என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடியில் தனியார் பள்ளியில் ரூ.1¾ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடியில் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சம்பவத்தன்று அதிகாலையில் இந்த பள்ளியை அதன் காவலாளி சுற்றிபார்த்துள்ளார். அப்போது, பள்ளியின் அலுவலக அறை திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளி தாளாளர் இளந்தென்றலுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது, மேஜை டிராயரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கண்காணிப்பு கேமராவின் பதிவு எந்திரமும் திருடப்பட்டு இருந்தது. புதுக்கோட்டையில் இருந்து விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    தஞ்சை மாவட்டம் ஆச்சாம்பட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது38). விவசாயியான இவர், புதுக்கோட்டை அருகே கூத்தாச்சிப்பட்டியில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தெம்மாவூர் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருவேங்கடம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சரக்கு வேன் டிரைவர் தெம்மாவூரை சேர்ந்த லோகநாதன் (37) மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    மணமேல்குடி அருகே கஞ்சா விற்றவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி:

    மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் அம்மாபட்டினம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆதிபட்டினம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமானை பிடித்து விசாரித்தபோது, புதுக்குடி பகுதியிலிருந்து வாங்கி வந்ததாக கூறினார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் புதுக்குடி பகுதிக்கு சென்று அங்கு வீட்டில் வைத்து கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சந்திரா என்பவரையும் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    கீரமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 38 பேர் குணமடைந்தனர். இதனால் `டிஸ்சார்ஜ்' எண்ணிக்கை 26 ஆயிரத்து635 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 341 ஆக உள்ளது.
    புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மறையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோலைமுத்து (வயது42). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து மறையப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மாலையீடு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சோலைமுத்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சோலைமுத்து கூலித்தொழிலாளி என போலீசார் தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 53 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனால், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது.
    வடகாட்டில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணி கிடப்பில் ேபாடப்பட்டுள்ளது. மேலும் சாத்தன்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
    வடகாடு:

    வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலில் சேதமடைந்தது. இந்தநிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. மேலும் தேர்தலுக்கு முன்பு எம்.எல்.ஏ.வாக இருந்த தற்போதய சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதன்பின் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. எனவே இனிமேலாது இந்த பணியினை உடனே தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் வடகாடு, மல்லிகைபுஞ்சை, சாத்தன்பட்டி, பள்ளத்திவிடுதி, காமராஜர்புரம் போன்ற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த பகுதியில் ஒருசில இடங்களில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்ததால் தொட்டிகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிலர் குடிதண்ணீரை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள கீழப்பட்டி ராசியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர் (வயது 50). சம்பவத்தன்று இவர் அய்யனார்புரம் அருகே உள்ள பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்ப வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 544 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 337 பேர் உயர்ந்துள்ளது.
    மீமிசல் அருகே இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் 6 அடி நீளமும், 3 அடி அகலமும் சுமார் 200 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள குமரப்பன் வயல் கிராமத்தில் கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரி அன்புமணி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    கடற்கரையில் இறந்து கிடந்த திமிங்கலம் கோகியா வகையை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. பின்னர் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் அங்கு வந்த கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் இறந்த திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது திமிங்கலத்தின் வயிற்றில் இறந்தநிலையில் 6 மாத குட்டி ஒன்று இருந்தது, அதனை தனியாக எடுத்தனர். பின்னர் இறந்த திமிங்கலத்தை அங்கேயே அடக்கம் செய்தனர்.

    வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குட்டியை ஆராய்ச்சிக்காக தொண்டி வன உயிரியல் காப்பக அதிகாரி மதுபாலனிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த திமிங்கலம் 6 அடி நீளமும், 3 அடி அகலமும் சுமார் 200 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
    கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூரை அடுத்த தச்சக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 48). இவர் சில வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, சொந்த ஊர் வந்த இவர் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று குடும்பத்தினருக்கு போன் செய்து விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றபோது, திருச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் தேவராஜ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×