என் மலர்
நீலகிரி
கொரோனா பரவலை தடுக்க தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று கூடலூரில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காலை 6 மணி முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என நகராட்சி அலுவலர்கள் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர்.
அப்போது கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர். அங்கு திறந்திருந்த மருந்து கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சென்று சோதனை செய்தனர். தொடர்ந்து நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் மருந்து கடை நடத்தப்படுவதாக கூறி சீல் வைத்தனர். அப்போது கடை உரிமையாளருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு அந்த பகுதியில் உள்ள மருந்து கடை வியாபாரிகள் வந்தனர். பின்னர் மருந்து கடைக்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீரென கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசிங் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருந்துக்கடைகள் நடத்துவதற்கு துறை ரீதியாக உரிமங்கள் பெறப்பட்டுள்ளது. நகராட்சியிடம் உரிமம் பெற வேண்டியதில்லை என தெரிவித்தனர். மேலும் சீல் வைத்த கடையை திறந்ததால் மட்டுமே மற்ற கடைகளை திறப்போம் என்றும் கூறினர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் கடைக்கு வைத்த சீலை அகற்றினர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்து வாங்க வந்த பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர அனுமதி இல்லாததாலும் சாலைகள் மற்றும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வனப்பகுதியைவிட்டு வெளியே வந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளன.
கோத்தகிரி அரவேனு பகுதியில் இருந்து மூணுரோடு செல்லும் சாலையில், பனகுடி கிராமத்தில் ராமன் என்பவர் வீடு உள்ளது. இந்த நிலையில் ராமன் வீட்டிற்குள் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கரடி ஒன்று புகுந்தது. தொடர்ந்து அந்த கரடி வீட்டில் உணவு எதேனும் உள்ளதா என்று சுற்றி சுற்றி பார்த்தது. பின்னர் அந்த கரடி அங்கிருந்து சென்றனது. கரடி வீட்டிற்குள் புகுந்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த காட்சி ராமன் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கோத்தகிரி பகுதியில் பகல் நேரங்களில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில் நடைபெறும் தேயிலை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்றன. ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு தேயிலை தூளை கொள்முதல் செய்கின்றனர்.
விற்பனை எண் 19-க்கான ஏலம் கடந்த 13 மற்றும் 15-ந் தேதிகளில் நடைபெற்றது. 14-ந் தேதி வெள்ளிக்கிழமை ரம்ஜான் பண்டிகை என்பதால், மறுநாள் ஏலம் நடந்தது.
ஏலத்திற்கு மொத்தம் 22 லட்சத்து 89 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் 15 லட்சத்து 81 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சத்து 8 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் பிரித்து ஏலம் விடப்பட்டது. இதில் 80 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. ஏலத்தில் அனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.4 விலை உயர்ந்தது.
ஏலத்தில் மொத்தம் 18 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலை தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.22 கோடியே 72 லட்சம் ஆகும். இதில், அதிகபட்சமாக சி.டி.சி. தேயிலை தூள் ஒரு கிலோ ரூ.245-க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூள் ஒரு கிலோ ரூ.301-க்கும் ஏலம் போனது.
சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.100 முதல் ரூ.103 வரையும், உயர்ந்த வகை தேயிலை தூள் ரூ.160 முதல் ரூ.191 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை ஒரு கிலோ ரூ.105 முதல் ரூ.111 வரையிலும், உயர்ந்த வகை தேயிலை தூள் ஒரு கிலோ ரூ.161 முதல் ரூ.206 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
விற்பனை எண் 20-க்கான ஏலம் நாளை மறுநாளும் (வியாழக்கிழமை), 21-ந் தேதியும் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 24 லட்சத்து 3 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது. இந்த தகவலை குன்னூர் ஏல மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.
கூடலூர் தாலுகாவில் பலத்த சூறாவளி காற்றுடன் நேற்று முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், ஆங்காங்கே தேங்கியும் நின்றது. தொடர் மழையால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
பந்தலூர், ஏலமன்னா, கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி, அய்யன் கொல்லி, எருமாடு, பாட்டவயல், அம்பலமூனா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதியடைந்தனர்.
சேரம்பாடி அருகே பாலாவடி குடியிருப்பு பகுதியில் கொட்டி தீர்த்த மழைக்கு சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு நடைபாதை இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு வனப்பகுதிகளில் உள்ள பல ராட்சத மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர், கோத்தகிரி சாலையில் மூனுரோடு பகுதியிலும், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியிலும் சிறிய அளவிலான மரங்கள் சாலையில் விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் உடனடியாக அகற்றினர். இதன் காரணமாக அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி விட்டனர். இந்த மழை காரணமாக விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குன்னூர்:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து அந்த பகுதியே இருளாக காணப்பட்டது. மாலையில் சிறது நேரம் லேசான சாரல் மழை பெய்தது.
