என் மலர்
செய்திகள்

பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட போது எடுத்த படம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட குவியும் பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்தி கொள்கின்றனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், மருத்துவ முகாம் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே தடுப்பூசி போடப்படும் இடங்களில் பொதுமக்கள் குவிகின்றனர். முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. இதுதவிர சிறப்பு முகாமிலும் பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தடுப்பூசி முகாம் நேற்று முதல் தொடங்கியது. முன்னுரிமை அடிப்படையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. இதில் இளம்வயதினர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டனர். மேலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதேபோல பெரியார் நகரில் வைரம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் தடுப்பூசி போட பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகும் கூட்டம் கூடியதால் டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டனர்.
நகர்மன்றத்தில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது. அதற்கேற்ப தடுப்பூசிகளும் தயாராக வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலும், ஆலங்குடி அறையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுகாதார ஆய்வாளர் ராகுல் மேற்பார்வையிலும் தடுப்பூசி முகாம் நடந்தது.
மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினர்.
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை சப்-கலெக்டர் ஆனந்த்மோகன் தொடங்கி வைத்தார். முகாமில் நகராட்சியில் வேலை பார்த்து வரும் முன்கள பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் தி போர்ட் சிட்டி கிளப் சார்பில் நடந்தது.
Next Story






