என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்

    • பொன்னமராவதி பேரூராட்சியில் பகுதி சபைக் கூட்டம் நடந்தது
    • அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, 10 -வது வார்டில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    இக்கூட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    இக்கூட்டத்தில், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் . வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரங்களை சபாக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறுதல். இதர பொருட்கள் ஏதேனும் இருப்பின் சபாவின் ஒப்புதலுக்கு கொண்டு வருதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர; (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மஞ்சப் பை குறித்து விழிப்புணர்வு பாடல் பாடினார்
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன். இவர் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பிளாஸ்டிக் பயன் பாட்டின் தீமைகள் குறித்து விளக்கும் வகையில் செம்பட்டிவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரயர்களோடு இணைந்து மாணவர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கியதோடு, மஞ்சப்பை பயன் பாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினர். பின்னர் 'அவமானமா அவமானமா மஞ்சப்பை பயன்படுத்துனா அவ மானமா' என்று தொடங்கும் விழிப்புணர்வுப் பாடலை மாணவர்க ளோடு சேர்ந்து பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    • வட்டார வளர்ச்சி அலுவலர் காரை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அடிப்படை வசதிகள் செய்து தர உடனடி நடவடிக்கை கோரி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆர். பாலக்குறிச்சி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள், கடந்த 17 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை. பேருந்து வசதிகள் இல்லை. இப்பகுதியில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு மருத்துவம் பார்க்க செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும், கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்து அங்கு வந்த பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி காரில் புறப்படும் போது, அவரின் காரை மறித்து தங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உலகம்பட்டி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 2 தனியார் உரக் கடைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு விதிகளை பின்பற்றாத 2 தனியார் உரக்கடைகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் தற்காலிக தடைவிதித்தனர்.

    ஆலங்குடி அருகே உளள வடகாடு பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அதோடு அவர்கள் வழங்கும் பயிர் நண்ணூட்டமும் சேர்ந்து வாங்க வலியுறுத்துவதாக விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மாவட்ட வேளாண் துணை இயக்குநர் மோகன்ராஜ், உதவி இயக்குநர்(தரக் கட்டுப்பாடு ) மதியழகன், வேளாண் அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு விதிகளை முறையாக பின்பற்றாத 2 கடைகளில் உர விற்பனைக்கு த ற்காலிக தடைவிதித்தனர்.

    • தேசிய ஒற்றுமை தின விழா நடந்தது
    • வருவாய் துறை சார்பில் நடந்தது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஒற்றுமை தின நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமை தின நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை வருவாய் துறை சார்பில் கந்தர்வகோட்டை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஒற்றுமை நாள் ஓட்டத்தை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஒற்றுமை நாள் ஓட்டம் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஸ்ரீதரன், திலகவதி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
    • மற்றொருவருக்கு போலீஸ் வலை

     புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வடக்கு அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரசாக் (வயது50) இவர் தேநீர் கடையில் பலகாரம் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், தீபாவளி அன்று மணமேல்குடி அருகே கண்னிவயலில் உள்ள கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து மணல்மேல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், அப்துல்ரசாக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா (41) என்பவரிடம் ரூ 8 ஆயிரம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், ரஹ்மத்துல்லா மற்றும் அவரது சகோதரர் இப்ராம்ஷா ஆகிய இருவரும் சேர்ந்து அப்துல்ரசாக்கை மது அருந்த கூத்தாடிவயல் கண்மாய்க்கு அழைத்துச் சென்று மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர்.

