என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன.
- இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 111 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன. இதில் வேப்பந்தட்டை தாலுகாவில் வெங்கலத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமையிலும்,
குன்னம் தாலுகா பெருமத்தூரில் (வடக்கு) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா காரையில் உதவி ஆணையர் (கலால்) ஷோபா தலைமையிலும்,
பெரம்பலூர் தாலுகா செங்குணத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) சிவசங்கரன் தலைமையிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் நடந்தன.
முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 111 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
- ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கான பாரம்பரிய நெல் ரக விதை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
- தற்போது மாப்பிள்ளை சம்பா 60 கிலோ, சீரக சம்பா 40 கிலோ, கருப்பு கவுனி 20 கிலோ இருப்பு வைக்கப்பட்டு வினியோகத்திற்கு தயாராக உள்ளது.
பெரம்பலூர் :
ஆலத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
ஆலத்தூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் வகைகள், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்ய ஆலத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாப்பிள்ளை சம்பா 60 கிலோ, சீரக சம்பா 40 கிலோ, கருப்பு கவுனி 20 கிலோ இருப்பு வைக்கப்பட்டு வினியோகத்திற்கு தயாராக உள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கான பாரம்பரிய நெல் ரக விதை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
ஒரு கிலோவின் விலை ரூ.25 ஆகும். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் அதாவது ஒரு கிலோவிற்கு ரூ.12.50 வீதம் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது ஆலத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வந்து பார்த்த போது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போது அதில் அதிகாலை 2.15 மணியளவில் ஒரே மொபட்டில் வந்த 3 மர்மநபர்கள், கோவிலை சுற்றி வந்தது தெரிய வந்தது.
பெரம்பலூர் :
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் பாரதி நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து பார்த்த போது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் அதிகாலை 2.15 மணியளவில் ஒரே மொபட்டில் வந்த 3 மர்மநபர்கள், கோவிலை சுற்றி வந்தனர்.
பின்னர் அதில் 2 பேர் இறங்கி கோவிலுக்குள் சென்று அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு வெளியே வந்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும், தயார் நிலையில் நின்று கொண்டிருந்தவரின் மொபட்டில் ஏறி மின்னல் வேகத்தில் பெரம்பலூர் நோக்கி தப்பி சென்றது பதிவாகியிருந்தது.
அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
- குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதால் செல்வ வளம் பெருகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ராசிகளுக்கும் 12 தூண்களில் 12 குபேர பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும்.
மேலும் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேர யாக வேள்வி நடைபெறும். அதன்படி ஆவணி மாத குபேர யாக வேள்வி நடைபெற்றது.
கணபதி ஹோமத்தோடு தொடங்கிய யாக வேள்வியில் பல்வேறு மூலிகை பொருட்கள் இடப்பட்டு மஹா பூர்ணாஹூதி, அதனையடுத்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு திரவியம், பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தோடு மஹா தீபாரதனை நடைபெற்றது.
குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதால் செல்வ வளம் பெருகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 63). இவர் ஓட்டு வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
- காலை 11 மணியளவில் சண்முகத்தின் வீடு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 63). இவர் ஓட்டு வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள குரும்பலூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்று விட்டனர். காலை 11 மணியளவில் சண்முகத்தின் வீடு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, 2 கதவுகள், ஒரு மேஜை, மின் விசிறி, கட்டில் ஆகியவை தீக்கு இரையாயின. குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் நான்கு ரோடு சிலோன் காலனியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 37).
- பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வந்தபோது, பூங்கொடி தனது கையில் வைத்திருந்த கட்டைப்பையை பார்த்தபோது, அதன் பக்கவாட்டில் பிளேடால் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் நான்கு ரோடு சிலோன் காலனியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 37). இவர் நேற்று தனது உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக செல்லியம்பாளையம் வடக்கு தெருவில் வசித்து வரும் தனது அக்காள் செல்லத்திடம் இருந்து 5 பவுன் நகையை இரவலுக்கு நேற்று முன்தினம் வாங்கி வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று காலை பூங்கொடி நகையை அணிந்து கொண்டு, உறவினர் திருமணத்திற்கு வந்துள்ளார். பின்னர் மாலையில் அந்த நகையை அவரது அக்காள் மகன் ஆனந்த் என்பவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பூங்கொடி பழைய பஸ் நிலையம் அருகே அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளியில் படித்து வரும் தனது மகள்களை அழைத்து வர சென்றபோது, நகையை ஆனந்திடம் கொடுக்க சென்றார். ஆனால் ஆனந்த் வர தாமதமானதால் பூங்கொடி தனது மகள்களுடன் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வேப்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வந்தபோது, பூங்கொடி தனது கையில் வைத்திருந்த கட்டைப்பையை பார்த்தபோது, அதன் பக்கவாட்டில் பிளேடால் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் கட்டைப்பையின் உள்ளே பார்த்த போது, அதில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நகையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
- வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் செல்வாம்பாள் (வயது 41).
