என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • துறைவாரியாக மேற்கொள்ளப்படும் அரசின் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
    • எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளின் சார்பில் 3,391 பயனாளிகளுக்கு ரூ.25 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் அரசின் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடலின் கீழ் இந்தியாவிற்கே முன்னோடியாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தி வருகிறார்.மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் நகர பஸ்களில் மகளிருக்கான இலவச பயணத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

    குழந்தைகளின் அடிப்படை கல்வியை மேம்படுத்தும் வகையில் தொடங்கி வைக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற திட்டங்கள் மூலமாக தகுதியான நபர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும், பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்'' என்றார்.

    • வாகனம் விபத்தில் பைனான்சியர் பலியானார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    கோட்டைப்பட்டினம் மீமிசல் அருகே தத்தணி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டைப்பட்டினம் மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடமிருந்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை:

    விராலிமலை ஒன்றியம், மாத்தூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளவர் மூர்த்தி (வயது 37). இவரது பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி உள்ளிட்ட போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது மூர்த்தி அவரது பெட்டிக்கடையில் வைத்து மது பாட்டிலை விற்பனை செய்து தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கந்தர்வகோட்டை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலாடிபட்டியில் மதுவிற்ற உரியம்பட்டியை சேர்ந்த தங்கையன் மகன்கள் வரதராஜ் (வயது 27), முனியராஜ் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • 10 நோட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    புதுக்கோட்டை :

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ-மாணவிகள் கையில் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இருக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் ஏற்கனவே வந்தன.

    அவை அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுகள் புதுக்கோட்டை வரப்பெற்றன. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 57 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தலா 10 நோட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து விலையில்லா புத்தக பை, விலையில்லா யூனிபார்ம், ஜாமின்ட்ரி பாக்ஸ், அட்லஸ் ஆகியவை வர உள்ளது. இவை வந்த பின் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வினியோகிக்கப்படும். இதேபோல 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா காலணிகள் வந்தன. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தருகிறார்.
    • நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

    புதுக்கோட்டை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) புதுக்கோட்டை வருகை தருகிறார். காரைக்குடி மார்க்கத்தில் இருந்து காரில் வரும் அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட எல்லையான திருமயம் அருகே சவேரியார்புரத்தில் இருந்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். தொடர்ந்து அவரது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். ஆய்வுக்கூட்டத்திற்கு பின் ஆலங்குடியில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழா, கீரனூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் வீடு ஆகியவற்றிற்கு சென்று விட்டு திருச்சி செல்கிறார்.

    • அழியாநிலையில் மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு அறந்தாங்கி தாலுகா அழியாநிலை கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 54 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 17 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 27ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை வீரமுத்திரையர் சங்க இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசுார் அவரிடமிருந்து சுமார் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை :

    புதுகோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருவப்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் வந்த புதுகோட்டை வடக்கு மூன்றாம் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 44) என்பவரை மறித்து விசாரித்தனர். இதில் ரேஷன் அரிசியை மூட்டைகளில் அவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, சுமார் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
    • அரசின் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்

    புதுக்கோட்டை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டைக்கு நாளை (வியாழக்கிழமை) வருகை தரும் அவர்,கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசின் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் அவர் கலந்தாய்வு மேற்கொண்டார்.இக்கூ ட்டத்தில் வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலா ண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
    • கலெக்டர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்ற பின் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அரசு மருத்துவமனைகளிலும் நேரில் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, ஆய்வு மேற்கொள்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதேபோல மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்தவர்கள், படுத்திருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதே போல் அன்னவாசல் ஒன்றியம், எல்லைப்பட்டி, மண்டக குடிநீர் ஊரணி சீரமைப்புப் பணியினையும், ஆன்டி ப்பட்டியில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், விஜயா, சிதம்பரம், சித்ரா ஆகிய பயனாளிகள் வீடுகள் கட்டுமானப் பணிகளையும், சித்தனவாசல் சமத்துவபுரம் வீடுகள், பிச்சை என்ற பயனாளியின் வீட்டை பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதையும், 30,000 லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினைப் பார்வை யிட்டு தூய்மைப்படுத்தும் விபரங்களை கேட்டறிந்தார்.

    மேலும் திருவேங்கைவாசல் அக்ரஹாரம் தெருவில் ரூ.6.93 லட்சம் செலவில் நெற்களம் அமை க்கப்பட்டுள்ளதையும், விளத்துப்பட்டி கிராமத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தி ன்கீழ், அமைக்க ப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பணியினையும் கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி, உதவி செயற்பொறியாளர்கள் முத்துக்குமார், கண்ணன், வட்டாட்சியர் விஜய லெட்சுமி, உதவி பொறியா ளர்கள் வேல்சாமி, கௌசல்யா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கலெக்டர் தலைமையில் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஒரே நாளில் ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது
    • இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவி க்கப்படுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களும், ஒரே நாளில் ஒரே இடத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளன.

    எனவே, ஆய்விற்கு கொண்டு வரப்படும் வாகனங்களோடு, பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப்பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவற்றுடன், ஓட்டுநர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் வரவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமை யாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவி க்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது
    • 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் ஆர்.சி. உதயகுமார் மற்றும் இயக்குனர் மா. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டினர்.

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோன்று பிளஸ் 2 பொதுத் தேர்விலும் 600 க்கு 571 மதிப்பெண் இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. பிளஸ் 2-வில் முகமது ஆதில் என்ற மாணவன் வணிகவியல் கணினி பயன்பாடுகள் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும், தீக்ஷா என்ற மாணவி வணிகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எம்.ஸ்ரீனிவாசன், எஸ். ஸ்ரீநிதி, எம்.பிரவீன் ஆகிய மாணவ மாணவிகள் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத் தலைவர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் ஆர்.சி. உதயகுமார் மற்றும் இயக்குனர் மா. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டினர்.

    • விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

    இதில் 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி முழுமையாக படித்து முடித்த பின்னர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    ×