என் மலர்
புதுக்கோட்டை
கீரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கீரமங்கலம்:
கீரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மேற்பனைக்காட்டில் டீ விற்பனை செய்தவரிடம் இருந்து ஒரு டீ கேனும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி, கேப்பறை பகுதிகளில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து வாகனங்களை வல்லத்தராககோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மேட்டுப்பட்டி கேட் பகுதியில் மீன் வியாபாரம் செய்தவரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 31 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 6 பேர் என மொத்தம் 37 பேர் மீது இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி சோலைசெரிப்பட்டியை சேர்ந்தவர் சடையன். இவரது மனைவி பிச்சாயி (வயது 60). உடல் நலம் சரியில்லாமல் இருந்த பிச்சாயியை அவரது மகன் ராஜூ ஒரு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த பிச்சாயி திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதனக்கோட்டை அருகே நண்பர்கள் 2 பேர் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆதனக்கோட்டை:
ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான் ஊரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைராஜ் (வயது 62), அழகிரிசாமி (45), சுந்தரம் (65). நண்பர்களான 3 பேரும், ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாராயம் வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மூன்று பேருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போகவே தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும், கபசுர குடிநீர் உள்ளிட்ட கசாயம் வைத்து சாப்பிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி இரவு துரைராஜ் மூச்சுத்திணறல் ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அழகிரிசாமி உறவினர்கள், அழகிரிசாமியை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 26-ந்தேதி சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அழகிரிசாமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். பின்னர் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடைேய சுந்தரத்திற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நண்பர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிலையில் வடக்கு தொண்டைமான் ஊரணி கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து புதுக்கோட்டை சுகாதார மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து இன்று (திங்கட்கிழமை) வடக்கு தொண்டைமான் ஊரணியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த உத்தரவிட்டிருப்பதாக சுகாதார துணை இயக்குனர் கலைவாணி தெரிவித்துள்ளார்.
விராலிமலை ஒன்றியம் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
ஆவூர்:
விராலிமலை ஒன்றியம் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காமு. மு.பி.மணி தொடங்கி வைத்தார். முகாமில் ஆவூர் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த 18 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்ட 180 பேர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல தொண்டைமான் நல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த 130 பேரும், கசவனூர் அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில் அப்பகுதியை சேர்ந்த 109 பேரும், விராலிமலையில் தனியார் நிறுவனத்தில் நடந்த முகாமில் 110 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விராலிமலை வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் (வட்டார ஊராட்சி), ரமேஷ் (கிராம ஊராட்சி) மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர். முகாமில் அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாத்தூர், ஆவூரில் ஊரடங்கு தடையை மீறிய 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், யோகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாத்தூர், ஆவூர், ஆம்பூர்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் ஊரடங்கு தடையை மீறி அவசியமின்றி மோட்டார் சைக்கிளில் சென்றது, முக கவசம் அணியாமல் சென்றது மற்றும் அனுமதியின்றி மாத்தூரில் சந்தைக்கடை வைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 27 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 26 பேர் மற்றும் அரசு உத்தரவை மீறி கடை திறந்த ஒருவர் என 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் இடையப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இரங்காடு புளியந்தோப்பில் தேன்கனியூரைச் சேர்ந்த பெருமாள் (வயது 38), ராஜேஷ், குமார் (38), ரவிச்சந்திரன் (40), மேடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமன் (33), வடக்கு மோத்தப்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (26) உள்பட 10 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதில் பெருமாள் என்பவர் தப்பித்து ஓடிவிட்டார். மற்ற 9 பேரை பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 7 மோட்டார் சைக்கிள்கள், ரூ.27 ஆயிரத்து 150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்காக சென்ற எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, நோயாளி ஒரவர் உயிருக்கு போராடிய நிலையில் முதலுதவி அளித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோன தொற்று சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய இன்று எம்எல்ஏ முத்துராஜா சென்றார். மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளிக்கு (CPR) முதலுதவி செய்தார்.

இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியிலும் அங்கே இருந்த நோயாளிகள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் மனதளவில் தைரியத்தையும் உண்டாக்கியது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை கிடைக்க, புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தனது செலவில் 12 செவிலியர்களை நியமித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்டுக்குகள் வரவில்லை. புதுக்கோட்டையில் தினசரி பாதிப்பு 300-க்கும் அதிகமாக உள்ளது. நேற்றைய அறிக்கையின்படி 385 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 228 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 3,732 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நபர்கள், எளிதாக சிகிச்சை, பரிசோதன பெறுவதற்காக தனிப்பட்ட முறையில் 3 பேரை உதவி செய்வதற்கான நியமனம் செய்தார். அவர்களுக்கு முத்துராஜா எமஎல்ஏ தனது சொந்த செலவில் சம்பளம் வழங்குகிறார்.
இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளை பராமரிக்க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா 12 செவிலியர்களை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.10000/ தானே வழங்குதாக அறிவித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து பணி வழங்கினார்.
செவுலியர்களும் அவரது பெற்றோர்களும் நமது சட்டமன்ற உறுப்பினருக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
சுவேதா, ரூபா தேவி, மரிய புஷ்பம், சீலா ராணி, தீபா, கனிமொழி, பரிமலேஸ்வரி, கிரிஜாலினி, மங்கை திலகம், போஸ்வரியா , வித்தியா,
சந்தியா ஆகியோர் செவிலியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற புதிய துறையில் பெறப்பட்ட மனுவில் மனுதாரரின் வீட்டிற்கு சென்று கல்வி உதவித்தொகை ஆணையை கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கினார்.
புதுக்கோட்டை:
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் `உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற துறையை உருவாக்கி, அதற்கென தனியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் நியமித்தார். மாவட்டந்தோறும் அவர் பெற்ற மனுக்களில் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் அருகே லட்சுமணப்பட்டியில் குறளரசன் என்பவர் பட்டப்படிப்பு பயில்வதற்கு உதவித் தொகை வேண்டி ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளார். இவரது மனுவினை வருவாய்த்துறையினர் மூலம் உடனடியாக பரிசீலனை செய்து கல்வி உதவித்தொகை பெற இவர் தகுதியுடையவர் என கண்டறியப்பட்டது. தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை மனுதாரரின் வீட்டிற்கு நேற்று கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் சென்று வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் இதற்கென புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
தளர்வில்லாத ஊரடங்கு அமலில் உள்ளதால் லெட்சுமணப்பட்டியை சேர்ந்த மனுதாரர் குறளரசனுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இம்மாணவருக்கு தேவையான கல்லூரி கட்டணத்தை வழங்குவதற்கு வங்கிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தளர்வில்லா ஊரடங்கு காலக்கட்டம் என்பதால் வருவாய்த்துறையினர் மூலம் மனுதாரர்களின் வீடுகளுக்கே சென்று தகுதியான மனுக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வழங்கிய ஏனைய மனுக்களின் மீதும் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்தி கொள்கின்றனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், மருத்துவ முகாம் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே தடுப்பூசி போடப்படும் இடங்களில் பொதுமக்கள் குவிகின்றனர். முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. இதுதவிர சிறப்பு முகாமிலும் பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தடுப்பூசி முகாம் நேற்று முதல் தொடங்கியது. முன்னுரிமை அடிப்படையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. இதில் இளம்வயதினர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டனர். மேலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதேபோல பெரியார் நகரில் வைரம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் தடுப்பூசி போட பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகும் கூட்டம் கூடியதால் டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டனர்.
நகர்மன்றத்தில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது. அதற்கேற்ப தடுப்பூசிகளும் தயாராக வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலும், ஆலங்குடி அறையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுகாதார ஆய்வாளர் ராகுல் மேற்பார்வையிலும் தடுப்பூசி முகாம் நடந்தது.
மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினர்.