இரவு 9.30 மணியளவில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓட்டுபட்டரை, பர்லியார், அருவங்காடு, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சூறாவளி காற்று வீச தொடங்கியது. வீட்டிற்கு வெளியில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் காற்றில் பறந்தது.
சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய கொட்டி தீர்த்த மழைக்கு குன்னூர் பஸ் நிலைய பகுதி, நகராட்சி மார்க்கெட், வண்டிச்சோலை உள்ளிட்ட அனைத்து சாலைகள் மற்றும் நகரத்தில் உள்ள முக்கிய தெருக்களில் எல்லாம் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் அங்குள்ள மக்கள் மிகவும் அவதியடைந்தனர். இரவில் ஆரம்பித்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது.
சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு வண்டிச் சோலை, ஆழ்வார்பேட்டை, டானிங்டன் பிரிட்ஜ், மாடல் அவுஸ் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 20-க்கும் அதிகமான வீடுகளில் மேற்கூரைகள் காற்றில் பறந்து தெருவில் வந்து விழுந்தன.
தொடர் மழையால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இரவு முதல் தற்போது வரை மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மரம் ஒன்று இந்த மழைக்கு முறிந்து நடுரோட்டில் விழுந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் வரவில்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.
கோத்தகிரி, கோடநாடு, சோலூர், கீழ் கோத்தகிரி, கட்டபெட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே மிதமான மழை பெய்து வருகிறது.
மஞ்சூர் மற்றும் சுற்றியுள்ள கிண்ணக்கொரை பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு கிண்ணக்கொரை- மஞ்சூர் சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மாவட்டத்தில் அதிக பட்சமாக கிண்ணக்கொரையில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இரவு 10 மணியில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
நஞ்சுண்டாபுரம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், கோவை விமானநிலையம், ரேஸ்கோர்ஸ், வடவள்ளி, ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட், காந்திபுரம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் கோவையில் இதமான காலநிலை நிலவி வருகிறது.
வால்பாறையில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் ஊரடங்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் வால்பாறை நகரமே வெறிச்சோடி கிடந்தது. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சோலையார், நீரார், சின்னக் கல்லார் உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கிண்ணக்கொரை-100, கெத்தை-52 ஊட்டி-34, குன்னூர்-30.5, எமரால்டு-28, குந்தா-39, அவலாஞ்சி-32, அப்பர் பவானி-25, நடுவட்டம்-20, கோத்தகிரி-11, பர்லியார்-19.
நகராட்சி பகுதியில் பரவும் கொரோனா விவரம், ஆம்புலன்ஸ், மருந்து-மாத்திரைகள் போன்ற தேவைகளுக்கு 0423-2230201 என்ற தொலைபேசி எண்ணுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. இப்பகுதியை சேர்ந்தவர் நடராஜ். தோட்டத்தொழிலாளியான இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது பசுமாடு ஒன்று குடியிருப்பை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது.
அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று பசுமாட்டின் மீது பாய்ந்து அதை கடித்து குதறியது. சிறுத்தையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு திரும்பாததை கண்டு நடராஜ் மாட்டை தேடி சென்றுள்ளார். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே சிறுத்தையால் கொல்லப்பட்ட மாட்டின் உடல் கிடந்துள்ளது. இதை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து கால்நடை மருத்துவர் ராஜமுரளி தலைமையிலான மருத்துவகுழுவினர் மாட்டின் உடலை பிரேதபரிசோதனை நடத்தினார்கள். சிறுத்தையால் கொல்லப்பட்ட மாடு சினையாக இருந்துள்ளது சுமார் 10நாட்களில் குட்டியிடும் நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் தனக்கு சொந்தமான 5மாடுகள் சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக நடராஜ் கவலையுடன் தெரிவித்தார்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளிலும் நாளுக்குநாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இதில் காய்கறி, மளிகை, உள்ளிட்ட குறிப்பிட்ட கடைகள் பகல் 12மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கடைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மஞ்சூர் பகுதியில் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளுடன் அனுமதி மறுக்கப்பட்ட சில கடைகள், நிறுவனங்கள் பாதி அளவு திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனால் பஜார் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டதுடன் கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளியை மறந்து நடமாடினார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் நேற்று குந்தா தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் துணை வட்டாட்சியர் கனிசுந்தரம் உள்ளிட்ட வருவாய்துறையினர் மஞ்சூர் பஜாரில் திடிர் சோதனை மேற்கொண்டார்கள்.