- பாலையூர் அருகே சென்றபோது ெமாபட்டின் சக்கரத்தில் சேலை சிக்கியதில் செல்வாம்பாள், ெமாபட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் செல்வாம்பாள் (வயது 41). இவரது கணவர் செல்லமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் செல்வாம்பாள் தொண்டப்பாடியில் உள்ள உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மாவிலிங்கையில் இருந்து புறப்பட்டு பஸ்சில் வேப்பந்தட்டைக்கு வந்துள்ளார்.
பின்னர் 'லிப்ட்' கேட்டு தொண்டப்பாடியை சேர்ந்த சகுந்தலா என்பவரது மொபட்டில் வேப்பந்தட்டையில் இருந்து தொண்டப்பாடிக்கு சென்றுள்ளார். பாலையூர் அருகே சென்றபோது ெமாபட்டின் சக்கரத்தில் சேலை சிக்கியதில் செல்வாம்பாள், ெமாபட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வாம்பாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
- விநாயகர், மகா மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
விநாயகர், மகா மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர், மகா மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இரவில் அம்மனுக்கு பொங்கலிட்டு, மாவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவ அம்மன் வீதி உலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை குரும்பலூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக சிவாலயம் எழுப்புவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
- திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக சிவாலயம் எழுப்புவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் சுவாமி கோவில், ஸ்ரீ வேத நாராயண பெருமாள் சுவாமி கோவில், ஸ்ரீதேவி, பூதேவி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், ஆஞ்சநேயர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கட்டப்பட்டது.
திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் யாகசாலை பூஜை மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது.
நேற்று காலை நாடி சந்தனம், பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர், வேத நாராயண பெருமாள் உள்பட 11 விமானங்களுக்கு ஏக காலத்தில் கும்பாபிஷேக புனித நீர் ஊற்றும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் ஆகியவன நடைபெற்றது. விழாவில் பாலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாக் குழுவினர்கள் சார்பில் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.
- அரசலூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அரசலூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டபோது வாணவெடி மற்றும் அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டது. இதில் வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது.
இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் லலித்கிஷோர் (வயது 9) என்ற சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிறுவன் லலித்கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும் இந்த வெடிவிபத்தில் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த புனிதா (32), திருச்சி மாவட்டம், சிக்கத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36), ஷோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரியா (21) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமம் இல்லாமல் வெடி வெடித்த அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன் (27), மணிகண்டன் (34) ஆகியோரை கைது செய்தனர்.
- வாலிகண்டபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் ஆர்ய வைஸ்ய சமூகத்தினரின் குல தெய்வமான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் செல்வவிநாயகர், பாலமுருகர், நாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், திரவிய ஹுதி, மஹா பூர்ணா ஹுதி ஆகியவை நடைபெற்றது. நேற்று நாடி சந்தானம், மங்கள திரவிய யாகத்தோடு யாக சாலையிலிருந்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்திற்கு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் வாலிகண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற 10 பேருக்கு அரசு உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது
- 6 பேர் முதன்முதலாக எழுதினர்
பெரம்பலூர்:
இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்களில் அரசு பள்ளிகளை சேர்ந்த 263 மாணவ-மாணவிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 23 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 286 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த 15 மாணவர்களும், 30 மாணவிகளும், அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளியை சேர்ந்த 5 மாணவிகளும் என மொத்தம் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு இட ஒதுக்கீடு
தமிழக அரசின் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 7 மாணவிகளும், 3 மாணவர்களும் என மொத்தம் 10 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த 10 பேரில் 6 பேர் முதல் முறையாக எழுதிய 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் முதல் மதிப்பெண் 399 ஆகும். அந்த மதிப்பெண்ணை சுபாஷினி என்ற மாணவி பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளையும், அதில் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளவர்களையும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 188 மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதியதில், 25 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 6 பேர் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்."