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை சப்-கலெக்டர் ஆனந்த்மோகன் தொடங்கி வைத்தார். முகாமில் நகராட்சியில் வேலை பார்த்து வரும் முன்கள பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் தி போர்ட் சிட்டி கிளப் சார்பில் நடந்தது.
வளிமண்டலத்தில் நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை கணக்கிட்டு விண்வெளியில் பயிர் சாகுபடி செய்வது குறித்த தொடர் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
கீரமங்கலம்:
கொரோனா சிகிச்சை வார்டு மற்றும் படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் புதிய உபகரணத்தை வாலிபர் உருவாக்கி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் மகன் சிவசந்தோஷ் (வயது 18) இவர், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2018-ல் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். பின்னர் புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) இறுதி ஆண்டு படித்து முடித்துள்ளார்.
சிவசந்தோஷ் ஆராய்ச்சி துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பழைய எலக்ட்ரானிக் பொருட்களை சேகரித்து பல கருவிகளை வடிவமைத்து இயங்க செய்துள்ளார். தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கச் சென்ற பிறகு கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் சக நண்பர் சீனிவாசனுடன் இணைந்து நண்பர்கள் பார்த்திபன், சரவணன் ஆகியோரின் பொருளாதார உதவியுடன் யு.வி லைட் மூலம் கொரோனா உள்ளிட்ட கிருமிகளை அழித்தல் கருவியை செய்து இணையம் மூலம் வெளியிட்டதைப் பார்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அந்தக் கருவியை வாங்கிச் சென்றுள்ளது. அதே போல தானியங்கி முறையில் தயாரிக்கப்பட்டு செல்போன் மூலம் இயக்கக்கூடிய கருவியில் உடல் வெப்பத்தை பரிசோதித்து கையை நீட்டினால் கிருமிநாசினி தெளிக்கும் உபகரணத்தையும் செய்து ஒரு திருமண வீட்டில் வைத்து சோதித்து வெற்றி கண்டுள்ளார்.

மேலும், தண்ணீர் வீணாகாமல் சோளார் மூலம் சொட்டு நீர் பாசனத்தை முறைப்படுத்தும் கருவியும் செய்து பாராட்டுப் பெற்றுள்ளார். வளிமண்டலத்தில் நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை கணக்கிட்டு விண்வெளியில் பயிர் சாகுபடி செய்வது குறித்த தொடர் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
சூரிய ஒளியில் இருந்து நேரடியாக தண்ணீரை சூடுபடுத்துதல் போன்ற கருவியை வடிவமைத்துள்ளார். இதை அறிந்த சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் இவரைப் பாராட்டியதோடு பணிபுரியவும் வாய்ப்பு கொடுத்துள்ளது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் காற்றில் பறக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை காற்றோடு இழுத்து அழிக்கும் ஒரு கருவியையும், கொரோனா நோயாளிகள் படுத்திருந்த படுக்கைகள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் உள்ள படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தம் செய்யும் யு.வி. லைட் கருவியையும் வடிவமைத்துள்ளார். இது குறித்து சிவசந்தோஷ் கூறுகையில், கொரோனா வார்டுகளில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் தும்மல், இருமல் மூலம் வெளியேறி மற்றவர்களுக்கு பரவும் கிருமிகளை காற்றோடு சேர்ந்து இழுத்து உள்வாங்கி கிருமியை அழித்துவிட்டு காற்றை வெளியேற்றும் உபகரணம் வடிவமைத்திருக்கிறேன்.
ஏ.சி. மெஷின் போல ஒவ்வொரு அறையிலும் பொறுத்திவிட்டால் அந்த அறைகளில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். அதனால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். அதே போல யு.வி. லைட் மூலமே நோயாளிகளின் படுக்கைகளில் உள்ள கிருமிகளையும் ஆம்புலன்ஸ் படுக்கைளில் உள்ள கிருமிகளையும் அழித்து சுத்தம் செய்யும் உபகரணம் ஒன்றும் வடிவமைத்திருக்கிறேன் என்றார். கிராமத்து வாலிபர் தொடர்ந்து ஆய்வுகளில் சாதித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.






