என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கருணை தொகை வழங்காததை கண்டித்து பெரம்பலூர் கோவில் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
    • இதில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு கருணை தொகை தராததை கண்டித்து கோயில் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 3 ஆயிரம் கருணைத்தொகை வழங்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டு அனைத்து கோயில் இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

    இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசு கருணை தொகை ரூ. 3 ஆயிரம் பொங்கல் திருநாளைக்கு முன்பே வழங்கப்பட்டது.ஆனால் பெரம்பலூரில் உள்ள அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் பணிபுரியும் எழுத்தர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், பட்டாச்சாரியார், உதவி பட்டாச்சாரியார், குருக்கள், பரிஜாகர், அன்னதான பணியாளர், காவலர், மண்டப காவலர், இரவு நேர காவலர் ஆகிய பணியில் உள்ள 14 பேருக்கு பொங்கல் பரிசு கருணை தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து பல முறை கருண தொகை வழங்க கேட்டும் கோயில் செயல் அலுவலர் வழங்கவில்லையாம்.

    இதனால் ஆத்திரமடைந்த கோயில் பணியாளர்கள் நேற்று பெரம்பலூர் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவில் அலுவலகம் முன்பு எழுத்தர் ரவி தலைமையில் 3 பெண் அலுவலர்கள் உட்பட 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பொங்கல் பரிசு கருணை தொகையை உடனே வழங்கவேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.




    • எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது
    • இதில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு விசாரணை மனு முகாம் நடந்தது.எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து சிறப்பு விசாரணை மனு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், பாண்டியன், டிஎஸ்பிக்கள் தங்கவேல், வளவன், ஜனனிபிரியா, பழனிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் மனுவினை பெற்று விசாரணை நடத்தினர். முகாமில் 24 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன்கனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முகாமின்போது மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை பார்த்த எஸ்பி ஷ்யாம்ளாதேவி எழுந்து சென்ற அவரிடம் மனு பெற்று உடனடியாக விசாரணை செய்து தீர்வு காண போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • தேர்ந்தெடுப்போருக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி வழங்கப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேருயுகேந்திரா மூலம் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளையோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மூலம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேசிய இளையோர் தொண்டர் பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்படவுள்ளது.

    குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 29 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் மாத தொகுப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் மட்டும் வழங்கப்படும். தேர்ந்தெடுப்போருக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி வழங்கப்படும்.தகுதியும், விருப்பமும் உள்ள இருபாலரும் www.nyks.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அல்லது பெரம்பலூர் நான்குரோடு, மாவட்ட இளையோர் அலுவலகம், நேருயுவகேந்திரா அலுவலகத்தில் விண்ணப்பித்தினை பெற்று பூர்த்தி செய்து வரும் 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் தகவலுக்கு 04328- 296213, செல்நம்பர் 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.





    • பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளியில் மூளைத்திறன் போட்டி நடைபெற்றது
    • இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் மேம்படவும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் ப்ரைன் கேம் போட்டி நடந்தது.கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், கலந்துகொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் ஒரு குழந்தையை தேர்ந்து எடுத்து ஸ்மாட் வாட்ச் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


    • 2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர்(பால்வளம்) சிவக்குமார்:- பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் இயங்கிவரும் 197 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளுர் தேவைக்காக சுமார் 19 ஆயிரத்து 300 லிட்டர் போக மீதமுள்ள பால், 11 பால் குளிர்வு மையங்களில் தலா 5 ஆயிரம் லிட்டர் வீதம் 55 ஆயிரம் லிட்டர் பால் குளிர்விக்கப்பட்டு, சென்னை பெருநகர தேவைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. பாட்டிலில் பால் விற்பனை செய்வது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

    • லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி உத்திரவின்படி, மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தெப்பக்குளத்திற்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளமாநில லாட்டரி சீட்டுகளை விற்கப்படுவதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்ற பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த தங்கவேலை(வயது 65) கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற அரணாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்த குணசேகரனை(64) போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.




    • தனியார் பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
    • இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் 2 தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று முன்தினம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள், டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரும்பாவூரில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.
    • நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். கடந்த 2021-22-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 28 ஆயிரத்து 865 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    நடப்பாண்டில் இதுவரை 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்காக ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா அடங்கல், பட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றின் 2 பிரதிகளோடு நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.


    • லாரி டியூப்களில் அடைத்து சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் வெங்கனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்கனூர் ஆற்றங்கரை அருகே பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த வேலுசாமி(வயது 33) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து வேலுசாமியை பிடித்த போலீசார், அவர் விற்பனைக்காக லாரி டியூப்களில் வைத்திருந்த 300 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சாராயத்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் அந்தப் பகுதியிலேயே கீழே ஊற்றி அழித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலுசாமியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பெரம்பலூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யபட்டனர்
    • . இது குறித்த தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று தப்பி சென்ற வழிப்பறி திருடர்களை பிடித்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ரோவர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபு (வயது41). இவர் காமராஜர் வளைவு அருகே செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பிரபு கடையை திறக்க டூவிலரில் எளம்பலூர் சாலை வழியே வந்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 பேர் பிரபுவை வழிமறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவரது பையிலிருந்த 500 ரூபாய், செல்போன் மற்றும் டூவிலரையும் பறித்துக்கொண்டு அதிவேகமாக தப்பி சென்றனர்.

    இது குறித்த தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று தப்பி சென்ற வழிப்பறி திருடர்களை பிடித்தனர். பின்னர் விசாரணையில் அவர்கள் மேரிபுரத்தை சேர்ந்த விஜயேந்திரன் மகன் ஹரிஹரன் (47), சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, முண்டலாம்பட்டியை சேர்ந்த ராமன் மகன் ரமேஷ் (எ) கருணாகரன் (40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து டூவிலர், செல்போன், மற்றும் 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 டூவிலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ஹரிஹரன், கருணாகரன் ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


    • பெரம்பலூரில் இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி நடைபெற்று வருகிறது
    • வகுப்பில் கலந்து கொள்ள சமஸ்கிருதம் முன்பே அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

    பெரம்பலூர்:

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் சமஸ்கிருத மொழியில் பேச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூரில் நடைபெற்று வருகிறது. அதற்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக திருச்சி சமஸ்கிருத பாரதி குழுமம் நடத்தி வருகிறது. பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தினமும் 2 மணி நேரம் வீதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    வகுப்பில் கலந்து கொள்ள சமஸ்கிருதம் முன்பே அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. 13 வயதிற்கு மேற்பட்ட திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 94437 22042 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    • பெரம்பலுாரில் பள்ளி சமையல் பாத்திரங்கள் திருட்டு போனது
    • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாத்திரம் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியம், திருமாந்துறை கிராமத்தில் டி.ஈ.எல்.சி. மான்ய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 35- மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான சத்துணவு கூடம் உள்ளது. அங்கு இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக சிவசங்கரி (வயது 39 ) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி அன்று சமையலறையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

    சனி,ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் திங்கள் கிழமை நேற்று காலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது சமையலறை பூட்டு உடைக்கப்பட்டு சமையல் செய்யும் பெரிய பாத்திரங்கள் மற்றும் பொருட்கள். திருடு போய் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மங்களமேடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாத்திரம் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, வாடகை பாத்திரத்தில் உணவு சமைக்கப்பட்டு வருகிறது.

    ×