search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நீலகிரி, வால்பாறையில் சூறாவளி காற்றுடன் கனமழை

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மரம் ஒன்று மழைக்கு முறிந்து நடுரோட்டில் விழுந்தது.

    குன்னூர்:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து அந்த பகுதியே இருளாக காணப்பட்டது. மாலையில் சிறது நேரம் லேசான சாரல் மழை பெய்தது.

    இரவு 9.30 மணியளவில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓட்டுபட்டரை, பர்லியார், அருவங்காடு, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சூறாவளி காற்று வீச தொடங்கியது. வீட்டிற்கு வெளியில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் காற்றில் பறந்தது.

    சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய கொட்டி தீர்த்த மழைக்கு குன்னூர் பஸ் நிலைய பகுதி, நகராட்சி மார்க்கெட், வண்டிச்சோலை உள்ளிட்ட அனைத்து சாலைகள் மற்றும் நகரத்தில் உள்ள முக்கிய தெருக்களில் எல்லாம் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் அங்குள்ள மக்கள் மிகவும் அவதியடைந்தனர். இரவில் ஆரம்பித்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது.

    சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு வண்டிச் சோலை, ஆழ்வார்பேட்டை, டானிங்டன் பிரிட்ஜ், மாடல் அவுஸ் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 20-க்கும் அதிகமான வீடுகளில் மேற்கூரைகள் காற்றில் பறந்து தெருவில் வந்து விழுந்தன.

    தொடர் மழையால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இரவு முதல் தற்போது வரை மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மரம் ஒன்று இந்த மழைக்கு முறிந்து நடுரோட்டில் விழுந்தது.

    தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் வரவில்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.

    கோத்தகிரி, கோடநாடு, சோலூர், கீழ் கோத்தகிரி, கட்டபெட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே மிதமான மழை பெய்து வருகிறது.

    மஞ்சூர் மற்றும் சுற்றியுள்ள கிண்ணக்கொரை பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு கிண்ணக்கொரை- மஞ்சூர் சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக கிண்ணக்கொரையில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இரவு 10 மணியில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    நஞ்சுண்டாபுரம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், கோவை விமானநிலையம், ரேஸ்கோர்ஸ், வடவள்ளி, ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட், காந்திபுரம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் கோவையில் இதமான காலநிலை நிலவி வருகிறது.

    வால்பாறையில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் ஊரடங்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் வால்பாறை நகரமே வெறிச்சோடி கிடந்தது. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சோலையார், நீரார், சின்னக் கல்லார் உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கிண்ணக்கொரை-100, கெத்தை-52 ஊட்டி-34, குன்னூர்-30.5, எமரால்டு-28, குந்தா-39, அவலாஞ்சி-32, அப்பர் பவானி-25, நடுவட்டம்-20, கோத்தகிரி-11, பர்லியார்-19.

    Next Story
    ×