என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • தலைமை ஆசிரியரிடம் தீவிர விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட கொந்தங்கரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டுவருகிறது.

    இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கோவிந்தராஜிலு என்பவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் பாடம் நடத்தாமல் இருக்கையில் அமர்ந்து இருப்பதாக கூறி கிராம பொதுமக்கள் வட்டார கல்வி அலுவலருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியரை வேறு ஊருக்கு மாற்றக்கோரி கிராம பொதுமக்கள் முதல் - அமைச்சர் தனிப்பிரிவு, கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று கொந்தங்கரை பள்ளிக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பிரேமலதா நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

    அப்போது மாவட்ட கல்வி அதிகாரியிடம் தலைமை ஆசிரியரை வேறு ஊருக்கு மாற்றக்கோரி கிராம பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் ஜஸ்வந்த் (வயது 15). இவர் ராணிப்பேட்டை பெல் அருகே உள்ள பள்ளியில் பிளஸ் - 1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெல் டவுன்ஷிப் பகுதியில் இருந்து அரசு பஸ்ஸில் வந்தார். அப்போது படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பஸ் படிகட்டில் இருந்து திடீரென மாணவன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் ஜஸ்வந்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் வளர்மதி தகவல்
    • 3 மாத பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் தலா ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4.0 தொழில் நுட்ப மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாறிவரும் தொழிற்சாலைகள் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு 4.0 தொழில்நுட்ப மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை தொழிற் பயிற்சி நிலை யத்தில் குறுகிய கால 4 மாத மற்றும் 3 மாத பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்ப டவுள்ளது.

    அதேபோன்று அரக்கோணம் தொழிற் பயிற்சி நிலையத்திலும் வகுப்புகள் விரைவில் நடத்தப்படவுள்ளது.

    இந்த தொழில்நுட்ப மையங்களின் மூலம் பயிற்சி பெறும் பயிற்சி யாளர்கள் பயிற்சி முடித்தவுடன் முன்னணி தொழிற்சா லைகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும் மற்றும் சுயமாக தொழில் தொடங்கவும் பயனுள்ள வகையிலும் இந்த நவீன தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்க பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டில் ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் 4 பாடப் பிரிவுகளின் கீழ் 128 மாணவ மாணவி களும், அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 பாடப் பிரிவுகளின் கீழ் 104 மாணவர்களும் என மொத்தமாக 232 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் இந்த 4.0 தொழில் நுட்ப மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
    • தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பி.டி.ஓ அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் தீனதயாளன், பி.டி.ஓக்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் போன்றவற்றை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் வட்டார ஒருங்கினைப்பாளர்கள், கோமதி, சுகந்தி, ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரில் முன்பக்க கண்ணாடியை‌ உடைத்து கத்தியை காட்டி மிரட்டி சரவணனிடம் ரூ.15 லட்சம் பறித்தனர்.
    • மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து தாங்கள் வந்த பதிவு எண் அகற்றப்பட்ட காரில் தப்பி சென்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் பைனான்ஸ் நடத்தி வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சரவணன் ரூ.15 லட்சம் பணத்துடன் காரில் சித்தூரில் இருந்து ராணிப்பேட்டை அம்மூர் நோக்கி வந்தார். காரை ராணிப்பேட்டை அடுத்த பெரிய தாங்கல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சுந்தர் (36) என்பவர் ஓட்டி வந்தார்.

    அம்மூர் செல்லும் சாலையில் கத்தாரிகுப்பம் கிராமம் வனத்துறை செக் போஸ்ட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 4 பேர் அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்தனர்.

    முந்தி சென்று சரவணனின் காரை மடக்கினர்.

    காரில் முன்பக்க கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி சரவணனிடம் ரூ.15 லட்சம் பறித்தனர்.

    இதை தடுக்க முயன்ற சரவணன்,டிரைவர் சுந்தர் ஆகியோரை மர்ம நபர்கள் தாக்கியனர். இதில் சரவணனுக்கு வலது கையிலும், சுந்தருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து இவர்கள் கூச்சலிட்டனர். மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து தாங்கள் வந்த பதிவு எண் அகற்றப்பட்ட காரில் தப்பி சென்றனர்.