அப்போது கடைவீதியில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை கண்டு எச்சரித்து அனுப்பினார்கள்.
தொடர்ந்து சில கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்குவதை கண்டு சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டுமே திறக்க வேண்டும். திறக்கப்படும் கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தாசில்தார் மகேஸ்வரி எச்சரித்தார்.
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் தேயிலை விவசாயம், மலைக்காய்கறிகள் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
குறிப்பாக மலைக்காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளை கிழங்கு, பிரக்கோலி, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவற்றை ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள். இங்கு விளையும் மலை காய்கறிகள் அனைத்தும் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலைக் காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பிரக்கோலி, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவற்றை சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் நீலகிரி மலைக் காய்கறிகளுக்கான வியாபாரம் பெரிதும் சரிந்துள்ளது.
ஊரடங்குக்கு முன்பு ஒரு நாளைக்கு இங்கிருந்து 20 டன் மலைக் காய்கறிகள் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் விலை குறைவு காரணமாக மலைக் காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலையும் உருவாகி உள்ளது. தற்போது சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மலைக்காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் தேக்கம் அடைந்துள்ளன.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,
நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசம் என்பதால் இங்குள்ள கடைகள் அனைத்துமே 10 மணிக்கு பிறகு தான் திறக்கப்படும். அதற்கு பிறகு தான் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அந்த விற்பனையில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.
தற்போது 12 மணி வரை மட்டுமே கடை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு கடை திறந்து வெறும் 2 மணி நேரத்தில் கடையை மூட வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து குறைந்த அளவே காய்கறிகள் மார்க்கெட்டிற்கு வருகிறது. தற்போது மார்க்கெட்டில் 50 சதவீத வியாபாரம் மட்டுமே நடக்கிறது. காய்கறிகள் வரத்து தான் குறைவு என்றால் விலையும் வெகுவாக குறைந்து விட்டது.
கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரையே விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் ரூ.15 முதல் 20 வரையும், உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.35 வரையும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.10க்கும், மலைப்பூண்டு ரூ.60 முதல் ரூ.70 வரையும், பீன்ஸ் ரூ.20 முதல் 50 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பனியர், காட்டு நாயக்கன் உள்ளிட்ட 6 வகை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 ஆயிரத்து 32 பேர் உள்ளனர். இதில் 8,779 பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள். மீதமுள்ள 12 ஆயிரத்து 656 பேர் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் ஆவர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி குறித்த அச்சத்தால் அவர்கள் அதனை செலுத்துவதில் தயக்கம் காட்டி வந்தனர்.
சிறியூர், ஆனைக்கட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் சென்ற போது அவர்கள் தடுப்பூசி செலுத்த பயந்தனர்.
கொரோனா முதல் அலையின்போது பழங்குடியின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், 2-வது அலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பழங்குடியின மக்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தொகை ரீதியாக குறைவாக உள்ள அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினருடன் நேரடியாக ஆனைகட்டி கிராமத்திற்கு சென்றார். அங்கு தடுப்பூசி முகாமை நடத்தி அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அந்த மக்கள் தடுப்பூசி போட முன்வந்தனர். உடனடியாக அங்கு வசிக்க கூடிய 45 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அப்போது கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், பழங்குடியின மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் தயக்கங்கள் உள்ளன. இதில் தயக்கத்திற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து தடுப்பூசி போடப்படுகிறது. எனவே பழங்குடியின மக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். பழங்குடியின மக்கள் தங்கள் பகுதிகளில் திருவிழாக்கள், சுபகாரியங்கள் போன்ற நிகழ்வுகளை தங்களது குடும்பத்தினருடன் மட்டுமே செய்து கொள்வது நல்லது. அனைவரையும் அழைத்து விழா நடத்தும் போது தொற்று எளிதாக பரவுகிறது. எனவே சுபகாரியங்களை மிக எளிமையாக நடத்த வேண்டும் என்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 வட்டங்களிலும் நகர் புறங்களை விட கிராமப் புறங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின் கிராமப்புறங்களில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நகர் புறங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி, கூடலூர் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா தொற்றினால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணி க்கையும் அதிகரித்துள்ளது.
ஊட்டியில் இதுவரையிலும் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட கலனில் மட்டுமே ஆக்சிஜன் சேமித்து வைக்கப்படுகிறது.
தொற்று பாதித்தோரின் உடல் நிலைக்கு ஏற்ப நாளொன்றுக்கு 2 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ஆக்சிஜன் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசின் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற்று 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வைக்க தளம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதையடுத்து சென்னையில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணிகளும், குழாய்கள் மூலம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஊட்டி அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 110 லிருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 569 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 4 லட்சத்து 27,579 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