    அப்போது கொடுத்தக்கடனை திரும்பத்தரமாட்டாயா எனக் கூறி அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து, அப்துல்ரசாக் கழுத்தை ப்ளேடால் அறுத்து அருகே இருந்த கண்மாயில் மூழ்கடித்துள்ளனர் என தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரஹ்மத்துல்லாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இப்ராம்ஷாவை தேடி வருகின்றனர். கொடுத்தக் கடனை திரும்பிக் கேட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
    • கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ் குமார் (வயது19).இவர் கந்தர்வகோட்டை அருகே முதுகுளம் கிராமத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கோழிப்பண்ணை அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • மின்சார கம்பியில் அடிப்பட்டு மயில் இறந்தது
    • வனத்துறையினர் மரியாதை செலுத்தி புதைத்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதி பஸ் நிறுத்தம் அருகில் உயர் மின்னழுத்த கம்பியில் அடிபட்டு ஆண் மயில் உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் செம்பட்டிவிடுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இறந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் மயிலுக்கு உரிய மரியாதை செலுத்தி அப்பகுதியில் புதைத்தனர்.

    • பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
    • திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சின்ன அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ முருக பெருமானின் ஆறுபடைவீடுகளிலும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதே போன்று முருகபெருமானின் பிற ஆலயங்களிலும் கந்த சஷ்டி விழா நடைபெறும். அந்த வகையில் அறந்தாங்கி சின்ன அண்ணாநகரில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று ஸ்ரீ சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    • கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திருடு போன நகைகள் மீட்கப்பட்டன

    புதுக்கோட்டை:

    மழையூர் காவல் நிலைய எல்லைக்குட்ட வெட்டன் விடுதி பகுதியில் கடந்த 12-ந் தேதி வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் கீழ செட்டித் தெருவை சேர்ந்த கோபி (எ) வைரவசுந்தரம்(வயது46). என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மழையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆகியோர்கள் சேர்ந்து கைது செய்து அவரிடம் இருந்து திருடு போன நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மீட்டனர்.

    இதே போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை மற்றும் கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர்கள் சேர்ந்து ஆயுதப்படை காவல் ஆய்வாளர் வீடு மற்றும் அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல் போன்ற பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து கொள்ளையடித்த திருச்சி மாவட்டம் துவாக்குடி வாலவந்தான் கோட்டை புத்துகோவில் பெரியார் நகரை சேர்ந்த நாகராஜன்(50), திருச்சி துவாக்குடி மலை பாரதியார் தெருவை சேர்ந்த கௌதம் (23), கரூர் மாவட்டம் குளித்தலை நமச்சிவாயம் நகரை சேர்ந்த ஜுவா என்கிற ஜுவானந்தம்(33) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து திருடு போன பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

    • குடியிருப்போர் நலச்சங்கம் மாதாந்திர கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட நரிமேடு அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம்-3 மாதாந்திர சாதாரண கூட்டம் தலைவர் மனோகர் தலைமையில் நடைப்பெற்றது.

    செயலாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். சங்கத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளை பொருளாளர் உசேன் உறுப்பினர்களிடத்தே எடுத்துரைத்தார். சமுத்துவபுரத்திலிருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு வரும் பாதையில் உள்ள பாலத்தின் இணைப்பு பகுதிகள் மழையின் காரணமாக அரித்து சென்றுவிட்டது. அதனால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதை உடனடியாக மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் கவனத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுப்பது.

    குப்பைகளை கொட்ட நகராட்சி நிர்வாகம் சார்பாக குப்பை தொட்டி வைக்க நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில், ஆணையர் நாகராஜன் ஆகியோருக்கு அனைத்து உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனு கொடுப்பது.

    சங்க நடவடிக்கைகளை தொடர்ந்து வங்கி மூலம் செயல்படுத்த வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்க நடவடிக்கை எடுப்பது, மாத பராமரிப்பு சந்தாவை 10ம் தேதிக்குள் செலுத்த உறுப்பினர்களை கேட்டுக் கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் துணைத்தலைவர் மௌலி, துணைச் செயலாளர் அபிநயா, பிளாக் இன்சார்ஜ்கள் வனிதா, வருண், கருணாகரன், மீனாட்சி மற்றும் உறுப்பினர்கள் புவனாபாண்டியன், ஆப்தாபேகம், ரவி, சந்தோஷ், சித்ரா, பவானி, ஜெயா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    ×