search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரட்
    X
    கேரட்

    நீலகிரியில் செடியிலேயே அழுகும் மலைக்காய்கறிகள்- விவசாயிகள் கவலை

    தற்போது மார்க்கெட்டில் 50 சதவீத வியாபாரம் மட்டுமே நடக்கிறது. காய்கறிகள் வரத்து தான் குறைவு என்றால் விலையும் வெகுவாக குறைந்து விட்டது.
    ஊட்டி:

    இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் தேயிலை விவசாயம், மலைக்காய்கறிகள் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.

    குறிப்பாக மலைக்காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளை கிழங்கு, பிரக்கோலி, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவற்றை ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள். இங்கு விளையும் மலை காய்கறிகள் அனைத்தும் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலைக் காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பிரக்கோலி, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவற்றை சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் நீலகிரி மலைக் காய்கறிகளுக்கான வியாபாரம் பெரிதும் சரிந்துள்ளது.

    ஊரடங்குக்கு முன்பு ஒரு நாளைக்கு இங்கிருந்து 20 டன் மலைக் காய்கறிகள் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் விலை குறைவு காரணமாக மலைக் காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலையும் உருவாகி உள்ளது. தற்போது சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மலைக்காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் தேக்கம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,

    நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசம் என்பதால் இங்குள்ள கடைகள் அனைத்துமே 10 மணிக்கு பிறகு தான் திறக்கப்படும். அதற்கு பிறகு தான் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அந்த விற்பனையில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

    தற்போது 12 மணி வரை மட்டுமே கடை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு கடை திறந்து வெறும் 2 மணி நேரத்தில் கடையை மூட வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து குறைந்த அளவே காய்கறிகள் மார்க்கெட்டிற்கு வருகிறது. தற்போது மார்க்கெட்டில் 50 சதவீத வியாபாரம் மட்டுமே நடக்கிறது. காய்கறிகள் வரத்து தான் குறைவு என்றால் விலையும் வெகுவாக குறைந்து விட்டது.

    கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரையே விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் ரூ.15 முதல் 20 வரையும், உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.35 வரையும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.10க்கும், மலைப்பூண்டு ரூ.60 முதல் ரூ.70 வரையும், பீன்ஸ் ரூ.20 முதல் 50 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×