என் மலர்
பெரம்பலூர்
- கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
- சுவாமி புறப்பாடும் நடந்தது
பெரம்பலூர்
ஐப்பசி மாத முதல் பிரதோஷம் சனிக்கிழமையான நேற்று வந்தது. இதனால் சிவன் கோவில்களில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. சனி பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர்.
இதேபோல் வேப்பந்தட்டையை அடுத்த பாலையூர் கிராமத்தில் உள்ள வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்திபகவானுக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது."
- விற்பனை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள்
பெரம்பலூர் :
பெரம்பலூர் கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி பெறாதவராக இருக்க வேண்டும்.
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பெரம்பலூா் என்னும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04328 - 225474 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்."
- பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது
- அரசுப் பள்ளியில் நடந்தது
பெரம்பலூா் :
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியன் தலைமையில், நத்தக்காடு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மருதமுத்து ஆகியோா், போதைப்பொருள்கள் உபயோகிப்பதன் விளைவுகள், அதன் பாதிப்புகள், போதைப் பொருளுக்கு அடிமையாவதால் அவா்களைச் சாா்ந்துள்ளவா்கள் எந்தெந்த வழிகளில் பாதிக்கப்படுகின்றனா் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய காவல் துறையினா், காவல் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் விளக்கம் அளித்தனா்.
- கடைவீதிகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
- தீபாவளியை முன்னிட்டு
பெரம்பலூர்
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அந்தப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் படையெடுத்து வந்தனர்.
ஆனால் கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் துணிமணிகள் மற்றும் மற்ற பொருட்களின் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென தற்காலிக இனிப்பு கடைகள், பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக ஏராளமான தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றனர்."
- காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
- கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மரியாதை செலுத்தினர்
பெரம்பலூர்
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் மற்றும் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, பெரம்பலூர் சிறை துணை சூப்பிரண்டு சிவா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜூனன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன.
- பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இந்த போட்டிகளில் ஏற்கனவே பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தடகள விளையாட்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான ஏற்பாடுகளை லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்
- வீட்டின் பூட்டை உடைத்து 2 மடிக்கணினிகள் திருட்டு போனது.
- பாடாலூர் போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்று விட்டு, பின்னர் மதியம் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 2 மடிக்கணினிகள், 2 ஏ.டி.எம். கார்டுகள், 500 ரூபாய், வெள்ளி சங்கிலி ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்."
- லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 49), லாரி டிரைவர். இவருக்கு கமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்தார். பின்னர் குளியலறைக்கு சென்ற பன்னீர்செல்வம் வெகு நேரமாகியும் திரும்ப வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பன்னீர்செல்வம் கைலியால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் விஷ்ணுதேவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜி.டி.எஸ். ஊழியர்களின் உறுப்பினர் சரிபார்ப்பு நடத்தி ஏ.ஐ.பி.இ.யு. ஜி.டி.எஸ். சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளான 12, 24, 36 வெயிட்டேஜ் மற்றும் மருத்துவ வசதி திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பி.ஓ.க்களும் 4 மணி நேரம் 5 மணி நேரத்திற்கு மேல் வேலைப்பளு உள்ளதால், அதற்குரிய ஊதியத்தையும் வழங்க வேண்டும் அல்லது இலாகா பி.ஓ.வாக மாற்ற வேண்டும். டார்க்கெட் டார்ச்சர் என்று ஊழியர்களை துன்புறுத்த கூடாது. அனைத்து பி.ஓ.க்களுக்கும் தேவையான பொருட்கள் தாமதமின்றி வினியோகம் செய்ய வேண்டும். அனைத்து பி.ஓ.க்களுக்கும் தாமதமில்லாமல் இணையதள வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்."
- இறந்த காட்டுபன்றியை தீயில் வாட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தலா ரூ.50 ஆயிரம் அபராதம்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே வனவிலங்குகளை பிடித்து தீயிட்டு பொசுக்கிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ்க்கு கிடைந்த ரகசிய தகவலின் படி வனச்சரகர் பழனிகுமரன் தலைமையில் வனவர் குமார், வனக்காப்பாளர்கள் ரோஜா, ராஜி, அன்பரசு ஆகியோர் கொண்ட வனக்குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது சிறுவாச்சூர்- வேலூர் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகில் ஓடையில் இறந்த நிலையால் இரண்டு காட்டுப் பன்றிகளை தீயிட்டு பொசுக்கிக் கொண்டிருந்த 2 பேரை பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுவாச்சூரை சேர்ந்த சோலைமுத்து மகன் பொன்னுசாமி, கருணாநிதி மகன் மனோகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொன்னுசாமி உட்பட 2 பேரை வனத்துறையினர் பிடித்து அவர்களிடமிருந்த காட்டுப்பன்றியின் உடல் மற்றும் 2 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனச்சரகர் பழனிகுமரன் வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பொன்னுசாமி, கருணாநிதி ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. ஒரு லட்சம் விதித்து வசூல் செய்தனர்.
- ரூ.4.90 லட்சம் செலவில் புதிய தெரு விளக்குகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது.
- பெரம்பலூர் நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அவரவர் வார்டுகளுக்கு சாலை, குடிநீர், கழிப்பிடம், பொது சுகாதார வளாகம், மழைநீர் வடிகால், புதை சாக்கடை மராமத்து, மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ரூ.4.90 லட்சம் செலவில் பழுதடைந்த தெரு விளக்குகளுக்கு பதிலாக புதிய தெருவிளக்குகள் அமைத்தல், விரிவாக்கப்பகுதிகளில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொண்டு நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும், நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களை செப்பனிட்டு தகுதி சான்றுகள் பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
- மாவட்ட கண்காணிப்பு அலுவர் மேற்கொண்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில் மேஷ்ராம், கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தையும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தையும், பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.






