என பிரித்துக் கொண்டதாக தெரிகிறது. பிறகு மாதம் தோறும் சீட்டு பணம் கட்டுவதற்கு உரிய பங்கு பணத்தை மோகன் தராமல் இழுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிவானந்தம் தனது நண்பரான மோகனுக்கு மனைவிக்கு தெரியாமல் வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதையும் அவர் சரிவர கட்டவில்லை இந்த நிலையில் சிவானந்தம் தீபாவளி பண்டிகையில் இருந்து மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் சிவானந்தம் யாரிடமும் சொல்லாமல் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரியா கணவரை காணவில்லை என்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று காலை நெமிலி அடுத்த அச நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிவானந்தம் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் சிவானந்தம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான வீடியோ
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவானந்தம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மனைவி பிரியாவுக்கு உருக்கமான வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் என்னை மன்னித்துவிடு .வாழ எனக்கு தகுதி இல்லை .நீ எவ்வளவு சொல்லியும் நான் உன் பேச்சை கேட்கவில்லை. உன் பேச்சைக் கேட்டு இருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது.
நான் இறந்த பிறகு நான் பட்ட கடனை எப்படியாவது அடைத்து விடு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
- கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
- நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், அரசின் மற்ற துறைகளின் நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளவும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திற னாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினர்.
இதில் ஒன்றிய துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தகரகுப்பம் முனியம்மாள் பிச்சாண்டி, வெங்குப்பட்டு ராமன், புலிவலம் நதியாமதன்குமார், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், விஏஓ ராஜகோபால், ஒன்றிய குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி மற்றும் சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர், எம்.எல்.ஏ பங்கேற்பு
- 140 பேருக்கு கடன் ஆணை வழங்கினார்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார்.
மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இளைஞர் பயிற்சி ஆணை 32 பேருக்கு தனிநபர் தொழில் முனைவோர் கடன் 140 பேருக்கு 35 லட்சம் மதிப்பில் கடன் ஆணை வழங்கினார்கள்.
அப்போது, சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தகரகுப்பம் முனியம்மாள் பிச்சாண்டி, வெங்குப்பட்டு ராமன், புலிவலம் நதியாமதன்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மகளிர் திட்ட உதவி அலுவலர் அலமேலு நன்றி கூறினார்.
- குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
- இயற்கை விவசாய விளை பொருட்களை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு
அரக்கோணம்:
அரக்கோணம், நெமிலி தாலுகாக்களை உள்ளடக்கிய விவசாயிகளின் குறைதீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இச்சிபுத்தூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள சாலை விரிவாக்கத்தின் காரணமாக பெரிய ஏரியின் நீர்வரத்து கால்வாயின் அகலம் 16 அடியிலிருந்து தற்போது இரண்டாடியாக குறுகி உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏரி நிரம்புமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனை விரைந்து அகலப்படுத்த வேண்டும்.
மேலேரி ஊராட்சியை சேர்ந்த களஞ்சியம் மகளிர் விவசாய குழுவினர் தாங்கள் கூட்டாக சிறுதானியங்களை தொடர்ந்து பயிரிட்டு வருவதாகவும், அதனை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தனர்.
அதே பகுதியை சேர்ந்த நம்மாழ்வர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர் செயற்கை உரம் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயத்தின் முலம் விளையும் பொருட்களை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் பேசிய வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உங்கள் கோரிக்கைகள் அனைத்து கலெக்டர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், நெமிலி தாசில்தார் ரவி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- 9 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
திருவள்ளுர் மாவட்டம் ஆர் கே பேட்டையில் இருந்து ஆட்டோவில் இன்று காலை 10 பேரை ஏற்றிக்கொண்டு வேலைக்காக சோளிங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை கர்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.
சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி திரவுபதி அம்மன் கோவில் அருகே ஆட்டோ வந்து கொண்டி ருந்தது. அப்போது அங்கு டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
இதில் திருவள்ளூர் மாவட்டம் நெச்சிலி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 48) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேண்டா( 21), தீபா (20), நந்தினி (30) , முருகேஷ், வள்ளியம்மா , உடையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோபி (35), நாராயண குப்பத்தைச் சேர்ந்த சுமதி (35), ஆர்.கே. பேட்டையை சேர்ந்த கர்ணன் (40) ஆட்டோ டிரைவர், உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் படுகாயம் அடைந்த வர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 8 பேரைஅ டுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேணுகோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
- 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்ககோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கபீர்தாஸ் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் லோகநாதன் வரவேற்றார்.செயலாளர் ஆறுமுகம் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரயும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்கிட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.3,000 வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சரவணராஜ், ரவி மற்றும் ஆற்காடு, கலவை, நெமிலி, அரக்கோணம், சோளிங்கர் தாலுக்கா தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, மாநில மகளிரணி துணைத் தலைவி கிருஷ்ணசாந்தி ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நகர ஒன்றிய பேரூர் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் ராணிப்பேட்டை மண்டல தலைவர் ஹரிஷ் குமார் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.






