என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூரில் பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு
- முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்திற்கென புதிதாக பொதுப்பணித்துறை கட்டட கோட்ட அலுவலகம் அமைக்க அரசு அனுமதி அளித்து புதிய அலுவலகம் நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டத்திற்கான பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட அலுவலகம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ) அரியலூரில் செயல்பட்டு வருகிறது. இதனால் கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரர்கள் அரியலூர் சென்று வந்தனர். மேலும் பொதுமக்களும் கட்டிட எஸ்டிமேட் பெற அரியலூருக்கு செல்லவேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கையை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கென தனியாக பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட அலுவலகம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அமைக்க அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அலுவலகத்திற்காக செயற்பொறியாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்து செயற்பொறியாளரையும் நியமனம் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் உள்ள பொதுப்பணித்துறை கட்டட உப கோட்ட அலுவலகத்தில் தற்காலிமாக கோட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் பொதுப்பணித்துறை கட்டட கோட்ட அலுவலகம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலு ஆகியோருக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
- லாரி மோதி 7 ஆடுகள் பலியாகின
- பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே களரம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் செந்தில் (வயது45). இவரது மனைவி தனலெட்சுமி. இவர் வளர்க்கும் ஆடுகளை அருகிலுள்ள வயலில் மேய்த்து விட்டு பட்டியில் அடைப்பதற்காக ஓட்டி சென்றார்.
அப்போது துறையூர் - பெரம்பலூர் செல்லும் சாலையில் மர இழைப்பு பட்டறைக்கு எதிரே வந்த போது அவ்வழியே அதிவேகமாக வந்த சிமெண்ட் லாரி ஆடுகள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்தில் இறந்தது, மேலும் ஒரு ஆடு காயமடைந்தன.
இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 50க்குமேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவிடத்திற்கு சென்று மறியல் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விபத்தினை ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இறந்த ஆட்டிற்கு நிவாரண தொகை பெற்றுத்தரப்படும் என உறுதி கூறியதன்பேரில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கட்டிட தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்
- நீண்டநாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் வடக்குதெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோவிந்தராஜ் (வயது41). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனைவி சாந்தி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பிள்ளைகளுடன் கோயம்புத்தூரில் உள்ள அவரது அண்ணண் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோவிந்தராஜ், மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவிடத்திற்கு சென்று இறந்த கோவிந்தராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது
- அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை தலைமையாசிரியர் பொன்னுதுரை (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கினர். ஆலத்தூர் மேற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சோமு.மதியழகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதுகலை ஆசிரியர் கலியமூர்த்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் மதிவாணன். தெய்வானைலதா, செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு, இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ராஜா, விஜய்அரவிந்த், முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் ராஜாசிதம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் விஜய நாராயண பெருமாள் நன்றி கூறினார்.
- ஓய்வுபெற்ற தலைமை காவலருக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
- காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு
பெரம்பலூர்:
பெரம்பலூரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (75). இவர் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு. சுப்ரமணியன் 2003-ல் போலீஸ்துறையில் இருந்து ஓய்வுபெற்றபிறகு மாவட்ட கருவூல அலுவலகம் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வருகிறார். சுப்ரமணியன், அரசு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவக்காப்பீட்டுக்கான பிரீமிய தொகையும், சந்தாவும் முறையாக செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுப்ரமணியன் மனைவி ரெத்தினாம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சுப்ரமணியன் ரூ.3 லட்சம் வரை மருத்துவசெலவு செய்துள்ளார்.
இதனால் மனைவியின் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு தொகையை வழங்கவேண்டி பெரம்பலூரில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தில் சுப்ரமணியன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் தங்களது நெட்ஒர்க் வரையறையில் ரெத்தினாம்பாள் சிகிச்சை பெற்ற மருத்துவமனை பட்டிலுக்குள் இல்லை என்று கூறி மருத்துவக்காப்பீட்டு தொகை வழங்ககாப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. சிகிச்சை பலனின்றி ரெத்தினாம்பாள் கடந்த 2021ம் ஆண்டு பிப்.19ம்தேதி இறந்துவிட்டார்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த சுப்ரமணியன் நஷ்ட ஈடு கேட்டு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பெரம்பலூர் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின்கிளை மேலாளர் மற்றும் சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தின் கோட்ட மேலாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர், சுப்ரமணியன் மனைவிக்கு ஏற்பட்ட மருத்துவ செலவிற்குரிய காப்பீட்டுத்தொகையாக ரூ.2 லட்சமும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக சுப்ரமணியத்திற்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் 45 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்கவேண்டும். தவறும் பட்சத்தில் மேற்கண்ட தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டி சேர்த்துவழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.
- வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது
- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வகுமார் (வயது 42). இவர் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி மதியழகனிடம் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது, எனது மனைவி மகேஸ்வரி தமிழ் துறையில் முனைவர் பட்டம் பெற்று தற்சமயம் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிக்கு நேரடி நியமனத்தின் மூலம் பணி நியமனம் பெற்றுத் தருகிறேன் என முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் கூறியதை நம்பி அவரிடம் ரூ. 22.50 லட்சம் கொடுத்தேன்.
ஆனால் பணி வாங்கி தரவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் நான் பலமுறை நேரில் சென்றும், போன் மூலமும் பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை, இந்நிலையில் கடந்த மே மாதம் 18ம்தேதி நான் நேரில் சென்று பணம் கேட்டபோது தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே முன்னாள் அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
- விதைப்பரிசோதனை நிலையத்தில் இயக்குநர் ஆய்வு செய்தார்
- 118 விதை மாதிரிகள் தரமற்றவை
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் சென்னை விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூரில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் திடிரென சென்னை விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள், பணி விதை மாதிரிகள் ஆகியவையின் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலவன் ஆகியவை கணக்கிடப்படும் முறை மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் விதை முளைப்புத்திறன் அறையில் முளைப்புத்திறன், கணக்கிடும் முறைகள் மற்றும் மறு பரிசோதனை மாதிரிகள் குறித்தும், விதை பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். விதை மாதிரிகளை சரியான முறையில் பகுப்பாய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் முடிவுகள் கிடைக்க செய்யுமாறு இயக்குநர் அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் விதைப் பரிசோதனை நிலையத்தில் நடப்பாண்டு இதுவரை 492 சான்று விதை மாதிரிகள், ஆயிரத்து 21 ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் 273 பணி விதை மாதிரிகள் என மொத்தம் ஆயிரத்து 776 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 118 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன என்று திருச்சி விதைப்பரிசோதனை அலுவலர் மனோன்மணி தெரிவித்தார்.
ஆய்வின்போது, கரூர் விதை ஆய்வு துணை இயக்குநர் மாயக்கண்ணன், பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- காகன்னை ஈஸ்வரர் கோவிலில் 51- நாள் கோமாதா பூஜை தொடங்கியது
- உலக நன்மைக்காக நடைபெறுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக 51 நாள் கோமாதா பூஜை நேற்று தொடங்கியது.
எளம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், தர்ம சிந்தனையுடைய மக்கள் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று, குபேரலட்சுமி கடாக்ஷம் பெற்று வாழ ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து 51 நாட்கள் கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது.
இதன்படி இந்தாண்டு கோமாதா பூஜை நேற்று தொடங்கியது. இதையொட்டி பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள அன்னை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாதணையும், கோமாதா பூஜையும் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தலைமை வகித்தார். தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் முன்னின்று பூஜைகளை நடத்தினர். இதில் ராதா மாதாஜி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- கமல், ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்
- அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலை தேடிவந்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கமல் (வயது 27). இவர் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் கமலை கைது செய்தனர். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- மாரிமுத்து 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயத்தை தொண்டமாந்துறை கிராமத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்.
- ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா காரியானூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 26). இவர் 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயத்தை தொண்டமாந்துறை கிராமத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் வைத்திருந்த கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் மாரிமுத்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் சந்திப்பு சாலையில் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
- பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் புள்ளி மான் சாலையைக்கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் சந்திப்பு சாலையில் நேற்று முன்தினம் இரவு கருவுற்ற நிலையில் 3 வயது பெண் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்து கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அந்த புள்ளிமான் நேற்று மதியம் உயிரிழந்தது.
இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் நேற்று அதிகாலை 2 வயது பெண் புள்ளி மான் சாலையைக்கடக்க முயன்றபோது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து, இறந்த மான்கAளை பேரளி வனக்காப்பாளர் ஜெஸ்டின், வனக்காவலர்கள் சவுந்தர்யா, வீரராகவன் ஆகியோர் உதவி கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை மேற்கொண்டு சித்தளி காப்புக்காட்டில் புதைத்தனர்.
- பெரம்பலூரில் நாளை அண்ணா சைக்கிள் போட்டிகள் நடை பெறுகிறது.
- வீரர், வீராங்கனைகள் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 7.45 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த சைக்கிளுடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வந்து கலந்துகொள்ள வேண்டும். வீரர், வீராங்கனைகள் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 15-ந்தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தலா ரூ.250 வீதம் பரிசு தொகைக்கான காசோலையாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