    கும்பல் சென்ற கார் கத்தாரிகுப்பம் கிராமத்தின் அருகே வயல்வெளியில் சேற்றில் சிக்கியது. அந்த காரை அப்படியே விட்டு விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    காரிலிருந்து தப்பி ஓடிய கும்பல் வனப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழிப்பறி தொடர்பாக ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பதிவு எண் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் வி.என். உலகநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சருமான ஆர்.காந்தி, ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம..எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அரக்கோணம் ஒன்றிய தலைவர் நிர்மலா சௌந்தர், மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர்கள் வில்சன், அன்பழகன்,கீதா, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, செயற்குழு உறுப்பினர் கண்ணையன், தக்கோலம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான எஸ்.நாகராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய ஒன்றிய பொருளாளர் ஜி.டில்லிபாபு நன்றி கூறினார்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது43). பம்ப் ஆபரேட்டர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை ராமச்சந்திரன் உளியநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். மீண்டும் மகேந்திரவாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கோடம்பாக்கம் - உளிய நல்லூர் கிராம சாலையில் செல்லும் போது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக ராமச்சந்திரன் பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம டைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பாணாவரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமச்சந்திரனை மீட்டு வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து டிரைவர் தேடி வருகின்றனர்.

    • கொடி நாள் நிதி வசூல் இலக்கை எட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
    • ரூ. 1 கோடியே 51 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கொடிநாள் வசூல் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:- இந்திய ராணுவத்தில் பணியாற்றும் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களை சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் முன்னாள் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் செய்யப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு நிதி வசூல் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தமிழக அரசால் ரூ. 1 கோடியே 51 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ.41 லட்சம் எட்டப்பட்டுள்ளது,

    நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கை ஒரு வார காலத்திற்குள் எய்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூல் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் , லோகநாயகி, முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் ஞானசேகர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • 22 மூட்டைகள் சிக்கியது
    • போலீசார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த திருமால்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் மின்சார ரெயிலில் நேற்று இரவு அரக்கோணம் ரெயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 25 கிலோ எடை கொண்ட 22 அரிசி மூட்டைகள் இருக்கையின் அடியில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பெட்டியில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் உக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    அவரை கைது செய்த போலீசார் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • சிறு, குறு தொழில் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு
    • பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டையிலும் நேற்று மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் சந்திரகாசன், செயலாளர் முரளி, துணைத் தலைவர் புனித வேல், பெல் அன்சிலரி அசோசியேசன் தலைவர் வாகிசன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் அமைச்சர் ஆர்.காந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு , சோளிங்கர், அரக்கோணம் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்களையும் நேரில் சந்தித்து கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதில் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வேண்டுகோள்
    • சுற்றுசூழல் மாசடைவதால் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தாண்டு வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் உள்ள மக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளியை சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டா டுவார்கள். பட்டாசு களை வெடிப்ப தினால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளும் மாசடை கிறது. பொது மக்கள் பட்டாசு வெடிப்ப தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதன்படி, அரசு சார்பில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

    தீபாவளி பண்டிகை நாளில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொது மக்கள் திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலமாக முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களிலும், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
    • பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தி.மு.க மற்றும் சுற்று சூழல் அணி சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நேற்று பாணாவரம் சந்தைமேட்டு பகுதியில் நடைப்பெற்றது.

    காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    துணை அமைப்பாளா்கள் ராஜேஷ்,அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தி.மு.க காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளா் தெய்வசிகாமணி, மாவட்ட துணைசெயலாளா் துரைமஸ்தான், மாவட்ட சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர், பாணாவரம் ஊராட்சிமன்ற தலைவர் அா்ஜீனன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

    மேலும் பாணாவரம் வாரசந்தை பகுதியில் வேப்பம், பூங்கை உள்ளிட்ட 9 வகையான 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனா். இதில் திமுக காவேரிப்பாக்ம் ஒன்றிய துணை செயலாளா் சங்கா், பொருளாளா் ரவி, மாவட்ட பிரிதிநிதி பாஸ்கா், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சுமன், சாமு, பாணாவரம் ஊராட்சிமன்ற துணைதலைவர் சரண்யா, ஓய்வு பெற்ற முன்னால் தலைமை ஆசிரியை ஜெகதாம்பாள், பாணாவரம் கிளை கழக பொருப்பாளா் பாலன், ஆசிரியர் சரவணன், வார்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனா்.

    பாணாவரம் முன்னால் ஒன்றியகுழு உறுப்பினா் சரவணன் நன்றி கூறினாா்.

    ×