search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நீலகிரியில் விடிய, விடிய கொட்டிய கனமழை

    கூடலூர் தாலுகாவில் பலத்த சூறாவளி காற்றுடன் நேற்று முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கூடலூர்:

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.

    கூடலூர் தாலுகாவில் பலத்த சூறாவளி காற்றுடன் நேற்று முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், ஆங்காங்கே தேங்கியும் நின்றது. தொடர் மழையால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

    பந்தலூர், ஏலமன்னா, கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி, அய்யன் கொல்லி, எருமாடு, பாட்டவயல், அம்பலமூனா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதியடைந்தனர்.

    சேரம்பாடி அருகே பாலாவடி குடியிருப்பு பகுதியில் கொட்டி தீர்த்த மழைக்கு சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு நடைபாதை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு வனப்பகுதிகளில் உள்ள பல ராட்சத மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர், கோத்தகிரி சாலையில் மூனுரோடு பகுதியிலும், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியிலும் சிறிய அளவிலான மரங்கள் சாலையில் விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் உடனடியாக அகற்றினர். இதன் காரணமாக அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி விட்டனர். இந்த மழை காரணமாக விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என மக்கள் தெரிவிக்கின்றனர். 

    Next Story
    ×