என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சேவையை வழங்க கலெக்டர் அறிவுறுத்தினார்
- மருத்துவமனையில் போதிய அளவில் குடிநீர் வசதி, கூடுதல் கழிவறை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் கற்பகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறுகையில், மருத்துவமனையில் போதிய அளவில் குடிநீர் வசதி, கூடுதல் கழிவறை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விபத்து மற்றும் அவசர காலத்தில் வருபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிறப்பான மருத்துவ சேவைகள் வழங்க வேண்டும் என்றார். ஆய்வின்போது மருத்துவமனையின் இருக்கை அலுவலர் டாக்டர் சரவணன், தேசிய சுகாதார திட்ட டாக்டர் அன்பரசு மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது
- இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வ.கீரனூரை சேர்ந்தவர் மணி(வயது 82). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் குன்னம் போலீஸ்நிலையத்தில் மணி மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுந்தர்ராஜன் ஆஜரானார்.இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று நீதிபதி முத்துகுமாரவேல் தீர்ப்பு கூறினார். அதில், மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணியை போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.
- விவசாய நிலம் வாங்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது
- இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான http://application.tahdco.com., http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, அவர்கள் சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி இந்த ஆண்டு 200 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த விவசாய தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையிலும் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். மேலும் நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான http://application.tahdco.com., http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் மற்றும் துரிதமின் இணைப்பு திட்டம் ஆகிய விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு மானியம் பெற்று பயனடைந்த பயனாளிகள், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் "ஒருதுளி அதிகப்பயிர்" திட்டத்திலும் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலைதுறையை அணுகுமாறு தாட்கோ மேலாண்மை இயக்குனரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- குன்னம் அருகே அறுவடை செய்யப்பட்ட 100 மூட்டை மக்காச்சோளம் தீயில் எரிந்து நாசமானது
- பக்கத்தில் தட்டைகளுக்கு வைத்த தீ பரவியதால் விபரீதம்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மற்றும் வேப்பந் தட்டை தாலுகா பகுதிகளில் விவசாயிகள் பல்லாயிரக் கணக்கா ன ஏக்க–ரில் மக் காச்சோளம் பயி–ரிட்டுள்ள–னர். தற்போது அந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களாக அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடு–பட்டு வருகின்றனர்.இந்தநிலையில் பெரம்ப–லூர் மங்களம் கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55) என்பவர் அந்த பகுதி–யில் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து 100 மூட் டைகளில் கட்டி வயல்வெளி–யில் பாதுகாப்பாக வைத்தி–ருந்தார்.இதற்கிடையே நேற் றைய தினம் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அறுவடைக்குப் பின் தோட்டத்தில் கிடந்த உதிரிகள் மற்றும் சோள தட்டைகளை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது.இதில் எதிர்பாராத விதமாக அந்த தீ ஆறுமு–கத்தின் தோட்டத்தி–லும் பரவியுள்ளது.
உடனடியாக மங்களமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருந்தபோதிலும் அறு–வடை செய்து 100 மூட்டை–களில் கட்டி வைத்திருந்த முத்துச்சோளம் முழுவதும் தீக்கிரையானது. இது தொடர்பாக ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பக் கத்து தோட்ட விவசாயி செந்தில்குமாரிடம் விசா–ரணை நடத்தி வருகிறார்.அறுவடை செய்து தோட் டத்தில் வைத்திருந்த 100 மூட்டை மக்காச்சோள பயிர் கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட விவசாயி நஷ்டஈடு கோரியுள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுக்க 1.20 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது
- பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி போட்டு பயன்பெற கால்நடை வளர்ப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மூன்றாம் சுற்றாக கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையால், குழுக்கள் அமைக்கப்பெற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டம் வரும் 21 ந் தேதி வரை கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முழுவதும் இலவசமாக போடப்படுகிறது.இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாத வயதிற்கு மேலுள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் கறவை மாடுகள், எருதுகள், காளைகள், எருமையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூரில் பள்ளி நலக்கல்வி திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது
- பயிற்சிக்கு கிராமாலயா முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிறுவனர் தாமோதரன் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பள்ளி நலக்கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது.திருச்சி கிராமாலயா சார்பில் பள்ளி நலக்கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பெரம்பலூரில் இரண்டு நாள் நடந்த பயிற்சிக்கு கிராமாலயா முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிறுவனர் தாமோதரன் தலைமை வகித்தார்.மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைராஜன், அண்ணாதுரை, சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பயிற்சியை தொடங்கிவைத்து பேசினார்.
மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் கலந்துகொண்டு பள்ளி சுகாதார நல கல்வி திட்டத்தின் கீழ் தன் சுத்தம், வகுப்பறை சுத்தம், வீட்டு சுத்தம், நோய்வாய்ப்பட்டு இருக்கும் இடத்தில் சுத்தம், சுற்றுபுற சுத்தம் ஆகிய 5 தலைப்பின் கீழ் விரிவாக பயிற்சி அளித்தார். மேலும் செயல்முறை விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டது.இதில் உதவி தொடக்க அலுவலர் ரமேஷ், ஜெயசங்கர் மற்றும் பெரம்பலூர், ஆலத்தூர்,வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க, நடுநிலை ஆசிரியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி சுகாதார நல கல்வியாளர் ஆனந்தி வரவேற்றார். சுகாதார நல கல்வியாளர் மீராலட்சுமி நன்றி கூறினார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் கோபி (வயது 23). இவர் கடந்த 28-ந் தேதி கள்ளபட்டியில் இருந்து கீரிப்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் சென்றதால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் கோபி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலக அலுவலகத்தை 04328-296213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
பெரம்பலூர்:
இந்திய அரசு, இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய அரசு, இளையோர்களின் வளங்களையும், திறன்களையும் ஒருங்கிணைத்து தேச நிர்மாணப்பணியில் ஈடுபடும் பொருட்டு தன்னார்வ இளையோர் குழுக்களை உருவாக்க எண்ணுகிறது.
அதன்படி சுகாதாரம், கல்வி, பாலின பாகுபாடு போன்ற சமூக பிரச்சினைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், பிரசாரங்களையும் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அவசர காலத்தில் நிர்வாகத்திற்கு உதவவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் தாங்கள் அழைக்கப்படலாம். கல்வி தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.4.2023 அன்று 18 முதல் 29 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (மாணவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்).
மதிப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் (அதிகப்பட்சம் 2 ஆண்டுகளுக்கு) மட்டும் வழங்கப்படும். இப்பணியினை அரசு நிரந்தர பணியாக சட்டப்படி கோர இயலாது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள முகவரி www.nyks.nic.in-ல் திட்டத்தின் முழு விவரங்களையும், விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து அல்லது பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட இளையோர் அலுவலர் அலுவலகத்தில் நேரில் பெற்று, வருகிற 9-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலக அலுவலகத்தை 04328-296213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர்-அரியலூர் சாலையில் கவுல்பாளையத்தில் ஒரு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே முதியவர் ஒருவர் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் முழுக்கை சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புத்தகங்களை நண்பர்களாக்கினால் உயர்ந்த நிலையை அடையலாம் என தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி விழாவில் பல்கலைக்கழக வேந்தர் செல்வம் பேசினார்
- பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் நிதியியல் ஆய்வுகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் நிதியியல்துறை மற்றும் ஸ்மார்ட் ஜெர்னல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் ஆகியவை இணைந்து பன்னாட்டு கருத்தரங்கை நடத்தியது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்து, கருத்தரங்கம் தொடர்பான குறுந்தகட்டினை வெளியிட அதனை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் பெற்று கொண்டார்.
செயலாளர் நீல்ராஜ் முன்னிலை வகித்தார்.இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் பேசும் போது, மாணவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும். மொழி புலமை இருந்ததால்தான் முழுமையான கல்வியறிவு பெற்றவர்களாகவும், பல புதுமையான படைப்புகளை படைக்க முடியும். புதுமையான படைப்புகளை உருவக்குவர்களுக்கு மட்டுமே வரலாற்றில் இடம் கிடைக்கும். மாணவர்கள் புத்தகங்களை நண்பர்களாக்கி கொண்டால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும் .
அது மட்டும் இல்லாமல் அன்றாட உலக நிகழ்வுகளை தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என தெரிவித்தார்.கேரளா, திருச்சூர் வேளாண்மை பல்கலைக்கழக கூட்டுறவு வங்கி மற்றும் மேலாண்மை துறை தலைவர் வீரக்குமரன், மலேசியா பல்கலைக்கழக தொழில் நுட்பம் மாராவின் வணிக மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் வீரபாண்டியன், டாக்டர் அஹ்மத் ரைஸ் முகமது மொக்தார் ஆகியோர் பேசினர். இதில் டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றம் 700க்கு மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் முதல்வர் உமாதேவி பொங்கியா வரவேற்றார். முடிவில் கல்வி சார் டீன் தீபலெட்சுமி நன்றி கூறினார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
- இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dtcponline.tn.gov.in/eduins/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பெரம்பலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமையும்திட்ட மில்லாப்பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடந்த 2022 ஜூன் மாதம் 24ம்தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில் மேலும் ஒரு வாய்ப்பாக அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற வரும் ஜூன் மாதம் 30ம்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dtcponline.tn.gov.in/eduins/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இவை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்தி க்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- பத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தீ மீதி திருவிழா கோவில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், விரதமிருந்த பக்தர்கள் கவுல்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தி பரவசத்துடன் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பக்தர்கள் தங்களது குழந்தையை சுமந்து கொண்டு தீ மிதித்தனர்.
இதில் கவுல்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் கோவிலில் கிடா வெட்டும், இரவில் விநாயகர் கோவிலில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தியும், மா விளக்கு எடுத்தும் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






